உலகை ஆளும் குளிர்பானம்
உலகை ஆளும் குளிர்பானம்
உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோய் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா-க்கு மருத்து கண்டுபிடிக்க உலகின் முன்னணி மருத்து நிறுவனங்கள் முதல், உள்ளூரில் நாட்டு வைத்தியம் பார்க்கும் பாட்டி வரை மும்மரமாக இருக்கிறார்கள். இவர்களில் யார் சரியான
மருந்து கண்டுபிடிப்பார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் கொரோனா தொற்று முடிவில், வேறு பல நோய்களுக்கு நம் கையில் மருந்து இருக்கும். இதில் சில மருந்துகள் நமக்கு பிடித்துப்போய், தினமும் உட்கொள்ளும் ஒரு உணவாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மருந்தாவது, பிடித்துப் போவதாவது...?
தலைவலிக்கு மருந்து கண்டுபிடிக்கப் போய் அதுவே ஒரு நூற்றாண்டாக உலகம் முழுவதும் சக்கை போடு போடும் குளிர்பானமாக மாறிய கதை தெரியுமா..?
அமெரிக்காவில் 1800களில் பிற்பகுதியில்
மருத்துவம் படித்தவர்கள், சில காலம் வைத்தியம் பார்த்துவிட்டு, பிறகு வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கினார்கள். சிலருக்கு என்னவோ உள்ளூர இருந்த ஆராய்ச்சி தாகம்... சிலருக்கோ ஏதாவது ஒரு மருந்தை கண்டுபிடித்து ராயல்டி வாங்கிவிட்டால், நமது பரம்பரையே உட்கார்ந்து சாப்பிடும் என்ற பேராசையும் இருந்தது.
1861ஆம் ஆண்டு
அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது
Georgia-வை சேர்ந்த மருத்துவரான John Pemberton நேரடியாக போர்க்களம் புகுந்தார். இவர் வைத்தியம் பார்ப்பதோடு நிற்காமல், வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். போர்க்களம் புகுந்த John Pemberton
நான்கு ஆண்டுகள் நீடித்த போரில் கடைசி தாக்குதலின்போது படுகாயமடைந்தார்.
போரில் அடிபட்டவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க, வலி நிவாரணியாக, பெரும்பாலும் போதை வஸ்துக்களை கொடுப்பது அக்கால வழக்கமாக இருந்தது.
Pemberton-க்கு கொடுக்கப்பட்ட வலி நிவாரணி மார்ஃபின் (Morphine) என்ற போதை வஸ்து. ஒரு கட்டத்தில் போதை வஸ்துக்கு அடிமையான Pemberton, தனது ஆராய்ச்சியை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து கொண்டே இருந்தார்.
தொடர்ந்து மருத்துவ செய்திகளை படித்துக் கொண்டிருந்த Pemberton க்கு ஒரு செய்தி கிளுகிளுப்பூட்டியது. அந்த செய்தியில் ஒரு செடியின் பெயர் இருந்தது அந்த செடியின் பெயர் கோக்கா.
கோக்கா, தென் அமெரிக்காவின் வனப்பகுதியில் அதிகம் கிடைத்த ஒரு தளை. இந்த தளையை தின்றாலோ , கசக்கி சுவாசித்தாலோ மனிதனுக்கு ஒரு சுறுசுறுப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது. இது பலருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.
இந்த செய்தியை கேட்ட Pemberton தன்னுடைய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு கோக்கா கொடுத்தார். மேலும் கோக்காவை நிறைய உட்கொண்டதால் மார்ஃபின் போதை பழக்கத்தில் இருந்து அவரும் விடுபட்டார்.. இது அவருக்கு மேலும் ஆச்சர்யம் கொடுத்தது.
இதையடுத்து கோக்காவைக் கொண்டு தன்னுடைய ஆராய்ச்சியை விரைவுபடுத்தினார். தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தபோது அவருக்கு மற்றொரு வஸ்து கிடைத்தது, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கோலா என்ற கொட்டைகள்.
இந்த கொட்டைகளை அந்த ஊர் பழங்குடியினர் சுறுசுறுப்புக்கும், பசியை தள்ளிப்போடு்வதற்கும், வாயில் போட்டு மெல்லுவார்கள்
என்ற செய்தி Pemberton ஐ மேலும் உற்சாகம் ஊட்டியது.
கோலா கொட்டையில் இருந்த முக்கியமான ரசாயனம் caffeine. இது வேறொன்றுமில்லை; நாம் தினமும் குடிக்கும் காபி, டீயில் இருக்கிறது. அதனால்தான் நாம் காபி, டீ குடித்தவுடன் சுறுசுறுப்பாக உணர முடிகிறது.
Pemberton க்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. கொக்கோவையும், கோலாவையும் ஏன் இணைக்க கூடாது என்று. ஐடியா தோன்றிய கனத்தில் இருந்து, அதற்கான பரிசோதனையில் இறங்கிவிட்டார். பலகட்ட பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு திருப்தி அளிக்கக்கூடிய வகையில் கடைசியில் ஒரு பானம் கிட்டியது. அதற்கு பெயர் french wine coca. கோக்கா இலைகள், கோலா கொட்டைகள், ஒயின் ஆகியவை சேர்ந்த சமாச்சாரம் அந்த பானம்.
பானம் கண்டுபிடித்த கையோடு இந்த பானம் இந்தந்த வியாதிகளை குணப்படுத்தும் என்று விளம்பரம் செய்தார் Pemberton.
இந்த பானம் மருந்தா? மதுவா? என்று அமெரிக்கர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கியது.
மது பழக்கம் வேண்டாம் என்று நினைத்தவர்கள் பானத்தை வாங்குவதற்கு தயங்கினார்கள். இதனையடுத்து அடுத்த கட்ட ஆராய்ச்சியில் Pemberton இறங்கினார். இறுதியாக கோக கோலா என்ற, உலகம் குடிக்கும் பானத்தை Pemberton உருவாக்கினார்.
Pemberton, தான் உருவாக்கிய பானத்தை சோடா கடைகளுக்கு அனுப்பி, இதைப் பயன்படுத்திப் பாருங்கள்; இது தலைவலியை போக்க வல்லது என்று, ஒரு குறிப்பும் அனுப்பினார்.
இதை வாங்கி குடித்த அமெரிக்கர்களுக்கு, இதன் வித்தியாசமான ருசியும், ஜில்லென்ற உணர்வும் மேலும் கிளுகிளுப்பு ஊட்டியது.
இந்தக் சோடா பலருக்கும் பிடித்துப்போய், ஆர்வமாய் வாங்கி குடித்தனர். இதனையடுத்து சோடா கடை உரிமையாளர்கள் இந்த பானத்திற்கான சிரப்பை அதிகமாக கேட்டு வாங்கினார்கள். பானத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அந்தப் பானத்திற்கு ஒரு பெயர் வைக்க தன்னுடைய பிசினஸ் நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர்கள் பல விதமான பெயர்களை சிபாரிசு செய்தபோதும் அந்த பெயர் எதுவும் Pemberton பிடித்ததாக இல்லை. கடைசியாக Pemberton-னின் நிறுவனத்தில் கணக்குப்பிள்ளையாக இருந்த Frank Robinson அசத்தலான ஒரு பெயரைச் சொன்னார் அந்தப் பெயர், அடுத்த நூறு ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கும் படி அமைந்தது. அதுதான் கோக கோலா. இந்த பெயர் சூட்டப்பட்ட வருடம் 1885. இந்த பெயர்
நன்றாக எதுகை மோனையுடன் இருந்ததால் இது அனைவருக்கும் பிடித்துப் போயிற்று. இந்தப் பெயரை அப்படியே எழுதாமல் அதை அழகாக ஒரு டிசைன் செய்ய வேண்டுமென்று Pemberton முடிவு செய்தார். இதையும் Frank Robinson செய்து முடித்தார். அந்த லோகோ தான், தற்போது நாம் பார்க்கும் coca cola logo..
ஒரு பானத்தைக் கண்டுபிடித்து, அதை சிறப்பாக விளம்பரம் செய்து, நாடு முழுக்க கொண்டு சேர்த்துக்கொண்டு இருக்கையில், பலர் தங்களிடம் இருப்பது தான் உண்மையான coca Cola என்று பல சிரப்பு-களை சந்தைப்படுத்தி, குழப்பத்தை உண்டாகினார்கள். காரணம் வேறு யாரும் இல்லை; Pemberton தான்.
தான் கண்டுபிடித்த coca cola பார்முலாவை
பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டாத குறையாக,
பலருக்கு கொடுத்திருந்தார். இதனையடுத்து, ஒரு வழியாக இந்த பிரச்சினையை பேசி தீர்த்து, வரையறுக்கப்பட்ட பங்குகள் கொண்ட Pemberton கெமிக்கல் கம்பெனி என்ற coca cola தயாரிக்கும் நிறுவனமாக மாற்றினார்.
வியாபார சூத்திரங்கள் கைவரப்பெற்ற asa candler என்பவருக்கு கடுமையான தலைவலி... எதையெதையோ சாப்பிட்டும் தலைவலி தீர்ந்தப்பாடு இல்லை. அவருடைய நண்பர் ஒருவர், வேண்டும் என்றால் கோக கோலாவை குடித்து பாருங்களேன் என்று அறிவுறுத்தியுள்ளார். அதுவரை கேள்விப்பட்டிராத கோக கோலாவை asa candler குடித்தார். தலைவலி போயாச்சு... ஆனால் அதற்கு அடுத்து கோக கோலா மீது அவருக்கு ஆர்வம் அதிகரித்தது. பிசினஸ்மேன்களுக்கு பொதுவான ஒரு இலக்கணம் உண்டு.. ஒரு பொருளைப் பார்த்தால் நமக்கு ஏதேனும் லாபம் உண்டா என்று சிந்திக்கும் பழக்கம். அதேபோல் அசா கேண்ட்லர் சிந்தித்தார். அசா கேண்ட்லர் பல வகை மருந்துகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவற்றுடன் ஒப்பிடும்போது கோக கோலா பெரிய மருந்து ஒன்றும் இல்லை.
இருப்பினும் கோக கோலா மீது ஏதோ இனம்புரியாத ஈர்ப்பு அவருக்கு.
கோக கோலா மிகப்பெரிய வெற்றி அடையும்; அதில் தன்னுடைய பங்கு இருக்க வேண்டும் என்று எண்ணி, ஒரு வழியாக 1887ஆம் ஆண்டு அசா கேண்ட்லர், மூன்றில் ஒரு பங்கு உரிமையை வாங்கி
Pemberton-னின் நிறுவனத்தில் பங்குதாரர் ஆனார்.
இருப்பினும் Pemberton, புதிய கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு, புதிய பெயரில் கோகோ கோலாவை தனியாக தயாரிக்க ஆரம்பித்தார். இது அசா கேண்டலர் எரிச்சலை எரிபடுத்தியது, இதனையடுத்து 1888 இறுதியில் கோக கோலா நிறுவனம், ஃபார்முலா என அனைத்தையும்
வேறு யாருக்கும் இனி விற்க கூடாது என்கிற ரீதியில் உங்கள் கையில் உள்ள உரிமை எனக்கே விட்டுவிடுங்கள் என சொல்லி, அனைத்தையும் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார். இதன்மூலம் கோக கோலாவின் மீது
Pembertonக்கு எந்த உரிமையும் இல்லாமலானது. கோக கோலாவை கண்டுபிடித்தவர் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்ற John
Pemberton, கோக கோலா மூலம் எந்த ஒரு வருமானத்தையும் பெற முடியாமல் போனது.
அசா கேண்ட்லர் தனது சகோதரர் ஜான் கேண்ட்லர், கோக கோலா லோகோவை வடிவமைத்த Frank Robinson ஆகியோரை இணைத்து கொண்டு 1892ஆம் ஆண்டு 1000 டாலர் முதலீட்டுடன் the coca cola company ஐ நிறுவினார். இதன்மூலம் coca cola, அடுத்த பாய்ச்சலுக்கு தயாரனது.
அசா கேண்ட்லர் coca colaவை அமெரிக்கா முழுவதும் உள்ள சோடா கடைகளில் விற்கப்படும் பானங்களில் நம்பர் ஒன் என்ற இடத்திற்கு கொண்டு வர, பல்வேறு வியாபாரம் யுக்திகள் வடிவமைத்து செயல்படுத்தி கொண்டு இருந்தார். இந்த காலகட்டத்தில் நீங்கள் கோக கோலாவை குடிக்க வேண்டும் என்றால், அமெரிக்காவில் உள்ள சோடா கடைகளுக்கு தான் செல்ல வேண்டும். பட்டில்களில் அடைத்து விற்கப்படும் வழக்கம் இல்லை.
இதனால்
பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தங்கள் வீட்டிற்கு அல்லது அலுவலகத்திள்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுக்கும் வகையில், கோக கோலா இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தனர். ஆனால்
அசா கேண்ட்லர் இதற்கான முன்னெடுப்பை ஏனோ எடுக்கவில்லை.
இந்த சமயத்தில் Benjamin Thomas, Joseph Whitehead ஆகிய இரண்டு பேர் கோக கோலா தலைமை அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். அதில் கோக கோலாவை பாட்டிலில் அடைத்து விற்கும் யோசனையை கூறினார்கள். அசா கேண்ட்லர் இதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் நேராக சென்று இருவரும் அசா கேண்ட்லரிடம் பல முறை பேசி பார்த்தார்கள், இருப்பினும் இதில் பெரிய லாபம் இருப்பதாக கருதவில்லை. ஒரு வழியாக பேசி அசா கேண்ட்லரை சம்மதிக்க வைத்தனர். அவரோ பாட்டிலில் அடைத்து விற்பதால் தங்களுக்கு எந்த நஷ்டம் இல்லை என்பதை மட்டும் சிந்தித்து சம்மதித்தார்.
மேலும் அவர், தொழில் துறை வரலாற்றில் பெரிய கோட்டை விட்டதாக பார்க்கப்படும் ஒரு இடமும் இதுதான். ஆம், வெறும் ஒரு டாலருக்கு, கோக கோலா இருக்கும் காலம் வரை பாட்டிலில் அடைத்து விற்கும் உரிமைக்கான ஒப்பந்தத்தில் 1899ஆம் ஆண்டு கையெழுத்திட்டார்.
அதுவரை சோடா கடைகளில் விற்கப்பட்டு வந்த கோக கோலா அமோக வெற்றி என்றால்... பாட்டில் அடைக்கப்பட்ட கோக கோலா மெகா வெற்றி.
இப்படி படுவேகமாக கோகோ கோலா வியாபாரம் அமெரிக்கா முழுவதும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சமயத்தில் 1919ஆம் ஆண்டு
அசா கேண்ட்லர் 2 கோடிஏ 50 லட்சம் டாலருக்கு கோக கோலா நிறுவனத்தை Ernest Woodruff உள்ளிட்ட சில முன்னனி தொழில்துறையினருக்கு விற்றார். அந்த சமயத்தில் கோக கோலா நிறுவனம் நல்ல லாபத்தை ஈட்டினாலும் சரியான தலைமை இல்லாமால் அல்லோலகள்ளோலப்பட் கொண்டு இருந்தது. இந்நிலையில் புதிய பங்குதாரர்கள், இளம் ரத்தத்தை பாய்ச்சினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார்கள்.
Ernest Woodruff க்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் Robert Woodruff. Robert, சிறு வயது முதலே தந்தை சொல்லுவதற்கு நேர் எதிராக செயல்பட்டு வந்தார். இதனால் தந்தை மகனுக்கு இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.
இருப்பினும் Robert சொந்தமாக லாரி, டிரக் போன்றவற்றை வாங்கி alter செய்து திறமையாக விற்பனை செய்து வந்தான். இந்த சமயத்தில்
Ernest Woodruff தவிர மற்ற அனைவரும் ஏன்
Robert-யை கோக கோலாவின் தலைமையை ஏற்கவைக்க கூடாது என்று யோசனை தெரிவித்தார்கள்.
Ernest Woodruff கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும், மற்றவர்களில் ஆதரவுடன் Robert Woodruff 1923ஆம் ஆண்டு தலைமையை ஏற்றார். அப்போது அவருக்கு வயது 33. தலைமை பொறுப்பை ஏற்ற Robert Woodruff கோகோ கோலாவின் அடுத்தகட்ட நடவடிக்கையை கவனிக்க ஆரம்பித்தார்.
என்ன செய்தாவது உலகம் முழுவதும் கோக கோலாவை கொண்டு சேர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் இரண்டாம் உலகப்போர் வந்தது. இதுதான் சமயம் என்று அமெரிக்க ராணுவத்தினர் போர் களத்தில் களைப்புறும் போது ஜில்லென்று ஒரு பானம் அருந்த வேண்டும் அல்லவா? அதற்கு கோக கோலா அவர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்தார். இதற்கு பிரதிபலனாக, அமெரிக்க ராணுவம் எந்தெந்த நாடுகளுக்கு சென்றதோ அங்கெல்லாம் கோக கோலா தயாரிப்பதற்கான வேலைகளை செய்து கொடுத்தது. இதன் மூலம், உலகம் முழுவதும் கொக கோலா தன்னுடைய வணிகத்தை விஸ்தரிப்பு செய்தது.
இப்படி இன்று 200 நாடுகளில் குளிர்பான விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் கோக கோலா, ஆரம்பத்தில் தலைவலிக்கா கண்டுபிடிக்கப்பட்ட மருந்து.. அதேபோல் இந்த கொரோனா தடுக்க உருவாகும் ஏதாவது ஒரு மருந்து, நூற்றாண்டுகள் கடந்தும் நிற்கலாம்.
Comments
Post a Comment