மொய் விருந்து

 கல்யாணம், காது குத்து, சடங்கு போன்ற விழாக்களில் மொய் வாங்கி பார்த்திருப்போம், ஆனா, மொய் வாங்குவதற்காகவே விருந்து வைப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில், மொய் விருந்து ரொம்ப பிரபலம். இந்த மொய் விருந்து, அனைத்து சமூகத்து மக்களாலும் நடத்தப்படுகிறது. இதில் ஜாதி, சமயத்திற்கு அப்பால், பெரும் திரளாக கலந்து கொண்டு மொய் செய்வார்கள். மொய் செய்பவர்களை போலவே, விருந்து வைப்பவர்களிலும் ஏழை, பணக்காரர்கள் உண்டு. அவரவர் சக்திக்கு ஏற்ப விருந்து வைப்பார்கள். 

மொய் விருந்து வைப்பதற்கான காரணமும் பல வகை. திருமணம் போன்ற சுப காரியங்கள், தொழில் முடக்கம், பொருளாதார நெருக்கடி ஆகியவை மட்டுமின்றி, "நிறைய மொய் செய்தாகி விட்டது; ஆனால் நாம் இன்னும் விருந்து வைக்கவில்லை" போன்ற காரணங்களும் உண்டு. 

அதனாலேயே மொய் விருந்து விழா, தேவை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இப்படி விருந்து வைப்பவர்களின் வீட்டை, தேவைக்காரர் வீடு என்று அழைக்கிறார்கள். 

ஒருவர் விருந்து வைத்து, குறைந்த பட்சம் நாலரை ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்; அப்போதுதான் அடுத்த விருந்து வைக்க முடியும். ஆண்டுதோறும் மொய் விருந்து வைத்து, அம்பானி ஆகும் ஐடியா எல்லாம் ஏற்கப்படாது. 

விருந்தில் சைவம், அசைவம் இரண்டும் உண்டு. அசைவத்தில் பிரதானம் ஆட்டுக்கறி. 

விழாவுக்கு வந்த கையோடு, முதலில் மொய் செய்துவிட்டு, உறவினர், நண்பர்கள் வேற்று சமூகத்தினர் என்று எந்த வேற்றுமையும் இல்லாமல், அனைவரும் சமமாக அமர்ந்து, ரவுண்டு கட்டி விருந்து சாப்பிட்டு செல்கிறார்கள். 

மொய்விருந்து வைப்பவர்கள், இந்தப் பழக்கம் இல்லாத பகுதிகளில் உறவினர்கள் இருந்தாலும், அவர்களுக்கு அழைப்பிதழ் வைப்பதில்லை. 

இந்த பகுதி, காவிரியின் கிளை ஆறான கல்லணை கால்வாயின் கடைநிலை பகுதியாகும். 


இங்கே தென்னை சாகுபடி அதிகம். தென்னைமரம் 60 நாட்களுக்கு ஒரு முறை மகசூல் தரும் என்பதால், விவசாயிகளுக்கு மொய் பணம் செய்வதில் சிரமம் இல்லை. மேலும் சிலர், தேங்காய் வியாபாரிகளாகவும், தேங்காய் மட்டையில் இருந்து வரும் உபரி பொருட்களில் இருந்து கேக் செய்யும் தொழிலிலும் ஈடுபடுவதால், பணப்புழக்கம் சீராக இருந்து, மொய் செய்வதில் எந்த சிக்கலும் இருக்கவில்லை.

ஆனால் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், இப்பகுதியில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், விருந்தில் தாங்கள் செய்ய வேண்டிய மொய் செய்ய முடியாமல், பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த, விருந்தில் பல லட்சங்கள் முதல் சில கோடிகள் வரை மொய்யாக வசூலாகும். 

இப்படி வரும் பணத்தில் ஒருவர் வீடோ, நிலமோ வாங்கி விட்டால், அதனை முறையாக திருப்பி செய்ய முடியாது என்பதால், தாங்கள் செய்யும் தொழிலில் பாதியளவு பணத்தை

முதலீடு செய்ய வேண்டும்; அப்போது தான் மீண்டும் மொய் செய்ய சிரமம் இருக்காது என்பது, மொய் பெற்று வளமானவர்கள் சொல்கிற தகவல். 


மொய்யை எழுத தனியாக சம்பளத்திற்கு ஆட்கள் வைக்கிறார்கள். அவர்களை கொண்டு மொய் நோட்டில் எழுதுவார்கள்.

இந்த மொய் விருந்து என்பதே ஆனி, ஆடி, ஆவணி ஆகிய மூன்று மாதங்களில் தான் நடத்தப்படுகிறது. ஏனெனில் இந்த மாதங்களில் தான் இங்கு விவசாய வேலைகள் குறைவு. 

விருந்தில் காலை 12 மணிக்குள் மொய் செஞ்சுடனும் என்று சில நடைமுறைகளும் உண்டு.

அதன் பிறகு வரும் மொய்யை, உடனடி பின்வரவு என்று தனியாக வேறு ஒரு நோட்டில் எழுதுவார்கள். மறுநாள் வரும் மொய்யை, பின் வரவு என்று தனியாக வேறு ஒரு நோட்டில் எழுத ஆரம்பித்து விடுவார்கள். 

யாராவது ஒருவர், தொடர்ந்து அந்த பகுதியில் நடக்கும் மொய்விருந்துகளில் மொய்யை பின் வரவு கணக்கில் எழுதி கொண்டே இருப்பாரே ஆனால், அவர் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளதாக மற்றவர்கள் கருதத் தொடங்கி விடுவார்கள். இதனால், அவர் மொய்விருந்து வைக்கும் போது, அவர் செய்த மொய்யை மட்டும் திரும்ப செய்து அவரது கணக்கை நேர் செய்து கொள்வார்கள். 

மொய்விருந்து அழைப்பிதழில், தங்கள் வீட்டு தேவையில், அதாவது தங்கள் வீட்டு விழாவில், என்ன பெயரில் எழுதினோம் என்பதை அழைப்பிதழ் அடியில், குறிப்பு என்று போட்டு எழுதி இருப்பார்கள். 


சிலர் மொய் விருந்து வைத்து, அதிலிருந்து வரும் பணத்தைக் கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கு உடனடியாக திருமணம் செய்தால், அந்த திருமணங்களில், மொய் தவிர்க்கப்படும் என்று அழைப்பிதழில் குறிப்பிடுவார்கள். 


மொய் விருந்தில் சுலபமாக மொய்யை பெற வசதியாக, அந்தந்த ஊர் பெயர்களை தனித்தனியாக குறிப்பிட்டு, போர்டுகள் வைத்து, நான்கைந்து இடங்களாக பிரித்து வாங்குவார்கள்.

வசூல் சில சமயங்களில் கோடிகளை தொடும் என்பதால், வங்கிகளிலிருந்து நோட்டு எண்ணுமி இயந்திரங்களும், துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர்களும் அமர்த்தப்படுவது உண்டு. 


செலவினம் குறையும் என்பதால்

ஐந்து, ஆறு நபர்கள் ஒன்றாக சேர்ந்து மொய்விருந்து வைக்கிறார்கள். 


மொய் விருந்து வைக்கும் நபர்கள் சேர்ந்து மண்டபம் அல்லது பொதுவெளியில் பந்தல் அமைத்து அவரவர் மொய்யை தனித்தனி பகுதிகளாக பிரித்து வாங்குவார்கள். ஆனால் சாப்பாடு ஒன்றாகவே நடக்கும், வருகிற மொத்த செலவை அவரவர் விகிதப்படி பிரித்து கொள்வார்கள் இதனால்   செலவினம் குறையும். 



Comments

Popular posts from this blog

ஆட்சி கவிழ்ப்புகளின் கதை

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்கும்?

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை