ராஷ்டிரிய ஜனதா தளம்

 ராஷ்டிரிய ஜனதா தளம் 


தான் முதல்வர் பதவியை வகிக்க முடியாத போது தனது மனைவியை முதல்வராக்குவது போன்ற காட்சி, விஜயகாந்த் நடித்த தென்னவன் திரைப்படத்தில் வரும். இது ஏதோ திரைப்படத்தில் வரும் காட்சி அல்ல. பிஹார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிறை செல்ல நேர்ந்த போது, தனது மனைவி Rabri Deviயை முதல்வராகி விட்டுச் சென்ற சம்பவத்தின் பிரதியே. இன்றைய பிஹார் அரசியல் மட்டுமல்ல டெல்லி அரசியலிலும் தவிர்க்க முடியாத கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம். 


ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை பார்க்க வேண்டுமென்றால், அதை உருவாக்கிய லாலு பிரசாத் யாதவையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

1973ல் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, மிகப்பெரிய காந்தியவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயனின் அழைப்பால், நாடு முழுவதும் களமிறங்கி போராடிய இளைஞர்களின் ஒருவர், லாலு பிரசாத் யாதவ். அப்போது லாலு, பட்னா பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவராக இருந்தார். பின்னர், இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலைக்கு எதிராக போராடி, கைதாகி, சிறை சென்றார். அப்போது பிறந்த தனது மகளுக்கு, தான் கைதாகி சிறை செல்ல காரணமாக இருந்த மிசா சட்டத்தை நினைவு கூறும் வகையில், மிசா பாரதி என்று பெயர் வைத்தார். 


அவசர நிலைக்கு பிறகு, 1977ல் நடந்த பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி சார்பில், Cசாப்ரா தொகுதியில் போட்டியிட்டு லாலு வெற்றி பெற்றார். அப்போது வயது 29. இளம் வயதில் டெல்லி அரசியலுக்குள் சென்ற அவருக்கு, அரசியல் சூத்திரங்கள் கைவரப்பெற்றன. சோஷலிஸ்ட் வாதிகளான ராம் மனோகர் லோகியா, ஜெயபிரகாஷ் நாராயன் ஆகியோரின் சீடராக தன்னை முன்னிறுத்தி கொண்டார். 


1980, 85 ஆண்டுகளில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராக திறம்பட செயலாற்றி, பீகார் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவராகவும் உருவானார். 1989ஆம் ஆண்டில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான லாலு, வி பி சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரானார். 


1990ல் பிஹாரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாக பார்க்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், பல மூத்த தலைவர்கள் இருந்தபோதும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இந்தியாவின் 2வது பெரிய மாநிலமான பிஹாருக்கு முதல்வராக 41 வயது லாலு பிரசாத் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டது, தேசிய அளவில் கவனம் பெற்றது. 


ராம ஜென்ம பூமியில் ராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 1990 செப்டம்பர் 25ல், குஜராத் மாநிலம் சோம்நாத்தில் இருந்து, 10 மாநிலங்கள் வழியாக அயோத்திக்கு ரதயாத்திரை தொடங்கினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி.

அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த விபி சிங் தலைமையிலான ஜனதா தள அரசு, ரத யாத்திரையை தடுக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் செய்து வந்தது. அப்போதைய பிஹார் முதல்வராக இருந்த லாலு, "ரத யாத்திரை எங்கள் மாநிலத்துக்குள் நுழைந்தால் அத்வானியை கைது செய்வேன்" என்று எச்சரிக்கை விடுத்தார். 


பிஹாரில் ரத யாத்திரை சென்றபோது, அதை தடுக்கும் நோக்கில் லாலு பிரசாத் யாதவ், விபி சிங் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், தலைநகர் பட்னாவில் வைத்து அத்வானி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, மத்தியில் ஜனதா தள அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டது. இப்படி தேசிய அரசியலிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வளர்ந்த லாலு, 1995 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக பதவியேற்றார். 


1996ஆம் ஆண்டு பிஹார் மாநிலத்தில், கால்நடைக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்து, லாலு பிரசாத் யாதவ் க்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பிக்க, லாலுபிரசாத், முதல்வர் பதவியிலிருந்து விலகினார். உடனடியாக தன் மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சர் ஆக்கினார். முதலமைச்சர் ராப்ரி தேவி, லாலுவை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, பீகார் மாநில மிலிட்டரி போலீஸ் தலைமையகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையை, தற்காலிக சிறையாக அறிவித்து, அங்கே தங்க வைத்து, தினந்தோறும் சந்தித்து, அவரின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தினார். 134 நாட்கள் அங்கே இருந்து வெளியே வந்த லாலு, 1998 அக்டோபரில் மீண்டும் கைதானார். விருந்தினர் மாளிகையில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டிருப்பதை உச்ச நீதிமன்றம் கண்டித்ததால், வேறு வழியின்றி பையூர் சிறையில் அடைக்கப்பட்டார். 


1997ஆம் ஆண்டு ஜனதா தள கட்சியின் அகில இந்தியத் தலைவர் தேர்தலில் தில்லுமுல்லு நடைபெற்றதாக கூறிய லாலு, தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் புறக்கணித்தார்.

அதே ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி, டெல்லியில் உள்ள பிஹார் நிவாஸ் மாளிகையில், ராஷ்டிரிய ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கினார். 2000வது ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், மொத்தம் இருந்த 325 இடங்களில், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிக்கு 135 இடங்களே கிடைத்தன, தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், 23 இடங்களைப் பெற்ற காங்கிரசுக்கு 21 அமைச்சர் பதவிகளை வாரிக் கொடுத்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி அமைத்தது. 


2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 24 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ராஷ்ட்ரீய ஜனதாதளம், மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் முக்கிய அங்கம் வகித்ததோடு, அந்த அரசின் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவியேற்றார். லாலு ரயில்வே அமைச்சராக இருந்தபோது, அந்த துறை, பெரும் வருவாயை ஈட்ட தொடங்கியது. அவருக்கு முன்பு ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ்குமார் விதைத்ததை தான் லாலு அறுவடை செய்தார், என்று சொல்பவர்களும் உண்டு. 


2005ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் 75 இடங்களை பிடித்தது.  ஆட்சியமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மையை அடைய முடியவில்லை. பாஜக, ஐக்கிய ஜனதாதள கூட்டணி 93 இடங்களில் வெற்றி பெற்றது. அவர்களாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. 30 இடங்களை கைப்பற்றிய ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று தெரிவித்து விட்டதால், பிஹார் அரசியலில் இழுபறி நிலை நீடித்தது. திடீரென லோக் ஜனசக்தியைச் சேர்ந்த 22 உறுப்பினர்கள் ஐக்கிய ஜனதாதள, பாஜக கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்தனர். புதிய கூட்டணி அரசு அமைவதை தடுக்கும் நோக்கில், லாலு பிரசாத்தின் அழுத்தம் காரணமாக, அவசர அவசரமாக அன்றைய பிஹார் கவர்னர் பூட்டாசிங், சட்டப்பேரவையை கலைத்தார். 


இதற்குப் பிறகு லாலு பிரசாத் யாதவுக்கு இன்றுவரை இறங்கு முகம்தான். 2005 நவம்பரில் மீண்டும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிக்கு 67 இடங்களே கிடைத்தன. ஐக்கிய ஜனதாதள, பாஜக கூட்டணி 145 இடங்களை கைப்பற்றி, நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. லோக் ஜன சக்தி கட்சி 11 இடங்கள் மட்டுமே பெற்றது. 


2009ல் நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், அதுவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் விலகி, ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, முலாயம்சிங்கின் சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 3வது அணியாக போட்டியிட்டது. இருப்பினும் அந்த தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 


2010ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தியுடன் கூட்டணி அமைத்தது. ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி தொடர்ந்தது. காங்கிரஸ், தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம், வெறும் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வி கிடைத்ததால் தொண்டர்கள் பெரும் சோர்வடைந்தனர்.2013 செப்டம்பர் 30ஆம் தேதி, கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் லாலு பிரசாத்துக்கு தண்டனை அளித்தது. லாலு, நிஜமான சிறையில் அடைக்கப்பட்டார். 


2014இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. 

இந்த தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததால், பாஜகவின் நீண்டநாள் கூட்டாளியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார் அதிர்ச்சியுற்று, கூட்டணியிலிருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிட்டார். பிஹாரில் பாஜக தனியாகவும், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தனியாகவும், காங்கிரஸ் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி அமைத்தும் மூன்று அணிகளாக போட்டியிட்டன. அப்போதும்கூட மோடி அலை காரணமாக, ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம் இரண்டு கட்சிகளையும் தவிர்த்து பாஜக, பலம் பொருந்திய கட்சியாக வலுப்பெற்றிருந்தது. 


2015 சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு, அதுவரை பாம்பும் கீரியுமாக இருந்த நிதிஷ்குமாரும், லாலு பிரசாத் யாதவும் கூட்டணி அமைக்க முடிவு செய்தனர். அரசியல் சாணக்ய தனத்தில் ஊறிப்போன லாலு, முதலமைச்சர் வேட்பாளராக நிதிஷ் குமாரை முன்மொழிந்தார்.இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான ஒரு அணியும், மகா gகட்பந்தன் என்ற பெயரில் லாலு, நிதிஷ், காங்கிரஸ் எல்லாரும் ஒரே அணியாகவும் தேர்தலில் போட்டியிட்டனர். பாஜக கடுமையாக போராடியது. இருப்பினும் லாலு, நிதிஷ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, நிதிஷ்குமார் ஆட்சி அமைத்தார். 80 இடங்களை ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெற்றிருந்தது‌. இது, 2005ல் இருந்து ஆட்சியில் இல்லாத ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.

நிதிஷ்குமார் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் லாலுவின் மகன் Tejashwi Prasad Yadav துணை முதலமைச்சராகவும், மற்றொரு மகன் Tej Pratap Yadav சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்தவர்களுக்கும், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவர்களுக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. இந்த மோதலின் உச்சகட்டமாக லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது நடந்த ஊழல் புகார் வழக்கில், துணை முதலமைச்சரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் மீதும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து எதிர்கட்சிகள், நிதிஷ்குமாருக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கின. நிதிஷ்குமாரும் கூட, தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்தார். 


திடீரென 2017 ஜூலை 27ஆம் தேதி, கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பாஜக ஆதரவு அளிக்க முன்வந்ததை அடுத்து, மறு நாளே நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். இதனால், ஆளுங்கட்சி கூட்டணியாக இருந்த லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், எதிர்க்கட்சி வரிசையில் அமர நேர்ந்தது. 


2019 இல் நடந்த மக்களவைத் தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 21 இடங்களில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பிஹாரில் மொத்தம் உள்ள 40 இடங்களில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரசும் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. ராஷ்ட்ரீய ஜனதாதளம் தொடங்கப்பட்டதில் இருந்து, இதுதான் மிகப்பெரிய சரிவாக அமைந்தது. 


இதனிடையே சிறையில் இருக்கிற அக்கட்சி தலைவர் லாலு, மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், யாருடனும் பேசாமல், மதிய உணவு எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர். இது ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தொண்டர்களுக்கு கவலையை அளித்தது. இப்படி 15 ஆண்டுகளாக மிகப்பெரிய சரிவில் இருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம், அக்டோபர், நவம்பர் நடைபெற போகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மீண்டும் ஒரு முறை, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மகா gகtபந்தன் என்ற பெயரில் பிரமாண்ட கூட்டணி அமைத்துள்ளது. எதிர் வரிசையில், அதே பழைய ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி. இந்த முறை வெற்றி பெற்றால், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு அது மறுவாழ்வு. இல்லையென்றால்....

Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு