இந்திராவின் காதல்..!

 இந்திராவின் காதல்..! 


இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி

இந்த பெயர்களுக்குப் பின்னால் உள்ள காந்தி என்பது எப்படி வந்தது தெரியுமா? அதை தெரிந்துகொள்ள வேண்டுமானால், விடுதலை போராட்டத்துடன் சேர்ந்த அழகான இந்திரா, பெரோஸின் காதல் கதையையும் தெரிந்துகொள்ள வேண்டும். 


1930ஆம் ஆண்டு அலகாபாத்தில் உள்ள

christian கல்லூரிக்கு வெளியே, தகதகக்கும் வெயிலில் கமலா நேரு, அவரது 13 வயது மகள் இந்திரா பிரியதர்ஷினி மற்றும் காங்கிரஸ் பெண் தொண்டர்கள் சிலருடன், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.   


வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், கமலா நேரு திடீரென மயங்கி விழுந்தார்.

மயங்கி விழுந்த கமலா நேருவை, கல்லூரி மாணவர் ஒருவர் தாங்கி பிடித்து, நிழல் பகுதிக்கு அழைத்துச் சென்று, ஆசுவாசப்படுத்தி அமர வைத்தார். பின்னர் ஒரு வண்டியை பிடித்து, ஆனந்த பவனுக்கு அழைத்து சென்றார்... அந்த மாணவர் தான் ஃபெரோஸ் ஜஹாங்கிர் காண்டி (Feroze Jehangir Ghandy). காந்தி இல்லை காண்டி. பார்சி சமூகத்தை சேர்ந்த பெயர். இவருடைய வம்சத்துக்கும், காந்தியின் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 


அன்று நடந்தது தான் இந்திரா - fபெரோஸின் முதல் சந்திப்பு. 


இந்த சமயத்தில் தான் கமலா நேருவுக்கு pleurisy என்ற நோய் தாக்க ஆரம்பித்து இருந்தது. நோய் தாக்குதலுக்கு உள்ளானபோதும்,  தேசத்தின் மீது கமலா நேரு கொண்டிருந்த பக்தி.. பெரோஸ் காந்திக்கு திகைப்பூட்டியது மட்டுமல்லாமல்,  கமலா நேரு மீது அளவு கடந்த மரியாதையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, ஆனந்த பவனுக்கு அடிக்கடி சென்று  வர ஆரம்பித்த பெரோஸ், நாட்டுக்காக பாடுபடும் நேரு  தம்பதிக்காக, எதையும் செய்ய சித்தமானார். 


பெரோசின் விடுதலை போராட்டம் காரணமாக, ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். தண்டனை முடிந்து வெளியே வந்த பெரோஸ், நேராக, தனது விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட கமலா நேருவை, ஆனந்த பவனுக்கு சென்று சந்தித்தார்‌. 


அப்போது, கமலா நேரு, நோய் முற்றி கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.  ஜவகர்லால் நேரு, 4 ஆண்டு தண்டனை பெற்று சிறையில் இருந்தார். இதனால், கமலா நேருவுக்கு தேவைப்படும் உதவிகளை  அடிக்கடி சென்று செய்துவந்தார் ஃபெரோஸ். இந்த சமயத்தில்,

அழகிய பருவ பெண்ணான இந்திராவுடன் தொடர்ந்து உரையாடும் சந்தர்ப்பம் பெரோஸ் காண்டிக்கு ஏற்பட்டது. 


கமலா நேருவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைய, மேல் சிகிச்சைக்காக பம்பாய்க்கும், கல்கத்தாவிற்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பெரோஸ் காண்டியும் கூடவே சென்றார். 

மலை வாசஸ்தலமான,  bhowali-யில்  கமலா நேரு ஓய்வு எடுத்தால் நல்லது என்று டாக்டர்கள் அறிவுறுத்த, bhowali-க்கு  சென்றார் கமலா நேரு. இந்த நீண்ட பயணத்தில் பெரோஸ் கூடவே சென்றார். 


ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கமலா நேருவுக்கு துணையாக சென்ற பெரோஸூம், இந்திராவும் மனம் விட்டு பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது...  


இந்திராவிடம் தன் காதலை வெளிப்படுத்தினார் பெரோஸ் காண்டி..  இந்திரா, "அவசரம் வேண்டாம்; கொஞ்ச நாள் கழித்து முடிவு செய்து கொள்ளலாம்" என்று பெரோஸ் காதலை நாசூக்காக தவிர்த்து விட்டார்.. தவிர்த்துவிட்டார் என்று சொல்வதைவிட தள்ளிவைத்தார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் பெரோஸ் மீது இந்திராவுக்கும் நல்ல அபிப்பிராயம் இருந்தது.. 


தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த கமலா நேருவுக்கு, மேல் சிகிச்சை அளிக்க 

1933ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்ததை அடுத்து, அங்கு சென்றார் கமலா நேரு. அவருடன் இந்திராவும் சென்றார். 


இந்திராவுடனான இந்த பிரிவு, பெரோஸ் காண்டியின் மனதில்  இனம்புரியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திராவின் நினைவு, அவரை படிப்பிலும் கவனத்தை சிதறடித்தது. தனது காதல் எங்கே ஒரு தலைக் காதலாக முடிந்து விடுமோ என்று நினைத்து கொண்டு இருந்த சமயத்தில், பெரோஸ்க்கு அவரது குடும்பத்தினர் ஒரு நல்ல செய்தியை சொன்னார்கள். 


படிப்பில் கவனம் செலுத்தாமல்  உள்ள  பெரோசை நினைத்து கவலை கொண்ட அவரது குடும்பத்தினர், அவரை லண்டனுக்கு மேல்படிப்புக்கு அனுப்ப முடிவு செய்தனர்.  இந்த முடிவை கேட்ட பெரோஸ் காந்திக்கு  ஏக சந்தோஷம். காரணம், லண்டனுக்கு போனால் சுவிட்சர்லாந்துக்கு சென்று கமலா நேருவையும், இந்திராவையும் சந்திக்கலாம் என்பதுதான். 


The London School of Economics-ல் படிக்க லண்டனுக்கு சென்ற பெரோஸ்,  சுவிட்சர்லாந்துக்கு  அடிக்கடி சென்று கமலா நேருவையும், இந்திராவையும் சந்தித்தார்.  பெரோஸ் காந்தி செய்த பணிவிடை கண்டு மெய்சிலிர்த்து போன கமலா நேரு, பெரோஸ் மீது அளவற்ற அன்பை பொழிந்தார்.

தொடர்ந்து, 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த கமலா நேரு, 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி சுவிட்சர்லாந்திலேயே உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு சற்று முன்பாக, பெரோஸ் காந்தியை இந்திரா திருமணம் செய்து கொள்ளலாம் என்ற தனது எண்ணத்தை மகளிடம் தெரிவித்தார். 


தாய் இறந்த பிறகு, பெரோஸை விட்டு இந்திரா மெதுவாக விலக ஆரம்பித்தார். இந்திரா காந்திக்கு ஏதோ ஒரு தனிமை தேவைப்பட்டது. பெரோஸ் திருமண பேச்சை ஆரம்பித்தால், உடனே அவற்றை தவிர்த்தார் இந்திரா. இருப்பினும் பெரோஸ் மனம் தளரவில்லை. 


சிறிய இடைவெளியில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு படிக்க இந்திரா லண்டன் வந்தார். இந்த செய்தி பெரோஸ் காண்டிக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஒருநாள் இருவரும் சந்தித்து நீண்ட நேரம் அரசியல், இலக்கியம், சமூகம், காதல் என பல்வேறு விஷயங்கள் பேசினார்கள். பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திராவின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தார் பெரோஸ் காண்டி. பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து தங்களுடைய காதலை ஆழமாக வளர்த்தனர். 


இந்த சமயத்தில் 2ஆம் உலகப் போர் வெடித்தது. இந்திராவை இந்தியாவுக்கு திரும்புமாறு நேரு கேட்டுக் கொண்டார். இந்திரா, இந்தியா திரும்பினார் ‌.  சிறுது காலம் கழித்து பெரோசும் இந்தியா திரும்பினார். 


இந்திரா, பெரோஸ் காதல் நேருவுக்கு முழுமையாக தெரியவந்தபோது, அதை  ஏற்க மறுத்தார். 

ஏன் என்ற காரணத்தை  கூறவில்லை.

நேருவிடம் கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த காதலை தடுக்க தனது கடைசி முயற்சியை மேற்கொண்ட நேரு, இந்த விஷயத்தை மகாத்மா காந்தியிடம் எடுத்துச் சென்றார். நேருவின் வேண்டுகோள் படி, இந்திரா, பெரோஸ் காதலை பிரித்துவிட மகாத்மா காந்தி முயற்சித்தார். இதற்காக இருவரையும் தனித்தனியாக கூப்பிட்டு பேசினார். அப்போது ஒரு நாள் பெரோஸூம் இந்திராவும் சேர்ந்து போய் காந்தியைப் பார்த்தார்கள்.

"எங்களை நீங்கள் பிரிக்க முடியாது. என்ன நடந்தாலும், நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளோம். நீங்களாக செய்து வைத்தால் நல்லது; இல்லாவிட்டால் நாங்களாகவே செய்து கொள்வோம்" என தடாலடியாக சொல்லி விட்டார்கள். இந்த உறுதியைப் பார்த்த காந்தி, காதலர்களின் பக்கம் சாய்ந்தார்.  அவர்களுக்காக நேருவிடம் பேசினார். நேருவுக்கோ தன் ஆசான் சொல்லியதால் தட்ட முடியவில்லை. 


1942ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி பெரோஸ் கான்டிக்கும் இந்திரா பிரியதர்ஷினிக்கும்

அலகாபாத்தில் உள்ள நேருவின் பூர்வீக வீடான ஆனந்தபவனில்,

ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த சமஸ்கிருத பேராசிரியர் பண்டிட் லட்சுமிதர் சாஸ்திரி வேத மந்திரங்களை முழங்க, இருவரும் மகிழ்ச்சியோடு மாலை மாற்றிக்கொண்டார்கள். 


அன்றில் இருந்து இந்திரா பிரியதர்ஷினி, இந்திரா காண்டியாக மாறினார். காண்டி, பல்வேறு காரணங்களுக்காக காந்தியாக மாறிவிட்டது.

இப்படி தான்,  ராகுல் வரை காந்தி வந்தது.

Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு