நாடாளுமன்றம்
நம்முடைய நாடாளுமன்றம் எப்படி உருவானது, எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.
தற்போதைய நமது நாடாளுமன்றம், கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் ‘கவுன்சில் ஆப் கவர்னர் ஜெனரல் ஆப் இந்தியா’ என்றும், அதன் பின்னர் "1920-47 வரை மத்திய சட்ட மன்றம் என்றும், 1947-49 வரை அரசியல் சட்ட வரைவு மன்றம் என்றும், 1950-52 இடைக்கால நாடாளுமன்றம் என்றும், 1952ல் இந்திய நாடாளுமன்றம் என்றும் ஆனது. தற்போது உள்ள நாடாளுமன்றக் கட்டிடம் 1927-ல் கட்டப்பட்டது. நாடாளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர், மக்களவை, மாநிலங்களவை ஆகிய மூன்றும் சேர்ந்தது.
மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்கள் உள்ளனர். 25 வயது நிரம்பிய, வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறாத, மனநிலை பாதிக்கப்படாத, திவால் ஆகாதவர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.எந்தக் கட்சி அல்லது கூட்டணி, குறைந்தபட்சம் 272 உறுப்பினர்களை கொண்டிருக்கிறதோ, அந்த கட்சியை அல்லது கூட்டணியை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, சபையின் உறுப்பினராக உறுதிமொழி ஏற்க செய்து வைப்பது இடைக்கால அவைத்தலைவர் ஆகும். இடைக்கால தலைவராக நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரை குடியரசுத் தலைவர் நியமிப்பார்.இந்த அவையில்
தமிழகத்தில் இருந்து 39 உறுப்பினர்கள் உள்ளனர்.
மாநிலங்களவை 250 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களில் சட்டமன்ற உறுப்பினர்களால் 238 பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த அவையின் உறுப்பினராக 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இந்த அவையின் தலைவராக, துணைக் குடியரசுத் தலைவர் இருப்பார்.
மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் 12 பேர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படுவார்கள்.
துறை சார்ந்த அறிஞர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
சச்சின் டெண்டுல்கர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா போன்றவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள்.
மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.மாநிலங்களவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் பதவி காலம், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நிறைவு பெறும் வகையில் உள்ளது. தமிழகத்தில் இருந்து 18 உறுப்பினர்கள் இந்த அவையில் உள்ளனர்.
பாராளுமன்றத்தில் எந்த ஒரு அவையையும் கூட்டுவதற்கு, பத்தில் ஒரு உறுப்பினர் இருக்க வேண்டும். இதை கோரம் என்பார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் அவை ஒத்திவைக்கப்படும்.
அமைச்சரவை என்பது பிரதமரை தலைவராகக் கொண்டு, குடியரசுத் தலைவருக்கு அவர் கடமையை நிறைவேற்றுவதில் உதவியும் ஆலோசனையும் வழங்கும் அமைப்பாகும். ஒருவர் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத பட்சத்தில் அமைச்சராகவோ, பிரதமராக வோ பொறுப்பேற்றால் ஆறு மாதத்திற்குள் ஏதேனும் ஒரு அவையில் உறுப்பினராக வேண்டும்.
அடுத்து, சில நாடுகள் நாடாளுமன்றங்களை எவ்வாறு அழைக்கின்றன என்பதை பார்ப்போம்.
பாகிஸ்தான் ‘மஜ்லிஸ் கி ஷீரா’ என்றும், ஜப்பான் ‘டயட்’ என்றும், இங்கிலாந்து இங்கிலாந்து மக்கள் சபை என்றும், அமெரிக்கா ‘காங்கிரஸ்’ என்றும், சீனா ‘தேசிய மக்கள் காங்கிரஸ்’ என்றும், ஆஸ்திரேலியா பெடரல் நாடாளுமன்றம் என்றும் குறிப்பிடுகிறது.
Comments
Post a Comment