அரசியல் என்பது சினிமா அல்ல
தமிழக அரசியலில் சினிமாவின் தாக்கம் என்பது, சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே தொடங்கியது. 1950களில் திராவிட இயக்கங்கள், தங்கள் கருத்துக்களை சினிமா மூலமாகவும் பரப்பின. சினிமாவில் அண்ணா,
கருணாநிதி போன்றவர்கள் வசனகர்த்தாவாக மாறி, தங்கள் எழுத்துக்கள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தினர்.
சினிமாத்துறையில் இருந்து இவர்கள் இருவர் மட்டும் இல்லாமல், எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா என ஐந்து முதலமைச்சர்களை தமிழகம் கண்டுள்ளது. இவர்களைத் தவிர எஸ்.எஸ் ராஜேந்திரன் தொடங்கி இன்றைய கருணாஸ் வரை, சினிமாவில் இருந்து வந்த பலர், எம்பி, எம்எல்ஏ பொறுப்புகளையும், கட்சியில் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளனர். நிறைய நடிகர்கள் தனிக்கட்சி தொடங்கினாலும், வெகு சிலரே வெற்றி வாகை சூடினார்கள். பலர் தட்டு தடுமாறி, பிறகு அரசியலே வேண்டாம் என்று ஓடி விட்டனர்.
முதலில் காங்கிரஸ் அபிமானியாக இருந்த எம்ஜிஆர், பின்னர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்தார். இவரை, அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி கொண்டார் அண்ணா. எம்ஜிஆர் தன்னுடைய படங்களில், திமுக கொடியை பயன்படுத்துவதிலும், கருத்துகளை பரப்புவதிலும் எப்பொழுதும் கவனமாக இருந்தார். அண்ணாவின் மறைவுக்கு பிறகு, கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக, அதிமுக என்ற தனி கட்சியை எம்ஜிஆர் தொடங்கினார்.
"தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று" என்ற பாடல் வழியாக,
அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கருத்துக்களை பரப்ப, தொடர்ந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டார். மேலும், தன்னுடன் நடித்த சக நடிகைகளான லதா, ஜெயலலிதா போன்றவர்களையும் தன்னுடைய கட்சியில் இணைத்துக் கொண்டார். எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா, அதிமுகவின் தன்னிகரில்லா தலைவராக உருகிவாகி, முதலமைச்சர் ஆனார்.
1991, 2001, 2011, 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைத்து, ஆட்சியையும் ஜெயலலிதா பிடித்தார்.
நடிப்பில் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முதலில் திமுகவில் இருந்தார். திமுகவில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக காங்கிரசில் இணைந்து, பல்வேறு பொறுப்புகளை வகித்தார். எம்.ஜி.ஆரின் இறப்பிற்கு பிறகு அதிமுக, ஜா அணி, ஜெ அணி என இரண்டாக உடைந்தது. காங்கிரஸ் கட்சி, ஜானகி அணியை ஆதரிக்க வேண்டும் என்று சிவாஜி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ராஜிவ்காந்தி, ஜெயலலிதா அணியை ஆதரிப்பதாக அறிவித்தார். இதனால் 1988ஆம் ஆண்டு, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் சிவாஜி. ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலிலும் போட்டியிட்டார். பல்வேறு அரசியல் கணக்குகளுடன், தன்னுடைய சமுதாய மக்கள் அதிகம் வாழும் திருவையாறில் போட்டியிட்ட சிவாஜி, தோல்வி அடைந்தார். அதோடு, தன்னுடைய கட்சியை கலைத்துவிட்டு, அரசியலுக்கும் முழுக்கு போட்டுவிட்டார்.
1962ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பில் தேனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு, MLA ஆனார் SSR என்கிற எஸ்எஸ் ராஜேந்திரன். தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திரைப்பட நடிகர் இவர் தான். திமுகவில் இருந்த எஸ்எஸ் ராஜேந்திரன், பின்னர் அதிமுகவில் இணைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் எம்ஜிஆர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 1984ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ss ராஜேந்திரனுக்கு சீட் வழங்கததால், அதிமுகவில் இருந்து வெளியேறி, எம்.ஜி.ஆர் எஸ்.எஸ்.ஆர் கழகம் என்று புதிய கட்சியை துவங்கி, சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகனும், நடிகருமான ராதாரவி, அதிமுகவில் இணைந்து 2001ல் சைதாப்பேட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். பின்னர் அதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர், 2006ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுகவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் அதிமுகவில் சுறுசுறுப்பாக பணியாற்றினார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இறந்த பிறகு திமுகவிற்கு சென்றவர், அங்கிருந்து மீண்டும் அதிமுகவிற்கு வந்தார். தற்போது பாஜகவில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
மஞ்சள் சட்டை என்றால் ராமராஜன் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் ராமராஜன். ஆரம்பம் முதலே எம்ஜிஆரின் அபிமானியாகவும் இருந்து வருகிறார். மேலும் தன்னுடைய படங்களில் அதிமுகவின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை வெளிப்படையாக பயன்படுத்துவதை கடைபிடித்து வந்தார். 1998ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக, திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விபத்து, உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால், பொது இடங்களில் அதிகம் தென்படாவிட்டாலும், தொடர்ந்து அதிமுகவில் தலைமை கழக பேச்சாளராக உள்ளார்.
அரசியலுக்கு வர்றதுன்னா நேரடியா வருவேன்; சில பேர் மாதிரி இப்ப அப்போன்னு இழுத்துட்டு இருக்க மாட்டேன் என்ற வசனத்தை நரசிம்மா படத்தில் பேசி, தான் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்திய விஜயகாந்த்.
தேமுதிக என்ற கட்சியினை தொடங்கி, 2006 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட வைத்தார். இந்தத் தேர்தலில் விருத்தாச்சலத்தில் களமிறங்கிய விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினரானார். 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 45 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 29 தொகுதியில் வெற்றி பெற்று, திமுகவை ஓரங்கட்டி, எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். இப்படி ஏறுமுகத்தில் இருந்த விஜயகாந்த், 2016இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைமையிலான மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் அரசியலில் இறங்கு முகத்தை சந்தித்தார்.
முதலில் திமுகவிலும் பின்பு அதிமுகவிலும் இருந்த நடிகர் சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கி, 2011 தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்தார். அந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அவரது கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. சரத்குமார், நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
1989ல் அமைந்த
திமுக ஆட்சியில், அமைச்சராக இருந்த கே.என்.நேருவின் உறவினராகவும் உதவியாளராகவும் இருந்து, நடிகர் ஆனவர் நெப்போலியன். சினிமாவில் ஒரு ரவுண்ட் கட்டிவிட்டு, திமுகவில் இணைந்து, அரசியலுக்குள் அடி எடுத்து வைத்தார். திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்தவர், 2009இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, மத்திய இணை அமைச்சர் ஆனார். குடும்பத்துக்குள் ஏற்பட்ட அரசியல் மோதல் காரணமாக, பாஜகவில் இணைந்து, தற்போது அதுவும் சரிப்பட்டு வராமல் அரசியலில் இருந்தே ஒதுங்கிக் கொண்டார்.
திரைப்பட இயக்குநராக இருந்த சீமான், 2008ல் இலங்கை போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, ஈழ மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறை சென்றார். சிறையில் இருந்து வந்த பிறகு, சி.பா ஆதித்தனார் நிறுவி கைவிட்ட நாம் தமிழர் கட்சியை தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார். சில காலம் பெரியாரிய மற்றும் திராவிட கருத்துக்களை பரப்பி வந்த சீமான், தற்போது நாம் தமிழர் கட்சி மூலம் தமிழ் தேசிய கோட்பாட்டை முன்னெடுத்து வருகிறார்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
நடிகர் கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்னும் திடீர் அரசியல் கட்சியை தொடங்கி, 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக
கூட்டணயில் இடம்பெற்று, திருவாடனை தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்று MLA ஆனார்.
எம்ஜிஆரின் கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்ட நடிகர் பாக்யராஜ், எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு
எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை 1989ஆம் ஆண்டு துவங்கினார். அதற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காததை தொடர்ந்து, கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார். இப்போது எந்தக் கட்சியிலும் இல்லாமல், முற்றிலும் ஒதுங்கிவிட்டார்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர் என பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தர், திமுகவில் இணைந்து, தன்னுடைய அரசியல் பயணத்தை துவக்கினார்.
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக உயர்ந்தார் . 1996ல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராக இருந்தார். 2004ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி, லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என புதிய அரசியல் கட்சியை துவக்கினார். அதை ஓரங்கட்டிவிட்டு, விநியோகஸ்தர் சங்க நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி விட்டார் டி ராஜேந்தர்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக கலக்கிய வாகை சந்திரசேகர், திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு தன்னுடைய கலை படைப்புகளால் ஈர்த்த கமலஹாசன், மக்கள் நீதி மையம் என்ற கட்சியைத் தொடங்கி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வைத்தார். அவரது கட்சி வெற்றி பெறாவிட்டாலும், 4% ஓட்டு வாங்கி ஆறுதல் அடைந்தது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு நடுவே, ஆக்டிவாக கட்சிப் பணிகளையும் செய்து வருகிறார்.
சினிமாவின் குணச்சித்திரம், வில்லன், துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள், தங்களின் சினிமா வாழ்க்கையில் தொய்வு ஏற்படும்போது அல்லது தங்களது சினிமா வாழ்க்கையில் இருந்து அடுத்த நகர்வாக எடுக்கும் முடிவு அரசியல். பெரிய கட்சியில், தலைமை அறிவிக்கும் பேச்சாளர்களுக்கு அக்கட்சி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பொது கூட்டத்திற்கும் அவர்களுக்கு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இப்படி
சிலர் கட்சி தொடங்கியும், பிற கட்சிகளில் இணைந்தும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளனர். சிலர் கட்சி தொடங்கி அந்த கட்சிக்கு மூடுவிழா நடத்தியும் சென்றுள்ளனர்.
Upcoming அரசியல்வாதிகலாக ரஜினிகாந்த், விஷால், விஜய், சூர்யா என்று வரிசை கட்டி நிற்கின்றனர். இத்தனை பேரின் அனுபவத்தில், இந்த நட்சத்திரங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் - அரசியல் என்பது சினிமா அல்ல என்று!
Comments
Post a Comment