பாஜகவின் தோல்விகள்
2018 மார்ச் மாதத்தில், 21 மாநிலங்களிலில் ஆட்சியில் இருந்த பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதே ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்தது, இதையடுத்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 17ஆக குறைந்தது. கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தாலும் 2019 டிசம்பர் இறுதியில் ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை இழந்ததை அடுத்து பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 16ஆக குறைந்தது.
இதையடுத்து எதிர்க்கட்சிகள், விமர்சகர்கள் மற்றும் சில ஊடகங்கள் எல்லாம் பாஜக பலமிழந்து, மக்கள் ஆதரவு குறைந்து வருவதாக கூறுகின்றனர். உண்மை நிலவரம் என்ன?
230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில், 2013ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 165 இடங்களை கைப்பற்றி, சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் 3வது முறையாக ஆட்சி அமைத்த பாஜக 44.88 சதவீத வாக்குகளை பெற்றது. அதேசமயம் காங்கிரஸ் 58 இடங்களைப் பிடித்து 36.38 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், 114 இடங்களை பிடித்த காங்கிரஸ், கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்த போது 40.89 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. 109 இடங்களை பிடித்து ஆட்சியை இழந்த பாஜக 41.02 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. 2013ல் காங்கிரஸை விட பாஜக 8.5 சதவீத வாக்குகளை அதிகமாக பெற்று ஆட்சியைப் பிடித்தது. 2018ல் பாஜக ஆட்சியை இழந்தபோதும், அதனுடைய வாக்கு சதவீதம் காங்கிரசை விட 0.13 சதவீதம் அதிகமாகவே இருந்தது. தொகுதி வித்யாசமும் வெறும் 5 தான்.
200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், 2013ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 163 இடங்களை கைப்பற்றி, வசுந்தரா ராஜே சிந்தியா (Vasundhara Raje Scindia) தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போது பாஜக பெற்ற வாக்கு 45.17 சதவீதம். அதேசமயம் காங்கிரஸ் 21 இடங்களைப் பிடித்து 33.03 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 100 இடங்களை பிடித்து அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் 39.3 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. 73 இடங்களைப் பிடித்து ஆட்சியை இழந்த பாஜக 38.77 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. 2013 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடித்தபோது காங்கிரசை விட 12.14 சதவீதம் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது. அதேசமயம் 2018ல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோதும் பாஜகவை விட 0.53 சதவீத வாக்குகளை மட்டுமே அதிகமாக பெற்றிருந்தது. பாஜகவின் தோல்விக்கு அந்த மாநில முதலமைச்சராக இருந்த வசுந்தரராஜே சிந்தியாவின் போக்கு தான் காரணம் என பாஜகவுக்கு உள்ளேயே விமர்சிக்கப்பட்டது.
90 தொகுதிகள் கொண்ட சட்டீஸ்கர் மாநிலத்தில், 2013ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ராமன் சிங் தலைமையில் 49 இடங்களை பிடித்து 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்தது. அந்தத் தேர்தலில் பாஜக 41.04 சதவீத வாக்குகளைப் பெற்றது. 39 இடங்களை பெற்ற காங்கிரஸ், 40.29 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.
2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 68 இடங்களை பிடித்து பூபேஷ் பாகல் (Bupesh bhagel) தலைமையில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் 43.23 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. 15 இடங்களைப் பிடித்து ஆட்சியை இழந்த பாஜக 32.97 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. 2013ஆம் ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடித்தபோது, காங்கிரசை விட 0.73% அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது. 2018இல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது, பாஜகவை விட 10.26% வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தது. தெளிவான வெற்றி.
288 தொகுதிகள் கொண்ட மஹாராஷ்டிராவில், 2014ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் என பிரதான கட்சிகள் நான்கும் தனித்தே தேர்தலை சந்தித்தன. 122 இடங்களை வென்ற பாஜக 27.81 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. 63 இடங்களை வென்ற சிவசேனா 19.35 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. 42 இடங்களை வென்ற காங்கிரஸ் 17.95 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. 41 இடங்களை வென்ற தேசியவாத காங்கிரஸ் 17.24 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 144 இடங்களை எந்த கட்சியும் தனித்து பெறவில்லை. தேர்தலுக்குப் பின்பு பாஜக சிவசேனா இடையே கூட்டணி அமைத்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. அந்தத் தேர்தலில் இரண்டாவது இடம் பிடித்த சிவசேனாவை விட பாஜக, 9 சதவீத வாக்குகள் அதிகமாக பெற்றிருந்தது. 2019ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனா ஓர் அணியாகவும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஓர் அணியாகவும் தேர்தலை சந்தித்தது. 105 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற பாஜக 25.70 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. 56 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற சிவசேனா 16.41 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. 44 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்த காங்கிரஸ் 15.9 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. 54 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ் 16.71 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. கிட்டத்தட்ட, நான்கு கட்சிகளும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற அதே தொகுதி எண்ணிக்கை அதே வாக்கு சதவீதம்.
ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை பாஜக - சிவசேனா கூட்டணி பெற்றபோதும்,
முதல்வர் பதவிக்கு சிவசேனா அடம் பிடித்ததைத் தொடர்ந்து அந்த கூட்டணி உடைந்தது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) தலைமையில் ஆட்சி அமைத்தது. 2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி 42.11 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 32.61 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணியை விட, பாஜக கூட்டணி 9.5 சதவீத வாக்குகள் அதிகமாக பெற்று இருந்தது.
81 இடங்கள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில், 2014 டிசம்பரில் நடந்த தேர்தலில், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. அதேசமயம், காங்கிரஸும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் (Jharkhand Mukti Morcha)
தனித்தனியாக களம் கண்டன. இத்தேர்தலில், 37 இடங்களைக் கைப்பற்றி ரகுபர் தாஸ் (Raghubar Das)
தலைமையில் ஆட்சி அமைத்த பாஜக 31.26 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. 6 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் 10.46 சதவீதம் வாக்குகளை பெற்றது. 19 இடங்களைப் பிடித்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 20.43 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. 2019 டிசம்பரில் நடந்த சட்டமன்ற தேர்தலில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ், கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 16 இடங்களிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களிலும் வெற்றி பெற்று, ஹேமந்த் சோரன் தலைமையில் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 13.9 சதவீதமும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 18.72 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக 25 இடங்களை வென்று 33.4 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அதாவது, ஆட்சியைப் பிடித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணியை விட பாஜக 0.78 சதவீத வாக்குகளை அதிகமாக பெற்றிருந்தது. இந்தத் தோல்விக்கும் காரணம் முதல்வர் மீதான தனிப்பட்ட அதிருப்தி தான் என்பதற்குச் சான்று, அவரே தேர்தலில் தோற்றுப்போனது! அவரை தோற்கடித்தது, பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்து, சீட் கிடைக்காமல் சுயேட்சையாக போட்டியிட்ட சார்யு ராய் தான்.
ஆக, ஜார்க்கண்ட்டில் ஆளும் கூட்டணியை விட 0.78 சதவீதமும், மத்திய பிரதேசத்தை ஆளும் காங்கிரஸை விட 0.13 சதவீதமும், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணியை விட 9.5 சதவீதமும் அதிகமான வாக்குகளை பாஜக பெற்று இருந்தது.
பாஜகவை விட காங்கிரஸ் ராஜஸ்தானில் 0.53 சதவீதமும், சட்டீஸ்கரில் 10.26 சதவீதமும் அதிகமாக பெற்றுள்ளது.
இவ்வளவுதான் புள்ளிவிவரம். மற்றதெல்லாம் உங்கள் விவரத்தை பொறுத்தது.
Comments
Post a Comment