சசிகலாவின் அரசியல் ஆட்டம்?
தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ அவ்வப்போது வெளியாகி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியலில் இருந்து விலகுவதாக தேர்தலுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு, தற்போது, அரசியலில் re-entry கொடுக்கும் விதமாக, சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியாவது, அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசிகலாவின் அரசியல் ஆட்டத்தை புரிந்துகொள்ள வேண்டுமானால் கொஞ்சம் பின்னோக்கி பார்க்க வேண்டும். அதிமுகவில் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களின் ஆதிக்கம் அதிகம்.
V.K. சசிகலா என்னும் விவேகானந்தன் கிருஷ்ணவேணி சசிகலா...
விவேகானந்தன், கிருஷ்ணவேணி தம்பதியருக்கு 5வது குழந்தையாக 1953 ஆகஸ்ட் 18ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தார்.
சசிகலாவின் அப்பா, மெடிகல் ஷாப் ஒன்றை திருத்துறைப்பூண்டியில் நடத்தி வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக சசிகலாவின் குடும்பம், மன்னார்குடிக்கு மறியது. பள்ளி படிப்பை முடித்த சசிகலாவை, விளார் கிராமத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு
பெண் கேட்டுள்ளார்கள். நல்ல வரன் என்பதால் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடித்துப்போக நடராஜன், சசிகலா திருமணம் 1973ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இந்த சசிகலா, பின்னர் கருணாநிதிக்கு எதிராக அரசியல் செய்ய போவார் என்பதை, அப்போது யாரும் யூகிக்கவில்லை. சசிகலாவுக்கு அரசியல் பால பாடங்களை கற்றுக்கொடுத்தவர், அவரது கணவர் நடராஜன்.
தஞ்சாவூரை அடுத்துள்ள விளார் கிராமத்தில் பிறந்த நடராஜன்,
தஞ்சைப் பகுதியில் திமுக தளபதிகளில் ஒருவராக இருந்த எல்.கணேசனின் ஆஸ்தான சீடராக வலம் வந்தார். 1960களில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார் நடராஜன்.
பின்பு திமுக ஆட்சியைப் பிடித்தபோது, எல்.கணேசனிடம் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதற்கு கணேசன் " நன்றாக படித்துள்ள நீ அரசியல்வாதி ஆவதை விட, அரசு அதிகாரியாக வருவதே நல்லது" என்று கூறி, திமுக ஆட்சியில் போடப்பட்ட APRO போஸ்டிங்கை வாங்கி கொடுத்துள்ளார்.
அரசியல் தெரிந்த
அரசு அதிகாரியான நடராஜனுடன் house wife- ஆக வாழ்க்கை நடத்திக் கொண்டு இருந்த சசிகலா, அதிமுகவில் நடந்த மாற்றம் அவரது வாழ்க்கையும் மாற்றும் என்று நினைக்கவில்லை.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் 1982-ம் ஆண்டு, நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளராக அறிவித்தார் MGR. இதனையடுத்து,
அம்மாவட்ட ஆட்சியாளராக இருந்த சந்திரலேகாவிடம், அப்போதைய முதலமைச்சராக எம்ஜிஆர் பேசிக்கொண்டு இருந்தபோது, அரசியல் சுற்றுப் பயணத்திற்கு அம்மு உடன் செல்ல நம்பத்தகுந்த ஓர் ஆள் வேண்டும் என்று கேட்டார். இதை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜனிடம் சந்திரலேகா கூற, நடராஜன் தன் மனைவி சசிகலாவை உடன் அனுப்பலாம் என்று பரிந்துரை செய்தார்.
எம்ஜிஆரின் கனவு திட்டமான சத்துணவுத் திட்டத்தின் உயர்மட்ட குழுவிலும் ஜெயலலிதா இடம் பிடித்தார். அவரது தீவிர அரசியல் செயல்பாடுகள் பிடித்துப்போக ஜெயலலிதாவை ராஜ்யசபா எம்பி ஆக்கினார் எம்ஜிஆர்.
தொடர்ந்து ஜெயலலிதா ஏறுமுகத்தில் இருந்த சமயத்தில், கடலூர் கலெக்டராக இருந்த சந்திரலேகா, சென்னைக்கு ட்ரான்ஸ்பரானார், அவருடன் சேர்த்து நடராஜனும் டிரான்ஸ்பர் ஆனார்.
நடராஜன், மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பதால், பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுடன் நல்ல தொடர்பு இருந்தது. வரும் காலங்களில் புகைப் படங்களை விட வீடியோ கேசட்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை உணர்ந்த நடராஜன், தன் மனைவி சசிகலாவுக்கு வீடியோ கேசட் கடை ஒன்றை வைத்துக் கொடுத்தார். ஏற்கனவே, ஜெயலலிதாவுக்கு அறிமுகம் ஆகி இருந்த சசிகலா சென்னைக்கு வந்ததும், ஜெயலலிதாவுடன் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
இந்த சமயத்தில் எம்ஜிஆர்
உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் இருந்தபோது, 1984ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் எம்ஜிஆர் பிரச்சாரம் செய்ய இயலாது என்பதால், எம்ஜிஆர் அளவிற்கு புகழ்பெற்ற தலைவர்கள் யாரும் அதிமுகவில் இல்லை. திரை பிரபலமாகவும் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவை மையப்படுத்தினார் திருநாவுக்கரசர். ஜெயலலிதாவின் பிரசாரத்தை பதிவு செய்யும் வாய்ப்பை, சசிகலாவின் வீடியோ கேசட் நிறுவனம் பெற்று இருந்தது. இதன்மூலம் ஜெயலலிதாவை சசிகலா அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இப்படி ஜெயலலிதா - சசிகலா நட்பு வலுப்பெறத் தொடங்கி இருந்தபோது எதிர்பாராதவிதமாக, 1987ஆம் ஆண்டு, தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் உயிரிழந்தார்.
எம்ஜிஆர் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது, அவரின் தலை அருகே 36 மணி நேரம் ஜெயலலிதா நின்று கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவுக்கும் சில அடிகள் தூரத்திலேயே சசிகலாவும் உடன் இருந்தார். எம்ஜிஆர் உடல் இறுதி ஊர்வலத்திற்காக வண்டியில் ஏற்றப்பட்ட போது, ஜெயலலிதாவும் ஏற முயற்சித்தார். அப்போது, வண்டியில் இருந்து தள்ளிவிடப்பட்டார் ஜெயலலிதா.
அடுத்தகட்டமாக ஜெயலலிதாவை ஓரம் கட்டும் பணி அதிமுகவில் நடைபெற்றது. அப்போது ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக சசிகலா, அவரது வீட்டிற்கு தினந்தோறும் சென்று வர ஆரம்பித்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகியை முதலமைச்சராக்கினார் ஆர்.எம்.வீரப்பன்.
தற்காலிக முதலமைச்சராக இருந்த நெடுஞ்செழியனுக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக, ஜா - ஜெ என்று இரு அணியாக உடைந்து, சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலில் ஜெயலலிதா அணி 32 இடங்களில் வெற்றி பெற்றது. ஜானகி அணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா பாதுகாப்புக்காக சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன், அவரது சகோதரர் திவாகரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். இப்படி ஜெயலலிதாவின் நிழலாக சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மாறினர். ஜானகி அணியும், ஜெயலலிதா அணியும் இணைந்து ஒருங்கிணைந்த அதிமுக மீண்டும் வலுப்பெற தொடங்கியது. ஜானகி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதிமுகவின் தனிப்பெரும் தலைவராக ஜெயலலிதா உருவெடுத்துக் கொண்டு இருந்தபோது, 1990 பிப்ரவரி 23-ம் தேதி பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சசிகலாவும், ஜெயலலிதாவும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரின் முன் இருக்கையில் சசிகலா அமர்ந்திருந்தார். பின் இருக்கையில் ஜெயலலிதா அமர்ந்திருந்தார். கார்
சென்னை மீனம்பாக்கம் பழைய விமானநிலையம் அருகே வந்து கொண்டு இருந்தபோது, காருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த லாரி, காருக்கு பக்கத்தில் வர ஆரம்பித்தது. சிறுது நேரத்தில் காரின் முன் பகுதியை லாரி தாக்கியது. இதில்
காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. சசிகலா, ஜெயலலிதா இருவருக்கும் தலையிலும், கண்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. தேவகி மருத்துவமனையில் சசிகலாவும், ஜெயலலிதாவும் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக சசிகலாவின் கண்ணில் தற்போதும் நீர் வந்துகொண்டே இருப்பதாக கூறுவார்கள். இந்த தகவல் தெரிந்து ராஜீவ் காந்தி, டெல்லியில் இருந்து தேவகி மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவையும், சசிகலாவையும் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சமயத்தில் ஜெயலலிதாவை யார்? யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த சமயங்களில் சந்திக்க வேண்டும் என்பதை, அதே மருத்துவமனையில் தங்கி நடராஜன் கவனித்துக் கொண்டார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய
ஜெயலலிதா, சிறிது காலம் யாரையும் சந்திக்காமல் ஓய்வில் இருந்தார். அந்த சமயத்தில், கட்சியை விட்டு விலகி இருந்த மூத்த தலைவர்களை எல்லாம் நடராஜன் சந்தித்து, கட்சியை வலுப்படுத்தும் காரியங்களில் திரைமறைவில் ஈடுபட்டு வந்தார்.
மாநிலத்தில் இருந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின. பிஆர்ஓவாக இருந்த நடராஜன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதை அப்போதைய திமுக அரசு ஏற்காமல் இருந்த நிலையில், ஆளுநர் ஆட்சி வந்ததும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. திரைக்குப் பின்னால்
முழுநேர அரசியல்வாதியாக மாறினார் நடராஜன்.
இதனிடையே மத்தியில் இருந்த சந்திரசேகர் தலைமையிலான அரசும் கலைக்கப்பட்டதை அடுத்து, தமிழக சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒன்றாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதை ஜெயலலிதாவே முன்னின்று முடிவு செய்தார். ஜானகி அணியில் இருந்த பெரும்பாலானோருக்கு சீட் மறுக்கப்பட்டது. ஜெயலலிதா அணியில் இருந்தவர்கள் மற்றும் சசிகலா, நடராசன் ஆதரவு இருந்தவர்களுக்கே சீட் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் சசிகலா தரப்பு தனது அதிகாரத்தை விஸ்தரித்தது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் எழுந்த அனுதாப அலையில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது. 168 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 164 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அசுர பலத்துடன் அமைந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் நடராஜன், திவாகரன் தலையிடுவதாக புகார் வந்ததை அடுத்து, இருவரையும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தார் ஜெயலலிதா. மேலும் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
இருப்பினும் இந்த சமயத்தில்,
இணை பிரியாத் தோழியாக இருந்த சசிகலா, ஜெயலலிதாவுக்கு உடன் பிறவாச் சகோதரியாகவே மாறிப்போனார். போயஸ்கார்டனில் அதிகார மையங்களில் இருந்து நடராஜன் விலகினாலும், சசிகலாவின் அண்ணன் வினோதகன் தென்பட தொடங்கினார்.
இந்த இடத்தில், சசிகலா உறவினர்கள் யார் யார் என்பதை கொஞ்சம் விரிவாக பார்க்க வேண்டும்.
சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம்,
பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்த்தவர்.. இவரின் மகன் டாக்டர் வெங்கடேஷ். இவர் அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்பு ஏற்படுத்தப்பட்ட போது அதன் மாநில செயலாளராக அமர்த்தப்பட்டார்.
சசிகலாவின் 2வது அண்ணன் டாக்டர் விநோதகன் .. இவரது மகன் டி.வி.மகாதேவன், அதிமுகவின், மாநில அம்மா பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
சசிகலாவின் 3வது அண்ணன் ஜெயராமன். இவர் ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் வேலை பார்த்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனையடுத்து இவரது குடும்பத்தை ஜெயலலிதா, போயஸ் கார்டனில் வைத்து கவனித்து வந்தார். திவாகரன், சசிகலாவின் தம்பி...
சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன் TTV தினகரன். இவரை பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினர், அதிமுகவின் பொருளாளர் என்று பல்வேறு பதவிகளை கொடுத்து ஜெயலலிதா அழகு பார்த்தார். அக்கா வனிதாமணியின் மற்றொரு மகன் சுதாகரனை, ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார்... இப்படி சசிகலாவின் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் திடீரென்று பதவி அளித்து உச்சத்திற்கு கொண்டு வருவதும், அவர்களை ஒரே நாளில் பதவியைப் பிடுங்கி வீட்டுக்கு அனுப்புவதும், ஜெயலலிதா விளையாடும் அரசியல் சதுரங்கத்தில் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் சசிகலா அசைக்க முடியாதவராகவே இருந்தார்.
1996 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஜெயலலிதா, சசிகலா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் சசிகலா அப்ரூவராக மாறினால், வழக்குகளில் இருந்து அவரை விடுவிப்பதாக அதிகாரிகள் மிரட்டினர். எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல் கடைசி வரை தைரியமாக விசாரணையை எதிர்கொண்டார்.
இப்படி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக சசிகலா மாறிப்போனதை அடுத்து, ஜெயலலிதாவின் 2001, 2011, 2016 ஆட்சிக் காலங்களில் சசிகலாவின் பார்வை யார் மீது படுகிறதோ, அவர்கள் பிரதான அமைச்சராகவும் முக்கிய பதவிகளிலும் அமர்த்தப்பட்டனர்.
பெரும் திருப்பமாக, 2011ஆம் ஆண்டு சசிகலா உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை கட்சியை விட்டு அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா. அத்தோடு போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்தும் சசிகலா வெளியேற்றப்பட்டார். பின்னர், சசிகலா, மன்னிப்பு கடிதம் கொடுத்தார்.
அதில், தனக்கு கட்சி, ஆட்சி பதவி மீது ஆசை இல்லை, அக்காவுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்பது மட்டுமே தனது எண்ணம் என்று கூறி இருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக் கொண்டார்.
2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி, டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டது.
உடலை சுற்றி, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். இறுதிச் சடங்கை சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இருவரும் செய்தனர்.
2016-ம் ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு, சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது, இதனையடுத்து தொடர்ந்து பேட்டி கொடுத்த அமைச்சர்கள், கட்சி தலைமை ஒருவரிடமும், ஆட்சி தலைமை மற்றொருவரிடமும் இருப்பது சரியில்லை. ஆகையால் முதலமைச்சர் பொறுப்பையும் சசிகலாதான் ஏற்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்தனர். இதனையடுத்து 2017 பிப்ரவரி 5ஆம் தேதி கூடிய அதிமுக
சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக , சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம்,
பிப்ரவரி 7ஆம் தேதி
ஜெயலலிதா சமாதிக்கு சென்று, திடீரென அங்கு அமர்ந்து தியானம் மேற்கொண்டார். தியானம் முடித்து எழுந்த அவர் பத்திரிக்கையாளர்களிடம்,
தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாகவும்,
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் போக்க, நீதி விசாரணை வேண்டும் என்றும் தெரிவித்தார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில்
சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்கள். பிறகு, அதிமுகவில் இருந்து அந்த பதவியே நீக்கப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில், அதிமுக சட்ட திட்ட விதி எண் 43-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பொதுச்செயலாளருக்கு அளிக்கப்பட்டிருந்த அனைத்து பொறுப்புகளும், அதிகாரங்களும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முழுமையாக வழங்கப்பட்டது.
சிறைத்தண்டனை முடிந்து 2021 ஜனவரி 28ஆம் தேதி வெளியே வந்த சசிகலா, அதிமுகவில் அதிரடி மாற்றங்களுக்கு வித்திடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக மார்ச் முதல் வாரத்தில் அறிக்கை வெளியிட்டார்.
இதுகுறித்து கூறிய அரசியல் விமர்சகர்கள் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தால், அதன் மொத்த பொறுப்பு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியையே சாரும். அப்போது அதிமுக தன்னிடம் வரும் என்று சசிகலா கணக்கு போடுவதாக தெரிவித்தனர்.
தேர்தல் தோல்விக்குப் பிறகும், எந்த அறிக்கையும் விடாமல் இருந்த சசிகலா, தற்போது அமமுக தொண்டர்கள் இடையே போனில் பேசுவதும், அது குறித்த ஆடியோ, சமூக வலைத்தளத்தில் லீக் ஆதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கடந்த ஜூன் 4ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம்,
சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு , ``சசிகலா அதிமுகவில் இல்லை. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அரசியலில் இருந்து விலகி விட்டதாக சசிகலா கூறியுள்ளார். அதனால் அதில் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாததும், சசிகலாவின் ஆடியோவும், அதிமுகவில் தலைமை யாருக்கு என்பதில் மீண்டும் ஒரு தர்ம யுத்தத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
Comments
Post a Comment