ஆட்சி கவிழ்ப்புகளின் கதை
2017 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்த போது, பாஜகவோ அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி கொண்டிருந்தது. எல்லா மாநிலங்களிலும் எம்எல்ஏக்கள், மந்திரிகள் தான் கட்சி மாறுவார்கள். இந்த மாநிலத்தில் தான் முதலமைச்சரே கட்சி மாறிய கதை நடந்தது.
2014ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும், பாஜக 11 இடங்களிலும், அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி 5 இடத்திலும் சுயேச்சைகளாக 2 பேரும் வெற்றி இருந்தார்கள். அந்த மாநிலத்தில்
காங்கிரஸ் 49.50 சதவீத வாக்குகளையும், பாஜக 30.97 சதவீத வாக்குகளையும் பெற்றது. முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நபம் துகி (Nabam Tuki)
பொறுப்பேற்றார்.
முதல்வராக இருந்த நபம் துகிக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கையில், ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சி சேர்ந்த எம்எல்ஏக்கள் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் சில எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்படிதான் முதலில் ஆட்சியில் குழப்பம்
ஏற்பட ஆரம்பித்தது. இப்படி பல்வேறு அரசியல் குழப்பங்களை தாண்டி 2016 ஜூலை மாதம் Pema Khandu என்பவரை காங்கிரஸ் கட்சி முதல்வராக்கியது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே, முன்னாள் முதல்வர் நபம் துகியை தவிர, ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் எம்எல்ஏக்களோடு Pema Khandu , காங்கிரசிலிருந்து விலகி அருணாச்சலபிரதேசம் மக்கள் கட்சியில் இணைந்து முதல்வரானார். கொஞ்ச நாளிலேயே
Pema Khandu-வை அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி சஸ்பென்ட் செய்ய, உடனே Pema Khandu,
அவரோடு சேர்ந்து 34 எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு பாஜகவில் 2016 டிசம்பர் 31ஆம் தேதி ஐக்கியமாகி முதல்வர் ஆகிவிட்டார்.
2017 பிப்ரவரி மாதம் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதேபோல் பஞ்சாபில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
40 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட கோவாவில், பாஜக முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில்
பாஜக 32.48 வாக்கு சதவீதங்களை பெற்று 13 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 28.35 வாக்கு சதவீதங்களை பெற்று, 4 கூடுதலாக 17 இடங்களையும் பிடித்தது. கோவா fபார்வர்டு மற்றும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சிகள் தலா மூன்று இடங்களை பிடித்தன.
கோவாவில் ஆட்சி அமைக்க பாஜகவும் காங்கிரஸூம் சாம தண்ட பேதங்களை கையாளத் துவங்கின. அப்போது இரு சுயேச்சைகள், கோவா fபார்வர்டு, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமானால், மனோகர் பாரிக்கர் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என நிபந்தனை விதித்தன. இதற்கு பாஜக மேலிடமும் சம்மதம் தெரிவித்ததையடுத்து மனோகர் பாரிக்கர் தலைமையில் கோவாவில் 2017 பாஜக ஆட்சி அமைத்தது.
60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்திற்கு
2017 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக 36.28 சதவீத வாக்குகளை பெற்று 21 இடங்களிலும், காங்கிரஸ் 35.11 சதவீத வாக்குகளை பெற்று 28 இடங்களிலும் வெற்றி பெற்றன. அந்த தேர்தலில் அம்மாநில முதலமைச்சராக இருந்த ஓக்ரோம் இபோபி
(Okram Ibobi Singh)
காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை எந்த கட்சியும் பெறாத நிலையில்
காங்கிரஸூம், பாஜகவும் மணிப்பூர் மாநிலத்திலும் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தன.
4 இடங்களைப் பிடித்த நாகாலாந்து மக்கள் முன்னணி, அதேபோல் 4 இடங்களைப் பிடித்த தேசிய மக்கள் கட்சி, ஒரு இடத்தைப் பிடித்த லோக் ஜனசக்தி மற்றும் சுயேட்சைகளும் பாஜகவுக்கு ஆதாரவு அளித்ததை அடுத்து, பாஜகவை ஆட்சி அமைக்க மாநில ஆளுநராக இருந்த Najma Heptulla கூப்பிட்டார். இதனையடுத்து Biren Singh தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது.
224 இடங்கள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு 2018 ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் 36.22 சதவீத வாக்குகளைப் பெற்று, 104 இடங்களை பிடித்தது பாஜக. 38.04 சதவீத வாக்குகளைப் பெற்று 78 இடங்களை பிடித்தது காங்கிரஸ். 18.36 சதவீத வாக்குகளைப் பெற்று 37 இடங்களை பிடித்தது மதசார்பற்ற ஜனதா தளம். இந்த தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரான சித்தராமையா, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வென்றார். தனி பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. இருப்பினும் அதிக தொகுதிகளில் வென்ற பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க, ஆளுநர் வஜுபாய் வாலா
அழைத்தார். இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி, உச்சநீதிமன்றத்தில், 2018 மே 17ம் தேதி அவசர வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மறுநாளே மே 18 தேதி அன்று மாலை 4 மணிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க எடியூரப்பாவிற்கு ஆணையிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன் சட்டசபையில் உருக்கமாக பேசிய எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கட்சி கூட்டணி அமைது, மதச்சார்பற்ற ஜனதா தளம் குமாரசாமி முதல்வர் ஆனார். 2019 ஜூலை மாதம் கர்நாடகா அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. திடீரென்று
அதிருப்தியடைந்த காங்கிரஸை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து மும்பையில் உள்ள சொகுசு ஹோட்டலில் போய் தங்கினர். 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். இறுதியாக குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று, மீண்டும் எடியூரப்பா முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
2019 நவம்பரில் 288 இடங்கள் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனது நீண்டநாள் தோஸ்த்-தான சிவசேனாவுடன் சேர்ந்து தேவேந்திர fபட்னாவிஸை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து களமிறங்கியது. அதேபோல் காங்கிரஸும் தனது தோஸ்த்-தான தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து களம் கண்டது. இந்த தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி 42.11 சதவீத வாக்குகளுடன் 161 இடங்களை பிடித்தது. தனியாக பாஜக 105 இடங்களை, சிவசேனா 56 இடங்களைப் பிடித்து இருந்தது. திடீர் திருப்பமாக சிவசேனா முதலமைச்சர் பதவி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து. இதனையடுத்து அம்மாநில அரசியலிலும் குழப்பங்கள் ஏற்பட்டது. 32.61 சதவீத வாக்குகளைப் பெற்று 98 இடங்களை
பெற்றிருந்த காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, ஆட்டத்தை ஆரம்பித்தது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகா விகாஸ் என்ற பெயரில் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் தலைமையில் 28ஆம் தேதி இரவு ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்தார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். திடீர் திருப்பமாக மறுநாள் அதிகாலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் சரத்குமாரின் உறவினருமான அஜித் பவார் துணை முதலமைச்சராகவும், பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர fபட்னாவிஸ் முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்களை திரட்ட முடியாததால், மூன்றே நாள்களில் இருவரும் பதவியை ராஜிநாமா செய்தனா்.
இதையடுத்து நாடு முழுவதும் மஹாராஷ்டிரா அரசியலைப் பற்றி பேச்சுக்கள் அனல் பறக்க ஆரம்பித்தது. இப்படி அரசியல் நாடகங்கள் அரங்கேற்றி, இறுதியில் மகா விகாஸ் கூட்டணி சார்பில் 2019 நவம்பர் 28ஆம் தேதி சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய அஜித் பவார் மீண்டும் டிசம்பர் 28ஆம் தேதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்று அரசியல் அரங்கில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
சட்டமன்றத் தேர்தலில்
பெரும்பான்மை பிடிக்க முடியாத மாநிலங்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு யூக, வியூகங்களை மாறி மாறி அமைத்து, அரசை கவிழ்த்து, ஆட்சியை பிடிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், லேட்டஸ்டாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சர் கமல்நாத் மற்றும் இளம் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா இடையே நீண்ட நாட்களாக நடந்து வந்த பனிப்போர் முற்றி வெடித்தது. தற்போது ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளார். இது மத்திய பிரதேச அரசியலில் மட்டும் இன்றி நாடு முழுவதும் அரசியல் உஷ்ணத்தை அதிகரித்துள்ளது. 230 இடங்களை கொண்ட மத்திய பிரதேசத்திற்கு
2018 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் 40.89 சதவீத வாக்குகளை பெற்று
114 இடங்களை பிடித்த காங்கிரஸ், கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. அதேசமயம் ஆட்சியை இழந்த பாஜக
41.02 சதவீத வாக்குகளைப் பெற்று 109 இடங்களை பிடித்து இருந்தது. மாநிலத்தில் ஆள்வதற்கு மக்கள் ஏறக்குறைய இரு கட்சிகளுக்கும் சம வாய்ப்பை வழங்குவதாக அமைந்து இருந்தது தேர்தல் முடிவுகள்.
தற்போது ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 பேர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அம்மாநில காங்கிரஸ் ஆட்சி தொடர்வதற்கு சிக்கல் எழுந்துள்ளது.
எந்த மாநிலங்களில் எல்லாம் ஒரு கட்சி மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று வாக்குகளை பெறமுடியாமல் போகிறோதோ, அம்மாநிலத்தில் உள்ள பிரதான கட்சிகள் ஆடு புலி ஆட்டத்தை அரசியல் களத்தில் ஆட ஆரம்பிக்கின்றன.
Comments
Post a Comment