வீரன் சுந்தரலிங்கம்

 தென்பாண்டி சீமையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, உற்ற தளபதியாய் விளங்கியவர். ஆங்கிலேயருக்கு எதிராக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் என்ற பெருமைக்குரியவர் வீரன் சுந்தரலிங்கம். 


இன்றைய தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள கவர்னகிரி கிராமத்தில் 1770ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி, கட்டக் கருப்பணனுக்கும், முத்திருளி அம்மாளுக்கும் பிறந்தவர் சுந்தரலிங்கம். 


இளம் வயதில் நாகனார் என்பவரிடம் சிலம்பம், மல்யுத்தம், வாள் சண்டை உள்ளிட்ட பல்வேறு போர் கலைகளை கற்றுத் தேர்ந்த சுந்தரலிங்கம், அப்பகுதியில் நடைபெறும் பல்வேறு சிலம்பம், மல்யுத்தப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டினார். சுந்தரலிங்கத்தின் புகழ், அப்பகுதியினர் இடையே பிரபலமாகி இருந்தது. 


இந்த சமயத்தில், கவர்னகிரியில் உள்ள கண்மாயை, பக்கத்து பாளையங்காரர்கள் மறிந்துக் கட்டுகிறார்கள் என்று, ஊர்மக்களுக்கு தகவல் வந்தது. இதைத் தடுக்க நினைத்த

கவர்னகிரி கிராமத்தினர், சுந்தரலிங்கம் தலைமையில் ஒரு சிறு படையாகத் திரண்டு, அவர்களுடன் மோதி, கண்மாய் மறித்து கட்டுவதைத் தடுத்து நிறுத்தினார்கள்.

இதில் மிகத் திறமையாக போரிட்ட சுந்தரலிங்கத்தின் புகழ், அப்பகுதியில் உள்ள மற்ற சமஸ்தானத்தை ஆண்ட பாளையக்காரர்கள் வரை எட்டியது. 


அப்போது பாஞ்சாலங்குறிச்சி சமஸ்தானத்தை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மனும், எட்டையபுரம் சமஸ்தானத்தை ஆண்ட எட்டப்பனும், சுந்தரலிங்கத்தை தங்களது படையில் சேர்த்துக்கொள்ள தூது அனுப்புகிறார்கள். 


சுந்தரலிங்கமும் அவரது தலைமையிலான படையும், யாருடன் சேர்வது என்று, ஆசிரியர் நாகனார் தலைமையில் கலந்து விவாதிக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் சேர்வதே சிறந்தது என்று முடிவெடுத்தார்கள். 


அதன்படி, வீரன் சுந்தரலிங்கம் தலைமையிலான படைக்குழு, வீரபாண்டிய கட்டபொம்மனுடன் சேர்ந்தது.  வீரன் சுந்தரலிங்கத்தை சிறப்பிக்கும் விதமாக, ஒற்றர்கள் படைக்குத் தளபதியாக அமர்த்துகிறார் வீரபாண்டிய கட்டபொம்மன். பின்னர், சுந்தரலிங்கத்தின் வீரம் மற்றும் மதிநுட்பத்தைப் பார்த்து, அவரிடம் தானியக்கிடங்கு, வெடிமருந்துக் கிடங்கு ஆகியவற்றையும் ஒப்படைக்கிறார். 


வரி செலுத்த மறுத்ததால் ஆங்கிலேயர்களுடன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அதிகாரிகள், கட்டப்பொம்மனை சந்திப்பதாக கூறி, பல இடங்களுக்கு வரச் சொல்லி, பல நாட்கள் அலைக்கழித்தார்கள். இறுதியாக ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரையை கட்டப்பொம்மன் சந்திக்கிறார். 


அப்போது சுந்தரலிங்கம், மாறுவேடத்தில் அங்கு இருக்கிறார். அந்தச் சந்திப்பின்போது, ஜாக்சன் துரை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு வரி செலுத்த வலியுறுத்துகிறார். இதை கேட்டு ஆவேசமான கட்டப்பொம்மன், வரி தர மறுத்து, வீரமுழக்கம் இடுகிறார். 


இறுதியில் விவாதம் முற்றி, ஒரு கட்டத்தில், கட்டபொம்மனைக் கைது செய்ய உத்தரவிடுகிறார் ஜாக்சன்துரை. உடனடியாக வீரபாண்டிய கட்டபொம்மனும், மறைந்திருந்த சுந்தரலிங்கமும் அங்கிருந்த ஆங்கிலேயப் படை வீரர்களை தமது வாள்களாள் பதம் பார்த்து, அங்கிருந்து தப்பிச் சென்றனர். 


இதையடுத்து கட்டபொம்மனை பிடிக்க பிரிட்டிஷார், 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் ஆங்கிலேயர்கள் பெரும் படையாக குவிந்திருந்தனர். பிரிட்டிஷாருடன் கட்டபொம்மனின் படை கடும் சண்டையிட்டது. ஆனாலும், வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகள் கொண்டு வெறிபிடித்து தாக்கும் பிரிட்டிஷாரின் படையை வீரபாண்டிய கட்டபொம்மன் படையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 


ஆங்கிலேயருடைய வெற்றியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று எண்ணிய சுந்தரலிங்கம், தன்னையே இழக்கத் தயாரானார். 1799ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தனது மாமன் மகள் வடிவுடன், ஆடு மேய்ப்பவர்களைப் போல வேடமணிந்து, வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனார். அங்கு, தீப்பந்தத்தைக் கொளுத்தி, தங்கள் மீது தீ வைத்துக்கொண்ட சுந்தரலிங்கமும், வடிவும், உடம்பெல்லாம் தீப்பிழம்பாக, வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பிரிட்டிஷாரின் வெடிமருந்து கிடங்கு வெடித்துச் சிதறியது. இப்படி, ஒரு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி, ஆங்கிலேய படையை சிதறடித்தவர் வீரன் சுந்தரலிங்கம்.

Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு