பாமக வரலாறு
தமிழக தேர்தல் களத்தில் திமுக, அதிமுக இரண்டு தரப்பினரும் ஒரு கட்சியை தங்கள் கூட்டணிக்குள் கொண்ட வர ஆசைப்படுவார்கள். அந்த கட்சி பாமக என்கிற பாட்டாளி மக்கள் கட்சி.
பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர திமுகவும், அதிமுகவும் ஏன்? இவ்வளவு பிராயச்சித்தம் செய்கிறது என்பதை அறிய வேண்டுமானால், அதன் வரலாற்றை அறியவேண்டும்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரித்து அதன் வரலாறு இல்லை என்பதால், ராமதாஸில் இருந்தே தொடங்குவோம்..
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள கீழ்விசிறி கிராமத்தில் 1939ம் ஜூலை 25ஆம் தேதி சஞ்சீவிராயக் கவுண்டர், நவநீத அம்மாள் தம்பதியருக்கு 4வது மகனாகப் பிறந்தவர் ராமதாஸ்.
தனது கிராமத்தில் தொடக்க கல்வியை முடித்தவர், மருத்துவப் படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியிலும் முடித்தார். படிப்பை முடித்த கையோடு தனது சொந்த ஊரான திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர். பிறகு தனியாக கிளினிக் ஆரம்பித்து 2 ரூபாய்க்கு ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்தார். மனிதர்களின் உடலில் ஏற்படும் பிணிகளுக்கு மட்டுமின்றி, சமுதாயத்தில் உள்ள பிணிகளுக்கும் வைத்தியம் பார்க்க முடிவு செய்தார்..
இதனையடுத்து, தான் சார்ந்த வன்னிய சமுதாயம் வட தமிழகத்தில் பெருமளவில் இருந்த போதிலும், அரசு வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் போதிய வாய்ப்புகளைப் பெறாது... பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தது, உள்ளிட்ட காரணங்கள் அவரை சமுதாயப் பணிக்கு இழுத்து வந்தது..
பல்வேறு வன்னிய சங்கங்கள் தலைவர்கள், பெரியோர்களுடன் தொடர்ந்து வன்னிய சமுதாய மக்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இதன் தொடர்ச்சியாக
28 வன்னியர் அமைப்புக்களை இணைத்து,1980ம் ஆண்டு, ஜூலை 20ம் தேதி வன்னியர் சங்கம் என்ற புதிய அமைப்பை தொடங்கப்பட்டது. அப்போது பேசிய டாக்டர் ராமதாஸ்" எனது கால்கள் சட்டமன்றத்தையோ, நாடாளுமன்றத்தையோ மிதிக்காது. சங்கத்தின் எவ்வித பதவியையும் வகிக்க மாட்டேன். என் சொந்த செலவில் இயக்கப் பணிகளை செய்வேன்" ஆகிய சத்தியங்களை செய்துவிட்டு சங்கத்தை வளர்க்கத் தொடங்கினார் டாக்டர் ராமதாஸ்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி முதல் மாநாடு,1980-ம் ஆண்டு ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு போராட்டங்களும், பேரணி நடத்தப்பட்டன. இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் இந்த போராட்டத்திற்கு செவி சாய்ப்பதாக இல்லை.
"எப்பேர்பட்ட கொம்பனாக இருந்தாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வன்னியர்களிடம் ஓட்டு பிச்சைக்கு வந்து தான் தீர வேண்டும். எங்களை மதிக்காதவர்களை, நாங்கள் மிதிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை, அரசியல்வாதிகளுக்கு நினைவூட்டுகிறேன்" என்று ஆவேசமாக கூறி, ராமதாஸ் அதிரடியாக அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்தார்.
மக்கள்தொகை அடிப்படையில்
வன்னியர்களுக்கு மாநிலத்தில் 20 சதவீதமும், மத்தியில் 2 சதவீதமும் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும்’’ என்ற
கோரிக்கையை முன்வைத்து, 1987 செப்டம்பர் மாதம் 17 தேதி முதல் 23 தேதி வரை நடைபெற்ற ஒரு வாரம் தொடர் சாலைமறியல் போராட்டம் தமிழகத்தில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்தது. இந்த போராட்டத்தால் வட தமிழ்நாடு முழுவதும் ஸ்தம்பித்தது. போராட்டத்தின் போது வாகனங்கள் செல்வதை தடுக்க மரங்களை வெட்டி ரோட்டில் போட்டனர் வன்னிய சங்கத்தினர். இதனால் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளானது. இதனையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். ராமதாஸ் மற்றும் வன்னியர் சங்க மூத்த தலைவர்கள் உட்பட 18,000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சமயத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய எம்ஜிஆர், ராமதாஸ் உள்ளிட்ட வன்னிய சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து உரிய முடிவு எடுப்பதாக கூறினார். இருப்பினும் எம்ஜிஆர் உடல்நலக்குறைவு காரணமாக, ஒரு மாதத்திற்குள் உயிரிழந்தார். பின்னர் அதிமுக உடைந்து, தமிழக அரசு கவிழ்ந்தது. வேலூரில் வன்னியர் சங்க மாநாடு கூடியது.
மாநாட்டில் பேசிய டாக்டர் ராமதாஸ் "வன்னியர்களின் பிரச்சனையை உணர்ந்து, பரிகாரம் காண கூடிய இரண்டு நபர்கள் பிரதமர் ராஜீவ் காந்தியும், ஆளுநர் அலெக்சாண்டர் தான். வன்னியர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு மணி நேரம் போதும், இதை செய்யாமல் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டுக்கு வந்து போவதுதான் வேதனைக்குரியது" என்றார். 1988 மே மாதம் 11 பிரதிநிதிகள் அடங்கிய வன்னியர் சங்ககுழு குடியரசு தலைவர் வெங்கட்ராமனை சந்தித்து பேசினார்கள். குடியரசுத் தலைவரோ "சாதி அடிப்படையில் சலுகைகள் கேட்பது. அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று சொல்லியதால், ராமதாஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களின் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக தலைவர் கருணாநிதி கொடுத்தார். இதே வாக்குறுதிகளை இந்திரா காங்கிரஸ், ஜானகி அணியினரும் கொடுத்தனர்.
1988ம் ஆண்டு கும்பகோணம் அருகிலுள்ள குடிதாங்கி கிராமத்தில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை வன்னியர் சமுதாயம் வசிக்கும் பகுதி வழியாகக் கொண்டு செல்ல எதிர்ப்பு கிளம்பியது. இதை கேள்விப்பட்ட டாக்டர் ராமதாஸ், தானே நேரடியாக அங்கு சென்று வன்னிய மக்களின் எதிர்ப்பையும் மீறி சடலத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்தார். இதன் காரணமாக,
தொல்.திருமாவளவன் ராமதாஸை `தமிழ்க் குடிதாங்கி’ என்று 2005ல் அழைத்தார் . இதன்மூலம் வன்னிய சமுதாய மக்களும் மட்டுமின்றி மற்ற சமுதாய மக்களாகவும் களத்தில் இறங்கி போராடி அடுத்து கட்டத்திற்கு சங்கத்தை நகர்ந்து கொண்டுயிருந்தார் ராமதாஸ்.
1989 சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறி விரிவான அறிக்கை ஒன்றை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்..
வன்னியர் சங்கம் அறிவித்தபடி வன்னியர்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் பட்சத்தில் அது தேர்தல் முடிவில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டது. இதுதொடர்பாக சில அரசியல் கட்சிகள் டாக்டர் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் , வன்னியர் சங்கம் தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் தீவிரமாக இருந்தது. இதனிடையே, 1988 டிசம்பர் 12ஆம் தேதி அலெக்சாண்டர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தி வரும், வன்னியர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் கோரிக்கையை தமிழக அரசு கொள்கை அளவில் ஏற்கிறது. இது தொடர்பான புள்ளிவிவரங்களை பி.வி.வெங்கடகிருஷ்ணன் தலைமையிலான அரசு அதிகாரிகள் குழு ஆராய்ந்து 9 மாதத்தில் அறிக்கைகளை தயாரித்து சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
1989 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், முதலமைச்சராக இருந்த கருணாநிதி, வன்னியர் சங்க தலைவராக இருந்த ராமதாஸை அழைத்து பேசினார். பின்னர் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் வன்னியர் சமுதாயத்துடன் சேர்த்து 108 சமுதாயங்களை சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தீர்மானிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.
தேர்தல் அரசியலில் அரசியலில் பங்கேற்காமல், தேர்தல் அரசியலை கடுமையாக விமர்சித்து வந்த வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்கத்தின் அடுத்த பரிணாமமாக 1989 ஜூலை 26ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி என்ற கட்சியை சென்னை சீரணி அரங்கில் தொடங்கினார்.
அங்கு பேசிய டாக்டர் ராமதாஸ்,"சமூகநீதி, ஜனநாயகம், சமத்துவம், மனிதநேயம், என்ற நான்குமே பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள். மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவது தான் பாமகவின் லட்சியம்" என்று முழங்கினார்.
பாமகவின் தலைவர் பதவி வன்னியருக்கும், பொதுச்செயலாளர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அதன்படி அக்கட்சியின் முதல் தலைவராக பேராசிரியர் தீரனும், முதல் பொதுச்செயலாளராக தலித் ஏழில்மலையும் பொறுப்பேற்றனர்.
இதனை தொடர்ந்து வந்த
1991ல் நடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக முதன்முதலாக களமிறங்கியது. இந்த தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக கூட்டணி அமைத்தது. அந்த கூட்டணியில்
முஸ்லிம் லீக், பிரகாஷ் அம்பேத்கரின் குடியரசு கட்சி, பழ. நெடுமாறனின் தமிழ் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக பாமக சட்ட மன்றத்துக்கு 199 தொகுதிகளிலும், நாடாளுமன்றத்திற்கு 31 தொகுதிகளிலும், வேட்பாளர்களை நிறுத்தியது. ராஜீவ் படுகொலையின் அனுதாப அலையால், அதிமுக கூட்டணி 224 தொகுதிகளைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தொகுதிகள் அனைத்தும் அதிமுக கூட்டணியின் வசமாயின. அந்த அலைக்கு மத்தியிலும், பண்ருட்டி தொகுதி பாமக வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றிபெற்றார். இதன்மூலம் பாமகவின் முதல் மக்கள் பிரதிநிதியானார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
அப்போது பாமகவின் சின்னம் யானை.
அதனால் பாமகவினரால் பண்ருட்டி ராமச்சந்திரன் யானையில் ஊர்வலமாக சட்டமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
1992-ம் ஆண்டு செப்டம்பர் 10 தேதி தொடங்கி மூன்று நாட்கள் சென்னை பெரியார் திடலில் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி, அதில் தமிழீழத்துக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றினார் டாக்டர் ராமதாஸ். அந்த மாநாட்டையொட்டி நடந்த பேரணியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவப்படத்தைப் பிடித்து தனித்தமிழீழத்துக்கு ஆதரவாக கோஷமிட்டதால், பிரிவினைவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை” என்று கூறிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. மாநாட்டில் கலந்து கொண்ட டாக்டர் ராமதாஸ், பண்ருட்டி ராமச்சந்திரன், பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோரை தேசத்துரோக வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்தார்.
பாமக தாய் அமைப்பான
வன்னியர் சங்கத்தின் சார்பில் விழுப்புரத்தில் 1995ஆம் அக்டோபர் 7ஆம் தேதி சமுதாய விழிப்புணர்வு மாநாடும், மறுநாள் அரசியல் விழிப்புணர்வு மாநாடும் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி, வாழப்பாடி ராமமூர்த்தி, டாக்டர் ராமதாஸ், அப்துல் லத்தீப் உள்ளிட்ட 7 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
1996 சட்டமன்ற
தேர்தலுக்கு பாமகவை உள்ளடக்கிய ஏழு கட்சிகளையும் இணைந்து திமுக கூட்டணியை உருவாக்கியதாக அப்போது செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த கூட்டணி
தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினையால் உடைந்தது. 1996 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை பாமக தலைமையில் திவாரி காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தது. பாமக தலைமையிலான கூட்டணியில் பாமக 116 இடங்களிலும், வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான திவாரி காங்கிரஸ் 50 இடங்களிலும் போட்டியிட்டது. இதில்
பாமக நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அவர்களில் முக்கியமானவர்கள் பென்னாகரத்தில் ஜி.கே.மணி, ஆண்டிமடத்தில் தீரன் ஆகியோர்.
இப்படி பாமக தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகி வந்தது.
1998ல் மத்தியில் இருந்த அரசு கவிழ்ந்ததை அடுத்து பாராளுமன்றத்திற்கு தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் அதிமுக அணியில் இணைந்தது பாமக. கூட்டணியில் பாஜக, மதிமுக, தமிழக ராஜீவ் காங்கிரஸ் இருந்தன. 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் வென்றது. வாஜ்பாய் அமைச்சரவையில் பாமகவைச் சேர்ந்த தலித் எழில்மலை சுகாதாரத் துறை இணை அமைச்சரானானர்.
மத்திய அரசில் பங்கு பெற்று இருந்த அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் முட்டல் மோதல் தொடர்ந்ததை அடுத்து உச்சகட்டமாக, ஆட்சி கவிழ்த்தார் ஜெயலலிதா. இதனையடுத்து, நாடாளுமன்ற மீண்டும் தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய போதிலும், பாமக தொடர்ந்து பாஜக கூட்டணியில் நீடித்தது. மேலும், இந்த கூட்டணியை தமிழகத்தில் வலுசேர்க்கும் விதமாக திமுக இணைந்து தலைமை தாங்கியது.
பாமக புதுச்சேரியையும் சேர்த்து 8 இடங்களில் போட்டியிட்டு, 5 இடங்களில் வெற்றி பெற்றது. பாமகவைச் சேர்ந்த என்.டி.சண்முகம் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகவும், இ.பொன்னுசாமி பெட்ரோலிய துறை இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்கள்.
ஒரு வருடத்திலேயே
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இருந்த நிலையில், திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் இருந்து விலகி, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது பாமக. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது குறித்து கூறிய டாக்டர் ராமதாஸ் "முடிவுகள் அனைத்தையும் அன்பு சகோதரி ஜெயலலிதாவிடம் விட்டுவிட்டேன். கருணாநிதியோ பெரியண்ணன் தோரணையுடன் எங்களை அழிக்கப் பார்க்கிறார். அதன் காரணமாகவே அதிமுக அணியில் பாமக இணைகிறது" என்றார்.
தமிழகத்தில் 27 தொகுதிகளும், புதுச்சேரியில் 10 தொகுதிகளும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில் 20 இடங்களை வென்ற பாமக, புதுச்சேரியில் படுதோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து அதிமுக - பாமக கூட்டணியும் உடைந்தது.
பின்னர் 2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்
பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த திமுகவும் பாமகவும் கூட்டணியைவிட்டு வெளியேறின. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன. பாமக 5 தொகுதிகளை வென்றது. R.வேலு ரயில்வே துறை இணை அமைச்சரானார். அன்புமணி ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சரானார்.
2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீட்டித்தது பாமக. அந்த கூட்டணியில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமக, 18 இடங்களில் வெற்றி பெற்றது. உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கொஞ்சம் சறுக்கல்தான் என்றாலும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சியுடன் கூட்டணி என்கிறபோது பாமக அதிகாரத்தை கைப்பற்றியதாக பார்க்கப்பட்டது.
2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக ,
அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துக்கொண்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.
2011 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணியில் இடம்பெற்றது பாமக. அதே கூட்டணியில் விசிகவும் இடம்பெற்றிருந்தது. விசிகவும், பாமகவும் ஒரே கூட்டணியில் இடபெறுவது அதுவே முதல்முறை. இந்த தேர்தலில் 30 சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
கலப்பு திருமணம் காரணமாக,
2012ஆம் தர்மபுரி மாவட்டம்
நத்தம், பழைய கொண்டாம்பட்டி, புதிய கொண்டாம்பட்டி, அண்ணாநகர் ஆகிய கிராமங்களில் பட்டியலின சமூகத்தினருடன் வன்னியர் சமூகத்தினருக்கு மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது. இந்த கலவரத்திற்கு பாமக தான் காரணம் என்று குற்றம்சாட்டது. ஆனால் இதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மறுத்து வருகிறார். இதனையடுத்து விசிக பாமக இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து. பாஜக அமைத்த கூட்டணியில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து 2016 சட்டமன்ற தேர்தலில் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற கோஷத்துடன் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்து 234 தொகுதியிலும் தனித்து களமிறங்கியது பாமக. இந்த தேர்தலில் பாமக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. இருப்பினும், பாமக வாங்கிய வாக்கு சதவீதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
4 இடங்களில் 2ஆம் இடமும், 66 இடங்களில் 3ஆம் பெற்றது. 5.3 சதவீத வாக்குகளையும் பெற்றது.
ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு நடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனையடுத்து வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த கோரி தொடந்து அறிக்கைகள் மூலம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தி வந்தார். இதற்கு அரசு தரப்பில் எந்த விதமான அறிவிப்புகள் வெளியாகத நிலையில்,
2020 டிசம்பர் மாதம் பாமக நடத்திய போராட்டம் தமிழக அரசியல் களத்தில் கொதிப்பு நிலையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸை, அப்போது முதலமைச்சராக இருந்த எடப்படி பழனிசாமி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். முதல்வரைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அன்புமணி,
``ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கிற நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் எங்களை அழைத்து உங்கள் கோரிக்கையைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அவர்களைச் சந்தித்து எங்களின் கோரிக்கையை நாங்கள் சொன்னோம். இந்தக் கோரிக்கை ஏதோ ஒரு சாதிப் பிரச்னை இல்லை. யாருக்கும் எதிரான போராட்டம் இல்லை. எந்த அமைப்புக்கும், சமுதாயத்துக்கும், அரசியல் கட்சிக்கும் எதிரான போராட்டம் கிடையாது.
இது ஒரு சமூகநீதிப் பிரச்னை" என்றார். 2021 பிப்ரவரி 26 தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான
தேர்தல் தேதி அறிவிக்கப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன், தமிழக சட்டமன்றத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில்
வன்னியர்களுக்கு
10.5 சதவீதம் உள் ஒதுக்கீடாக வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இது பாமகவின் 40 ஆண்டுகளாக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக அந்த கட்சி கூறி வருகிறது.
இதனை தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்து23 இடங்களை பெற்று 5 இடங்களில் வெற்றி பெற்றது.
20 சதவீதம் இடஒதுக்கீட்டை கேட்டு தொடங்கப்பட்ட பாமக 10.5 சதவீதம் இடஒதுக்கீடு பெற்றதன் மூலம்... பாதி வெற்றியை பெற்றுள்ளது.... மீதி வெற்றியை வரும் காலங்களில் பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...!
Comments
Post a Comment