ஜம்பு தீவு பிரகடனம்...!

 இந்தியாவில்,

ஆங்கிலேயர்களுக்கு எதிராக  1857ஆம் நடைபெற்ற சிப்பாய் கலகமே முதல் சுதந்திர போராட்டம் என்று கூறப்படும் நிலையில்,  அதற்கு முன்பாகவே தென்தமிழகத்தில் கிளர்ச்சி வெடித்ததற்கான சான்றுகள் உள்ளன. 


1529ல் இருந்து

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள், அதை சுற்றியுள்ள பகுதிகளை 72 பாளையங்களாக பிரித்து ஆளத் தொடங்கினர். இந்த 72  பாளையங்களில் ஒன்று சிவகங்கை. இந்த பாளையத்தை, 1749ஆம் ஆண்டு முதல் முத்து வடுகநாதர் என்பவர் ஆண்டு வந்தார். இவர் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த மறுத்ததால்,   அடிக்கடி போர் மூண்டு‌ வந்தது. ஆங்கிலேயர்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து, முத்து வடுகநாதர், பெரிய படைபலம் ஏதுமின்றி

காளையார் கோவிலுக்குச் சென்றார். இதை அறிந்த ஆங்கிலேய படைகள் இரண்டு தரப்பாக பிரிந்து, காளையார்கோவில் சென்ற முத்து வடுகநாதரையும், சிவகங்கை கோட்டையையும் ஒரே நேரத்தில் தாக்கின. இதில் முத்து வடுகநாதர், பான்சோர் என்ற ஆங்கில தளபதி சுட்டதில் உயிரிழந்தார். 


இதனையடுத்து சிவகங்கை சீமை, ஆங்கிலேயரின் ஆட்சிக்கு கீழ் வந்தது. 1780ல், முத்து வடுகநாதரின் மனைவி வேலுநாச்சியார்,  ஹைதர் அலி உதவியுடன் பெரிய மருது, சின்ன மருது துணையுடன், ஆங்கிலேயரை விரட்டி, மீண்டும் சிவகங்கை சீமையை ஆள தொடங்கினார். 


1793ல், தனது பேத்தி அகால மரணம் அடைந்ததால், கடும் துயரத்திற்கு ஆளான  வேலுநாச்சியார், 1796 டிசம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார். 


தொடர்ந்து சிவகங்கை சீமை, மருது சகோதரர்கள் பாதுகாப்பிலேயே இருந்தது.  இருப்பினும் ஆங்கிலேயர்களுடன் போர் தொடரவே செய்தது.  


இந்தக் காலகட்டத்தில் தான், பலமிக்க ஆங்கிலேய படையை வெல்ல, ஒரு வலுவான கூட்டணி அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த சின்ன மருது, அதற்கான

வேளையில் இறங்கி இருந்தார். 


இந்த சமயத்தில், வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததாக கூறி, 1801 மே 28ஆம் தேதி ஆங்கிலேயர்கள், சிவகங்கை சீமை மீது போர் தொடுத்தனர். 

சின்ன மருதுவை சிறை பிடிக்க,

ஆங்கிலேய படைத்தளபதி கர்னல் அக்னியூ, ஒரு அறிவிக்கையை ஜூன் 12ஆம் தேதி வெளியிட்டார். 


அதில், சிவகங்கை சேர்வை சின்ன மருது, கம்பெனி அரசுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறி உள்ளார். கம்பெனி அரசின் ஆணைகளை மதிக்காமல், பாஞ்சாலங்குறிச்சியின் போராட்டக்காரர்களுக்கு ஆட்களையும், ஆயுதங்களையும் கொடுத்து வருகிறார். 

முறையான வாரிசாக இல்லாமல் சிவகங்கையின் மீது தனது முறையற்ற அதிகாரத்தைச் செலுத்தி வருகிறார் சின்ன மருது. இப்போது சிவகங்கையின் அரியணையை அபகரிக்க, ஆயுதங்கள் எடுத்துப் போராடி வருகிறார்.

இதனால் கம்பெனி அரசு, சின்னமருதுவையும் அவரது ஆதரவாளர்களையும் தண்டிக்க,

கர்னல் அக்னியூவை, ஒரு படையோடு அனுப்பி உள்ளது. மேலும், முறையான வாரிசை சிவகங்கை சீமை அரியணையில் அமர்த்தவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே வாரிசுரிமையைக் கோருபவர்கள் யாராக இருந்தாலும், அதற்கான ஆவணங்களோடு அக்னியூவை அணுகவும். அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படும். கிளர்ச்சியாளர்களுக்கு தகுந்த தண்டனை அளித்த பிறகு, வாரிசுரிமையைப் பற்றித் தீர விசாரித்து, உரிமையுள்ளவர்களுக்கு பட்டம் அளிக்கப்படும்" என்று அந்த அறிவிக்கையில் கூறப்பட்டு இருந்தது. 


இந்த அறிவிக்கைக்கு பதிலடியாக திருச்சியில் சின்ன மருது  மறுப்பு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை, ஜம்புத்வீப பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. 


ஜம்பு என்றால் நாவல் மரம். ஜம்பு தீவு என்றால் நாவல் மரங்கள் நிறைந்த தீவு என்று பொருள்.

இந்தியா ஒரு காலத்தில் வடமொழியில் ஜம்பு த்வீபம் என்றும் தமிழில் நாவலந்தீவு என்றும் அழைக்கப்பட்டது. 


ஜம்புத் தீவு பிரகடனத்தை 1801ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி, சின்ன மருது  திருச்சியில் வெளியிட்டார். திருச்சிக் கோட்டையிலும் ஶ்ரீரங்கம் கோவில் மதில் சுவரிலும் இந்தப் பிரகடனம் ஒட்டப்பட்டது. 


அந்த பிரகடனத்தில்

"அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்து இனத்தினரும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டும். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம் தான் உணவாக உட்கொள்கிறார்கள். 


உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள். இதைப் படிப்பவர்களோ, கேட்பவர்களோ, இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… 


எவனொருவன் இந்த அறிவிப்பை, ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ, அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்” என்று இருந்தது. 


அப்படிப்பட்ட தேசபக்தியும், சமூக ஒற்றுமையும், இனமானமும், அரவணைப்பும், போர்க்குணமும் ஒருங்கே கொண்ட அந்த ஜம்புத்வீப பிரகடனம் வெளியிடப்பட்ட நாள் ஜூன் 16.



ஜம்பு தீவு பிரகடனம்...!

Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு