மூடநம்பிக்கை சட்டம்

 கேரள மாநிலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற போவதாக சட்ட சீர்திருத்தக் குழுவின் துணைத்தலைவர் சசிதரன் நாயர் கூறியுள்ளார். இந்தியாவில் இதற்கு முன்பு வேறு எந்த மாநிலங்களில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். 


2013 ஆகஸ்ட் 8 தேதி

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், தனது காலை நடைப் பயிற்சிக்காக வெளியே சென்றபோது, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். அவர் பெயர் நரேந்திர தபோல்கர். 


யார் இந்த நரேந்திர தபோல்கர்? ஏன் கொலை செய்யப்பட்டார்? 12 ஆண்டு மருத்துவராக பணியாற்றிய பிறகு, 1989ம் ஆண்டு ‘மகாராஷ்டிரா அந்த்ஷ் ரத்தா நிர்மூலன் சமிதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் மூடநம்பிக்கைகளை எதிர்த்தும், பல போலி சாமியார்களை, பாபாக்களை, மந்திரவாதிகளை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தார். மூடநம்பிக்கைக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று போராடினார். 


அவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 24.8.2013 அன்று மராட்டிய மாநில ஆளுநர் சங்கரநாராயணன் - பேயோட்டுதல், மந்திரவாதிகளின் செயல்கள், தேள், பாம்பு கடிக்கு பாடம் போடுதல், குறளி வித்தை போன்றவற்றை தடை செய்யும், மூடநம்பிக்கை ஒழிப்பு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, 14.12.2013 அன்று மகாராஷ்டிர சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுடன் 18. 12. 2013அன்று சட்டமாக்கப்பட்டது. முதலில், 64 செயல்பாடுகளை மூடநம்பிக்கை என்று பட்டியலிட்டு, அவை படிப்படியாக குறைக்கப்பட்டு, 16 செயல்பாடுகள் தான் இறுதி மசோதாவில் சேர்க்கப்பட்டன. 


கடந்த 2013ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற சித்தராமையா, "மகராஷ்டிராவைப் போல கர்நாடகாவிலும் விரைவில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு மாந்தீரிகம், நரபலி உள்ளிட்டவை ஒழிக்கப்படும்" என தெரிவித்திருந்தார். இந்த மசோதாவிற்கு அம்மாநில பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் 4 ஆண்டுகளாக இந்த மசோதா நிலுவையில் இருந்தது. 2017 கர்நாடக அரசு, மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றியது. 


இப்போது கேரள அரசு,

மூடநம்பிக்கைகளை தடுக்கும் சட்ட மசோதாவை தயாரித்துள்ளது, இதில் பில்லி, சூனியம், மாந்திரீகம் போன்றவற்றை தடை செய்யவும். அதேசமயம் வாஸ்து சாஸ்திரம், ஜோதிட நிபுணர்களின் ஆலோசனை உள்ளிட்டவற்றுக்கு விலக்கு அளிக்கவும் வரைவு மசோதா பரிந்துரைத்துள்ளது. 


பிளாக் மேஜிக் எனப்படும்

பில்லி, சூனியம், மாந்திரீகம் போன்றவை இந்தியாவில் மட்டும் தான் இருக்கின்றனவா?.. ஆப்பிரிக்கா முதல் அமெரிக்கா வரை இதுபோன்ற நம்பிக்கைகள் உலகம் முழுவதும் பரவி உள்ளன. 


மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் உள்ள

வூடு என்னும் மதத்தை பின்பற்றுபவர்கள் இறந்தவர்களை வைத்து பில்லி சூனியம் செய்வது, அமெரிக்காவில் ஓய்ஜா பலகையை வைத்து ஆவி பேசுவது இது போன்ற மூடநம்பிக்கை பழக்கங்கள் இன்னும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


காலங்காலமாக உலகம் முழுக்க பரவி இருக்கிற இது போன்ற செயல்பாடுகளை, சட்டத்தின் மூலம் தடுக்க முடியுமா? மரண தண்டனையே கிடைக்கும் என்று ஆன பிறகும், கொலை குற்றங்களை குறைக்க முடிந்ததா, என்ன? 




Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு