ஆட்சியை கலைக்க மறுத்த ஆளுநர்.

 ஆட்சியை கலைக்க மறுத்த ஆளுநர்.


1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்ததை அடுத்து அதிமுக பிளவுபட்டது. முதலமைச்சராக இருந்த ஜானகிக்கு பெரும்பான்மை இல்லாததால்  தமிழக சட்டமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக 151 இடங்களில் வெற்றி பெற்று  தமிழக முதலமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்றார்.  தேர்தல் தோல்விக்கு பிறகு ஜா, ஜெ அணிகள் ஒருங்கிணைந்து ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட ஆரம்பித்தது. 


இந்த சமயத்தில்

தேசிய அரசியலில் ராஜீவ் காந்திக்கு எதிராக போஃபர்ஸ் புயல் வீசிக்கொண்டு இருந்தது. போஃபர்ஸ் விவகாரம் முற்றி, காங்கிரசில் இருந்து வெளியே வந்த வி.பி.சிங், ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கி தேசிய அரசியலில் ராஜீவ் காந்திக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிக் கொண்டிருந்தார். 

1989ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ், கிட்டத்தட்ட தனித்து விடப்பட்டிருந்தது. அதேசமயம் தமிழகத்தில் அதிமுகவுடன் வலுவான கூட்டணி அமைத்தது.

இந்த தேர்தலில் 197 தொகுதிகளில் மட்டுமே தேசிய அளவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.  எதிர் முகாமில் ஜனதாதளம் 143 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 33 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேசிய அளவில் பெரும் தோல்வியை சந்தித்த காங்கிரசுக்கு, தமிழ்நாட்டில் பிரமாண்டமான வெற்றி கிடைத்திருந்தது. அதிமுக போட்டியிட்ட 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் போட்டியிட்ட 28 தொகுதிகளில் 27ல் வெற்றி பெற்றிருந்தது. திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. திமுக கூட்டணியில் இடம்பிடித்த இருந்த வலது கம்யூனிஸ்ட் மட்டும் நாகப்பட்டினத்தில் வெற்றி பெற்று இருந்தது. 

அதிமுக-காங்கிரஸ் கூட்டணியின்  இந்த வெற்றி அந்த கூட்டணியை வலுப்பெற செய்தது. 


வி.பிசிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சிக்கு பாஜக, இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தனர். வி.பி.சிங் பிரதமரானாலும், பிரதமர் பதவி மேல் தேவிலாலுக்கும், சந்திரசேகருக்கும் ஒரு கண் இருந்துகொண்டே இருந்தது. தன்னை வீழ்த்திய வி.பி.சிங்-கை வீழ்த்த சகுனம் பார்த்துக் கொண்டிருந்தார் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி. 


இதனிடையே  அன்றைய பாஜக தலைவரான அத்வானி நடத்திய ரத யாத்திரையை  அப்போதைய பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தடுத்து, அத்வானியை கைது செய்தார். இதனை தொடர்ந்து ஜனதாதள அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. இதனையடுத்து, விபி சிங் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. பிரதமர் பதவி மேல் நீண்ட நாட்களாக கண் வைத்திருந்த சந்திரசேகர் பிரதமராகி, நம்பிக்கை வாக்கெடுப்பில், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பேராதரவுடன் வெற்றி பெற்றார். 


இப்படி தேசிய அரசியல் நகர்ந்து கொண்டிருக்க, தமிழகத்திலோ திமுக ஆட்சியை கவிழ்த்தே  ஆக வேண்டும் என்ற முனைப்புடன் ஜெயலலிதா கங்கனம் கட்டி வேலை செய்துகொண்டிருந்தார்.

சந்திரசேகர் தலைமையிலான ஆட்சிக்கு காங்கிரசுடன் சேர்ந்து அதிமுகவும் ஆதரவளித்தது. இதனால் முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதாவின் தாக்குதல் அதிகமானது. இந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கு வலு சேர்க்கும் விதமாக, மத்திய அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் சுவாமியும் செயல்பட்டுக் கொண்டிருந்தார். 


இதனிடையே தமிழகம் வந்த பிரதமர் சந்திரசேகர், காஞ்சிபுரம் சென்று சங்கராச்சாரியாரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தேச ஒற்றுமைக்கு அபாயம் ஏற்படாத வரை, எந்த ஒரு மாநில அரசிலும் தலையிடும் பேச்சுக்கு இடமில்லை" என்று பேட்டி கொடுத்துவிட்டு, நேராக ஜெயலலிதா வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விருந்துக்கு சென்றார். 

விருந்தை முடித்துக்கொண்டு பிரதமர் சந்திரசேகர் டெல்லி சென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா, "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் அரசியல் சூழ்நிலை குறித்தும், பிரதமரிடம் விரிவாகப் பேசினோம். தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று ஏற்கனவே பல முறை வலியுறுத்தியுள்ளோம். இம்முறையும் வலியுறுத்தினோம்" என்று கூறினார். 


இதனிடையே, 1990ல் சென்னையில் EPRLF  தலைவர் பத்மநாபா, விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, மத்திய சட்டத்துறை அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி, தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைத்தார்.  அப்போது தமிழக ஆளுநராக  சுர்ஜித் சிங் பர்னாலா இருந்தார். அவரிடம் திமுக ஆட்சியை கலைப்பதற்கான 

உரிய வகையில் அறிக்கை தருமாறு பிரதமர் சந்திரசேகர் கேட்டார். அதை ஏற்க முடியாதென்று உறுதியாக  பர்னாலா மறுத்தார். அதனால் என்ன அரசியல் அமைப்பு சட்டத்தின் 356வது பிரிவில் ஆளுநர் அறிக்கை அளித்தாலோ அல்லது வேறு வகையில் என்று உள்ளதில் வேறுவகையில் என்று உள்ளதை பயன்படுத்தினார்கள்.

  1991 ஜனவரி 30ஆம் தேதி, தமிழக அரசு கலைக்கப்பட்டதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் பிறப்பித்தார். இதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாத இயக்கமான ULFA-வுக்கு தமிழ்நாட்டில் முகாம்கள் இருக்கின்றன. விடுதலைப் புலிகள் செல்வாக்கு அதிகரிக்க திமுக அரசு அனுமதி அளித்துவிட்டது என்பவை. 


ஆட்சி கலைக்கப்பட்டது குறித்து கூறிய திமுக தலைவர் கருணாநிதி, "அதிமுகவும், காங்கிரஸும் பிரதமர் சந்திரசேகருக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. திமுக ஆட்சியைக் கலைக்காவிட்டால், சந்திரசேகருக்கு தரும் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வோம் என்று மிரட்டி உள்ளனர். தனது பதவியை காப்பாற்றுவதற்காக இந்த ஜனநாயகப் படுகொலையை செய்ய, அவர் உடன்பட்டுள்ளார்" என்றார். 

இந்த ஆட்சிக் கலைப்புக்கு கவர்னரின் ஒத்துழைப்பு இல்லாததால் அதிருப்தியில் இருந்த  அதிமுக, அவரை திரும்பப் பெறுமாறு கூறியது. 

இதனையடுத்து பர்னாலா பீகாருக்கு மாற்றப்பட்டு, புதிய ஆளுநராக பீஷ்ம நாராயண் சிங் நியமிக்கப்பட்டார். 


திமுக ஆட்சி கலைக்க ஒத்துழைப்பு தராத பர்னாலா மீது கருணாநிதிக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது. இதன் ஒருபகுதியாக 2004ல் மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி  ஆட்சியில் முக்கிய பங்கு வகித்த திமுக,  மீண்டும் தமிழக ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா-வை கொண்டு வந்தது. 2004ம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பர்னாலா 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31தேதி வரை இருந்தார். 


இதன் மூலம் ஆளுநர் என்பவர், மத்திய அரசின் கைப்பாவையாக இல்லாமல் இருக்கலாம் என்பதை பர்னாலா நிரூபித்தார். 


   - தினேஷ்குமார் ஜெயவேல்.



Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு