தியேட்டர் முதல் டிஜிட்டல் வரை........

 தியேட்டர் முதல் டிஜிட்டல் வரை........ 


1895ஆம் வருடம், டிசம்பர் 28ஆம் தேதி, அழகான அந்தி மாலை வேளையில் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் கபே என்ற ஹோட்டலின் கீழ்தளத்தில் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூமியேர் மற்றும் லூயி என்ற இரட்டையர்கள், காதுகளுக்கு விருந்து படைத்து கொண்டிருந்த கதைகளை, கண்களுக்கு விருந்து படைக்க, வரலாற்றின் மாபெரும் பாய்ச்சலான முதல் திரைப்படத்தை திரையிட்டனர்.

அப்படத்திற்கு ஒரு பிராங்க் கட்டணம் வசூலிக்கப்பட்டது. 

ஐந்து ஆண்டு கழித்து, 1900 ஆம் ஆண்டில்,

தென்னிந்தியாவின் முதல் தியேட்டர், சென்னை மவுண்ட் ரோட்டில் வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. 


சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர், எடிசன் சினிமாட்டோகிராப் என்ற திரைப்படம் காண்பிக்கப்படும் நிறுவனத்தை ஆரம்பித்து, ஊர் ஊராக சென்று திரைப்படத்தை காண்பித்துக் கொண்டிருந்தார். நிரந்தரத் தியேட்டர்கள் உருவாகாத அந்த காலத்தில், அவரே அதற்கான உபகரணங்களோடு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று படங்களைத் திரையிட்டு காண்பித்துள்ளார்.

1914 ஆம் ஆண்டு சென்னையில் வெங்கையா என்பவரால் கட்டப்பட்ட கெயிட்டி அரங்கம் தான், இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் தியேட்டராகும். இப்படி சினிமா பார்க்கத் தியேட்டருக்கு வருபவர்களுக்கு, கண்களுக்கு மட்டுமின்றி காதுகளுக்கு விருந்து படைக்கும் விதமாக

1927இல் வார்னர் பிரதர்ஸால் ஜான்சிங்கர் என்னும், முதல் பேசும் படம், எடுக்கப்பட்டது. இதில் உரையாடலுடன் பாடல்களும் இடம்பெற்றிருந்தது.

தமிழில் முதல் பேசும்படம், மூன்று ஆண்டுகள் கழித்து 1931 ஆம் ஆண்டு, ஹெச்.எம்.ரெட்டி என்பவர் இயக்கத்தில், காளிதாஸ் வெளியானது. 


ஊமை படத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு, திரையில் வருபவர் பேசுவதையும் கேட்க முடியும் என்றவுடன், தியேட்டர்களுக்கு வரும்

மக்கள் கூட்டம்

அதிகரித்தது. கூடவே, அந்த திரைப்படங்களில் நடித்த கதாநாயகர்களும் கவனம் பெறத் தொடங்கினர். தமிழகத்தில் முதல் சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடிய தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம், சென்னையில் உள்ள Broadway தியேட்டரில் மூன்று தீபாவளிகள் கடந்து ஓடி, சாதனை படைத்தது. திரைப்படங்களுக்கு மட்டுமின்றி கதாநாயகனுக்காகவும் ரசிகர்கள், தியேட்டர்களுக்கு வர ஆரம்பித்தனர். 1930களின் பிற்பகுதியில்,

சந்திரகாந்தா போன்ற

சமூக சீர்திருத்த திரைப்படங்கள் வெளிவர தொடங்கி, மக்களிடையே விவாதமானது. தமிழகத்தில் சினிமா என்பது, பொழுதுபோக்கை கடந்து, அரசியல் களத்தில் உள்ளவர்களின் கவனத்தை பெற தொடங்கியது.

அந்த கால கட்டங்களில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரும் நகரங்களில் மட்டுமின்றி, பல சிறிய நகரங்களிலும் புதிய தியேட்டர்கள் உருவாக ஆரம்பித்தன. பல நகரங்களில் இருந்த செல்வந்தர்கள், தங்களுக்குச் சொந்தமாக தியேட்டர் வைத்துக் கொள்வதை பெருமையாக எண்ணி, புதிய தியேட்டர்களை கட்ட ஆரம்பித்தனர். 


தெருக்கூத்து என்று சொல்லக்கூடிய கூத்து நடத்துபவர்கள், கிராமத்திற்கு சென்று, பத்து, பதினைந்து நாட்கள் அங்கேயே தங்கி,

கொட்டகை போட்டு வள்ளித்திருமணம், பவளக்கொடி, அரிச்சந்திர மயான காண்டம் உள்ளிட்ட பல புராணக் கதைகளை கூத்தாக நடத்தினர். அதுவரை கூத்து நடத்துபவரின் வாழ்க்கையில் எந்தவித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருந்த சினிமா, 60களின் மத்தியில் பல ஊர்களில் டூரிங் டாக்கீஸ் என்று சொல்லக்கூடிய சினிமா கொட்டகைகள் ஏற்படுத்தப்பட்டதும், கூத்து நடத்துபவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

ஒரு பெரிய குளுகுளு மணல் பரப்பில் மக்கள் அமர்ந்துகொண்டும், படுத்துக்கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் படம் பார்ப்பதற்கு சகல வசதிகளுடன் அமைந்திருந்தது இந்த டூரிங் டாக்கீஸ். நகரங்களில் ஓடி முடித்த புதிய படத்தை கிராமங்களில் உள்ள டூரிங் டாக்கீசில் 2வது ரவுண்ட் எடுத்து ஓட்டுவர். இப்படி ஓடும் படத்தை பார்க்க பக்கத்து ஊர்களிலிருந்து எல்லாம், வண்டி கட்டிக்கொண்டு வந்தவர்கள் ஏராளம். இப்படி தியேட்டர் உரிமையாளர்கள், தங்கள் தியேட்டரில் ஓடி முடித்த படத்தை டூரிங் டாக்கீஸ் வைத்திருப்பவர்களுக்கு இரண்டாவது ரவுண்டு விட்டு நன்றாக பணம் பார்த்தனர்.. 


இப்படி சினிமா, தன்னுடைய கஸ்டமர்கள் என்று சொல்லக்கூடிய ரசிகர்களை, பெருமளவில் கிராமங்கள் வரை திரட்டி கொண்டிருந்த இந்த சமயத்தில், அதன் அகத்துக்குள் ஒரு வர்ணஜாலம் நிகழ்ந்தது. அதுவரை வெள்ளை, கருப்பு படங்களாக வந்தது போய், கலர் பிலிம் என்று சொல்லக்கூடிய வண்ண திரைப்படங்கள் வர ஆரம்பித்தன.

1955ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த அலிபாபாவும் நாற்பது  திருடர்களும் படம்தான், தமிழின் முதல் முழு நீள கலர் படம். 


இப்படி திரைப்படம் அகமும், புறமுமாக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த இந்த நேரத்தில், பத்திரிக்கை நடத்தி தங்களது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்த அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், தங்களுக்கான ஆயுதமாக சினிமாவை பயன்படுத்த முடிவெடுத்தன..

திராவிட இயக்கத்தவர்களான சி.என் அண்ணாதுரையும், கருணாநிதியும், சினிமாவில் தங்களது வசனங்கள் மூலம் தங்களது இயக்க கருத்துக்களை பரப்ப ஆரம்பித்தனர். 1952 ஆம் ஆண்டு பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதி வசனம் எழுதி சிவாஜி கணேசன் நீதிமன்றத்தில் பேசிய ஒரு வசன காட்சி, இன்று வரை பிரபலமாக உள்ளது. 


இப்படி மக்கள் வரவேற்புடன் அரசியல், அதிகாரம் என்று அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தது சினிமா. இப்படிப்பட்ட சினிமா துறையில் இருந்து தமிழகத்திற்கு அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா என முதலமைச்சர்கள் வர தொடங்கியவுடன், சினிமாவில் நடிப்பவர்களுக்கும், சினிமா துறையில் வேலை செய்பவர்களுக்கும் மரியாதை உயர ஆரம்பித்தது. குறிப்பாக, எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனவுடன், அவருடன் சினிமாவில் பணியாற்றிய பலர் மந்திரிகளாகவும் எம்எல்ஏ, எம்பிக்கள் ஆகவும் வந்தனர். 


சினிமா தாக்கம் காரணமாக, கிராமத்து இளைஞர்கள் கூட, தமிழ் சினிமாவின் தாய் வீடான கோடம்பாக்கத்தை நோக்கி படையெடுத்தனர். அப்படி வந்தவர்களில் ஒருவரான பாரதிராஜா, அதுவரை ஸ்டூடியோக்களில் செட் போட்டு எடுத்துக்கொண்டு இருந்த  சினிமா கேமராவை கிராமத்துக்கு

எடுத்துச் சென்றார்.

திரைப்படங்கள், வீடியோ கேசட்டுகளில் ஏற்றப்பட்டு,  DVR deck மூலம் சினிமா படங்களை டிவியில் பார்க்கும் அமைப்பு வந்ததும், அதற்கான உரிமங்களை விற்று திரைப்பட தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் பார்த்துக் கொண்டு இருந்தனர். அதேபோல் ஆடியோ கேசட்டுகளில் பாடல்கள் மற்றும் படத்தின் ஒலி சித்திரத்தை பதிவு செய்து, விற்பனை செய்துகொண்டு இருந்தனர். 


இப்படி சினிமாவை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பலர் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருந்த 90களில், தூர்தர்ஷன் மட்டுமின்றி, தனியார் டிவி சேனல்கள் பல முளைக்க ஆரம்பித்தன.

இவை கேபிள் மற்றும் டிஷ் வழியாக மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை புகுந்தது. இப்படி கிராமத்திற்குள் கேபிள் டிவி புகுந்ததும், ஏற்கனவே வீடியோ கேசட் வருகையால் ஆடிப்போயிருந்த டூரிங் டாக்கீஸ் கொட்டைகளை தான் முதலில் காலி செய்தது. 


DVR கேசட்டுகளின் மாற்றாக விசிடிகள் 2000ஆம் காலகட்டத்தில் வந்ததும், விசிடிகளை கையாள்வது எளிதாக இருந்ததால், சினிமா, மாபெரும் சூறாவளியான திருட்டு விசிடிக்குள் சிக்கியது. இந்த திருட்டு விசிடி-களால், சிறு நகரங்களில் உள்ள திரையரங்குகள், கூட்டம் இழந்தன. உள்ளூர் கேபிள் டிவி சேனல்களில், திரைக்கு வந்த புதிய படத்தை சில நாட்களிலும், சேட்டிலைட் சேனல்களில், சில மாதங்களிலும் திரையிடுவதை கண்ட மக்கள், ஏன் திரையரங்கிற்குச் சென்று, காசு கொடுத்து, நேரத்தை விரயம் செய்ய வேண்டும், என்று நினைக்க ஆரம்பித்தனர். கொஞ்சம் பொறுத்தால் வீட்டிலேயே படத்தை பார்த்துவிடலாம் என்ற நிலை வந்த பிறகு, நகரங்களில் இயங்கிய திரையரங்குகளுக்கு மக்கள் செல்வதை முற்றிலும் தவிர்க்க ஆரம்பித்தனர். பல பிரபலமான திரையரங்குகள், திருமண மண்டபங்களாக மாற்றப்பட்டன. 


2000த்தின் பிற்பகுதியில், மாநகரங்களில் பெரிய மால்கள் மற்றும் மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் வந்து, சினிமா ரசிகர்களை மீண்டும் பெரிய திரைக்கு இழுத்தன. இருப்பினும் இப்படி உள்ள தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம், ஸ்நாக்ஸ் விலை எகிறியதால், நடுத்தர வர்க்கத்தினர் நழுவ தொடங்கினர். 

ஒரு காலத்தில், பெரும் நகரங்களுக்கு வேலை நிமித்தமாகவோ, தொழில் நிமித்தமாக செல்லும்போது, பொழுதுபோக்குக்காக தியேட்டர்களுக்கு செல்வார்கள். Google-ளின் செல்ல குழந்தையான

YouTube 2005ஆம் ஆண்டு பிறந்த பிறகு, பொழுதுபோக்க நினைப்பவர்களுக்கு கவலையில்லை என்று ஆனது. அடுத்த பரிணாமமாக, சமூக வலைதளங்களான Facebook, Twitter, Instagram, tik tok என பல வந்த பிறகு, அவரவர் கையில் உள்ள செல்ஃபோன்களிலேயே, தங்களுக்கு பிடித்த காட்சியை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று ஆன பிறகு, பொழுதுபோக்க தியேட்டர் எதற்கு என்றானது.

இதையும் மிஞ்சும் வகையில், சமீப வரவுகளான Amazon prime, redflix, hot star உள்ளிட்ட செயலிகளில், தியேட்டர்களுக்கு வந்த படங்களை, சில நாட்களிலேயே பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். தாங்கள் நினைக்கும் பொழுது, டிவியில் ஃபோனை கனெக்ட் செய்து படத்தை காணலாம் என்ற நிலை வந்த பிறகு, தியேட்டர்கள் எதற்கு என்ற கேள்வி பெரிதாகிவிட்டது. 


கால ஓட்டத்தில், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், நாடக மேடைகள், தியேட்டர்கள் ஆக மாறி, தியேட்டர்கள் டிவிக்களாக மாறின. டிவிகள் தற்போது கையடக்க போன்களாக வந்த பிறகு, சினிமா பார்ப்பதற்கான நேரத்தையும், காலத்தையும் பார்ப்பவரே முடிவு செய்யும் காலமாக பரிணமித்துள்ளது. இந்த யதார்த்தம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு புரியாமல், திரைப்படத்தை,

OTT பிளாட்பார்ம்‌

என்று சொல்லக்கூடிய,

ஆன்லைனில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, வியப்பாகவே உள்ளது. காலமாற்றத்தில், எவ்வளவோ கரைந்து போயிருக்கின்றன; அது போலவே, இந்த தியேட்டர்களும் குறைந்துபோகும். 


- தினேஷ்குமார் ஜெயவேல் -


Comments

Popular posts from this blog

ஆட்சி கவிழ்ப்புகளின் கதை

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்கும்?

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை