எல்ஐசி உருவானது ஏன்?
2021 பிப்ரவரி 1 தேதி, நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது எல்.ஐ.சியின் பங்குகளை விற்பதாக அறிவித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
Life insurance corporation.
தமிழில் சொல்ல வேண்டும் என்றால் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம். இதன் சுருக்கமே LIC.
1956 செப்டம்பர் 1ம் தேதி, காப்பீட்டுத் துறையை தேசியமயமாக்கி, இந்திய ஆயுள் காப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 245க்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி உருவானது.
சுதந்திரத்திற்கு முன்பு, 1818ஆம் ஆண்டிலேயே, இந்தியாவில் முதல் காப்பீட்டு நிறுவனமாக oriental life insurance என்கிற தனியார் நிறுவனம், கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது. படிப்படியாக, 245க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் காப்பீட்டு துறையில் செயல்பட்டு வந்தன. இத்தனை நிறுவனங்கள் இருந்தும் எல்ஐசி துவங்குவதற்கான காரணம் என்ன, என்பதை பார்ப்போம்.
சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவராக இருந்த Ramkrishna Dalmia, பாரத் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் தலைவராக இருந்தார்.
சுதந்திர இந்தியாவில் அமைந்த நேரு அரசில், நிதியமைச்சர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டவர்களில் Dalmia-வும் ஒருவர். இப்படிப் பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான டால்மியாவைச் சுற்றி சர்ச்சைகள் சுற்றின.
பாரத் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பொதுமக்கள் முதலீடு செய்திருந்த பணத்தைச் சட்ட விரோதமாக பயன்படுத்தி, ‘Coleman and Company Limited’ பத்திரிகை நிறுவனத்தை வாங்கியதை, ஆதாரத்துடன் Rae Bareli தொகுதி எம்பியும், நேருவின் மருமகனுமான Feroze Gandhi, நாடாளுமன்றத்தில் வெளியிடவே, சிக்கல் உண்டானது.
Coleman and Company Limited உடையது தான் இன்றைய times of India, times now உள்ளிட்டவை. மேலும் பேசிய Feroze Gandhi, "அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்டதை விட பல வழிகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வெளியிட்டார்.
இதனையடுத்து, Vivian Bose தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு, டால்மியாவுக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து, பொதுமக்களின் நிதியை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி, 1956 ஜனவரி 19ம் தேதி மத்திய அரசு, அவசர சட்டத்தை நிறைவேற்றியது.
பின்னர் 1956ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, காப்பீட்டுத் துறை தேசியமயமாக்கப்பட்டதற்கான இந்திய ஆயுள் காப்பீட்டுச் சட்டம், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு மூலதனமாக 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இப்படி உருவானது தான் LIC.
2020 மார்ச் 31 தேதி கணக்கின்படி, எல்ஐசி நிறுவனத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 498 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். 12 லட்சத்து 8 ஆயிரத்து 826 பேர் ஏஜென்ட்-களாக உள்ளார்கள்.
28 கோடியே 92 லட்சம் தனி பாலிசிகள் உள்ளன. அவற்றின் மதிப்பு 49,33,798 கோடி ரூபாய். 11 கோடியே 36 லட்சம் குழு பாலிசிகள் உள்ளன. அவற்றின் மதிப்பு 18,81,026 கோடி ரூபாய். 2019 - 20ம் நிதியாண்டில் 6,15,882 கோடி ரூபாய் மொத்த வருமானத்தை ஈட்டியுள்ளது. எல்ஐசி நிறுவனத்தின் மொத்த மதிப்பு 31,96,214 கோடி ரூபாய்.
LIC நிறுவனம், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மட்டுமின்றி அரசையே பல சமயங்களில் காப்பாற்றி உள்ளது.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமா ONGC பங்குகளை 2012ல் பங்குச்சந்தையில் விற்றபோது, முதலில் யாரும் பெரிதாக வாங்கவில்லை. இதனால் அரசுக்கு சங்கடமான சூழ்நிலை உருவானது. இந்த சமயத்தில், ஆபத்பாந்தவனாக அரசுக்கு உதவியது எல்.ஐ.சி. அந்த நிறுவனத்தில் 4.4 சதவீத பங்கை வாங்கியது. அதன் மதிப்பு 4000 கோடி ரூபாய். அதேபோல் ஐடிபிஐ வங்கி வாராக்கடன்களில் மூழ்கியபோது எல்.ஐ.சியே வந்து காப்பாற்றியது. இதுபோல பல சமயங்களில் பொதுத்துறை நிறுவனங்களையும், வங்கிகளையும் மீட்கும் நடவடிக்கைகளை எல்ஐசி, எடுத்து அரசின் சங்கடத்தைப் போக்கி உள்ளது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதோடு இல்லாமல் ரயில்வே, சாலைப் போக்குவரத்து, குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம், தகவல் தொடர்பு, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்பு பணிகளிலும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டத்திற்கு உதவும் வகையில் முதலீடு செய்து வருகிறது.
எல்ஐசியும் பங்கு சந்தையில் போட்டியிடுவதால் பாலிசிதாரர்கள், லாபத்தை பகிர்ந்தளிப்பதில் உள்ள விதிகளில் மாற்றங்கள் வருமா கேள்வி எழுப்பியுள்ளார்கள்?
தனியார் காப்பீட்டு நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் பாலிசிதாரர்களுக்கு அதிகபட்ச போனஸை எல்ஐசி வழங்குகிறது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 10 சதவீதத்தை பங்குதாரர்களுக்கும் 90 சதவீதத்தை பாலிசிதாரர்களுக்கும் வழங்குகிறது. எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு 95 சதவீதத்தை வழங்குகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் இந்த லாப பகிர்வு என்பது, பங்குதாரர்களுக்கும் பாலிசிதாரர்களுக்கும் இடையே பிரச்சினையை உருவாக்கலாம் என்று எல்ஐசி ஊழியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், அடுத்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் அளவு திறன் படைத்த எல் ஐ சியின் பங்குகளை விற்பதில் அரசு உடும்புப் பிடியாக இருக்கிறது. அது, இக்கட்டிலிருந்து தப்பிக்கும் வழியா அல்லது பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றைக் கிழிக்கும் வேலையா என்பது, போகப்போகத் தான் தெரியும்.
Comments
Post a Comment