ஆச்சார்யா வினோபா பாவே.

"காந்தியத்தை என்னைவிட சரியாகப் பின்பற்றுபவர்... எனக்கு அவர் மாணவர் அல்ல... குரு'' என காந்தியால் போற்றப்பட்டவர். ஆயுதப்புரட்சியால் தான் நிலமற்றவர்களுக்கு நிலச்சுவான்தார்களிடம் இருந்து நிலத்தை பெற்றுத் தரமுடியும் என்று கம்யூனிசவாதிகள் சொல்லிய நிலையில், அமைதியான முறையில் எந்தவித உயிரிழப்புகளும் இன்றி நிலச்சுவான்தார்களிடம் இருந்து நிலத்தை வாங்கி, பகிர்ந்து அளிக்க முடியும் என்ற செயல்படுத்திக் காட்டியவர்....  இப்படி அசாத்திய செயல்களை சாத்தியமாக்கியவர், ஆச்சார்யா வினோபா பாவே.

1895ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி மகாராஷ்டிராவின் கடலோர கொங்கண் பகுதியில் உள்ள Gagoda என்ற குக்கிராமத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் Vinayak Narahari Bhave.

யோகிகள், தத்துவ ஞானிகளின்  கருத்துக்களை இளம் வயதிலேயே உள்வாங்கிய பாவேவுக்கு, வழக்கமான பள்ளி பாடங்கள் போதுமானதாக இல்லை. பல்வேறு ஆன்மீக சாதனங்களைக் கற்றார். பிரம்மச்சரியத்தை, வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பது என்று உறுதி பூண்டார்.

1918 ஆம் ஆண்டில் , இடைநிலை தேர்வுக்கு பம்பாய்க்கு செல்லும் வழியில், ஒரு செய்தித்தாளை வாங்கிப் படிக்கிறார். அந்த செய்தித்தாளில், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பேசிய காந்தியின் உரை இருந்தது. அந்தப் பேச்சைப் படித்த வினோபா பாவேவுக்கு, உள்ளுக்குள் ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது.

உடனடியாக, தனது பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை தீ வைத்தார். அதுவரை தன்னுடைய ஆன்மீக தேடலுக்காக இமயமலைக்கோ, வங்கத்திற்கோ செல்ல வேண்டும் என்று எண்ணிருந்த பாவே, இனி காந்தியின் திருவடிகளில் சரண் அடைவதே சிறந்தது என்று முடிவு செய்தார்.

பின்னர், காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். பாவேவுக்கு காந்தி பதில் எழுத, கடிதங்கள் மூலம், தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. ஒருநாள் அகமதாபாத்தில் உள்ள Kochrab Ashram த்துக்கு வருமாறு பாவேவுக்கு காந்தி அழைப்பு விடுத்தார். பாவே, 7 ஜூன் 1916இல் காந்தியை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு, வினோபாவின் வாழ்க்கைப் போக்கையே மாற்றியது. காந்தியின் ஆசிரமத்தில் கற்பித்தல், படிப்பது, சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்துவது, ஆன்மீக தேடல்கள் போன்ற அனைத்து நடவடிக்கைகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றார். 1921 ஏப்ரல் 8 ஆம் தேதி, காந்தி விருப்பப்படி, மகாராஷ்டிரா மாநிலம் Wardhaவில் இருந்த Brahma Vidya Mandir ஆசிரமத்தின் பொறுப்பை ஏற்றார்.

1940களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக காந்தி தொடங்கிய தனிநபர் சத்தியாக்கிரகத்தில், முதல் நபராக வினோபா பாவே கைதாவார் என்று காந்தி அறிவித்தபோது; அனைவரும், யார் இந்த வினோபா பாவே என்று ஆச்சரியமாக பார்த்தனர்.

தனி நபர் சத்தியாக்கிரகத்திற்காக 5 ஆண்டுகள் சிறை சென்றார் வினோபா பாவே. சிறையில், பல்வேறு மொழிகளை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார்.
இப்படி காந்தியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக வினோபா பாவே இருந்தார். இவரை காந்தி, தன்னுடைய ஆன்மீக வாரிசு ஆக்கினார்.

உலகம் முழுவதும், நிலப்பிரபுக்களிடம் இருந்து நிலத்தை வாங்கி, நிலமற்ற விவசாயிகளுக்கு கொடுப்பதற்காக ஆயுதம் தூக்கி புரட்சிகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில்; தன்னுடைய கால்களையே புரட்சிக்கு பயன்படுத்தியவர் வினோபா பாவே.

இந்தியா சுதந்திரம் வாங்கிய பிறகு, நிலச்சுவான்தார்களுக்கும் நிலமற்றவர்களுக்கும் இடையே பல்வேறு பகுதிகளில் மோதல் நிலவி வந்தது. தெலங்கானா பகுதியில் இடதுசாரி தீவிரவாத குழுக்களுக்கும், நிலச்சுவான்தார்களுக்கும்தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறைகளுக்கு தீர்வு காண்பதில், அன்றைய மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்தன.

இதை உணர்ந்த வினோபா பாவே, பிரச்சினையை தீர்ப்பதற்காக தெலங்கானாவின்
Nalgonda மாவட்டம் Pochampally நடைபெற்ற சர்வோதய மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டிற்கு, வர்தாவில் இருந்த தன்னுடைய ஆசிரமத்தில் இருந்து நடந்தே வந்தார் பாவே.

அங்கு கூடியிருந்த மக்களிடம் உங்கள் பிரச்சனை என்னவென்று கேட்டார்.
தாங்கள் விவசாயம் செய்து பிழைப்பு நடத்த, 80 ஏக்கர் நிலம் வேண்டும். அதை இடதுசாரி குழுக்கள் தர வேண்டாம்; அரசே கொடுக்கட்டும் என்றனர். ஆனால் அரசோ, இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தது.

இந்த கூட்டத்தில் வினோபா பாவே, "ஒருவேளை அரசு, நிலம் ஏற்பாடு செய்யவில்லை என்றால், வேறு வழி எதுவும் செய்துகொள்ள முடியுமா?" என்று கேட்டார். பிரச்சினையை தீர்க்கக்கூடிய எந்த பதிலும் வராததால், உருக்கமாக, "நான் சர்ச்சைக்குரிய பகுதிகளில் பயணம் மேற்கொள்வது இதுவே கடைசி முறையாக இருக்கக் கூடும்" என்றார்.

அப்பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்த ராமசந்திர ரெட்டி எழுந்து, தன்னுடைய 1300 ஏக்கர் நிலத்தில் இருந்து, 100 ஏக்கர் நிலத்தை கொடுக்கிறேன் என்றார். தனது முடிவில் ராமச்சந்திர ரெட்டி உறுதியாக இருக்கிறாரா என்பதை சோதிக்க, மாலையில் இது குறித்து முடிவு எடுப்போம் என்று கூறிவிட்டார்.

பிறகு, மாலை பிரார்த்தனை கூட்டம் முடிந்து, பாவே அமைதி காத்தார். மீண்டும் ராமசந்திர ரெட்டி எழுந்து, “நான் 100 ஏக்கர் நிலத்தைக் கொடுக்கிறேன்” என்று கூறினார். நிலத்திற்காக தினம்தினம் ரத்தம் சிந்தி கொண்டிருக்கும் பகுதியில் மனமுவந்து ஒருவர் நிலத்தை தானமாகக் கொடுப்பது மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

நிலத்தைப் பெற்றவர்களோ இன்னும் ஒரு படி மேலே போய், ‘எங்களுக்கு 80 ஏக்கர் போதுமானது. அதை விட ஒரு ஏக்கர் கூட கூடுதலாகத் தேவையில்லை’ என்று உறுதியாக நின்றனர். இது மற்றுமொரு ஆச்சரியம். இதனை இறைவனின் திட்டமாக உணர்ந்த வினோபா பாவே, பூமி தான இயக்கத்தைத் தொடங்கினார்.

தேசம் முழுவதும் 13 ஆண்டுகள் 70,000 கிலோ மீட்டருக்கும் மேல் நடைபயணம் மேற்கொண்டு 3 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை, பூமி இயக்கத்துக்காக தானமாக பெற்று, நிலமற்ற ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளித்தார்.

உலகம் முழுவதும் துப்பாக்கி கொண்டு நிலம் பறிக்கப்பட்டபோது, எந்த துப்பாக்கியும் இன்றி, அகிம்சையின் வழியில் மாபெரும் புரட்சி செய்த வினோபா பாவே, 1982-ம் ஆண்டு 15-ம் தேதி காலமானார்.

மத்திய அரசால் 1983-ல் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

ஆட்சி கவிழ்ப்புகளின் கதை

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்கும்?

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை