ஜன சங்கம் to பாஜக வரை

 

ஜன சங்கம் to பாஜக  வரை.. 


2019  பொதுத்தேர்தலில் இந்தியாவில்  காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தொடர்ந்து 2வது முறை ஆட்சியை பிடிப்பது இதுவே முதல் முறை அதுவும் தனிப்பெரும்பான்மையுடன்

ஹிந்துத்துவா கட்சியான பாஜக எப்படி கிறித்தவர்கள்  அதிகமுள்ள கோவாவில் ஆட்சி அமைக்க முடிகிறது, முஸ்லிம்கள் அதிகமுள்ள காஷ்மீரில் கணிசமான அளவில் வெற்றி பெற்று ஆட்சியை நிர்ணயிக்க, முடிகிறது? 


1984 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பாஜக பெற்ற எம் பி களின் எண்ணிக்கை 2,

ஆனால் இன்றோ 303 எம்பிகள் 14 மாநிலங்களில் ஆட்சி 10 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என்று உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கட்சியாக மாறி இருக்கிறது. 


பாரதிய ஜனதாவை தெரிந்து கொள்ள வேண்டுமானால்  அதன் முந்தைய வடிவமான பாரதிய ஜன சங்கத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 


1948ல் காந்தி கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் தடைசெய்யப்பட்டது . அப்போது  தங்களுக்காக வெளியிலிருந்து எந்த அரசியல் கட்சியோ, இயக்கமோ ஆதரவு குரல்  கொடுக்கவில்லை என்பதை உணர்ந்த அன்றைய ஆர் எஸ் எஸ்ஸின் தலைவர் குருஜி கோல்வல்கர், தங்களுக்கான அமைப்பை அரசியல் தளத்தில் ஏற்படுத்த வேண்டும்  எண்ணினார்.

இந்த சமயத்தில்  இடைக்கால அரசின் நேரு தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஷ்யாம் பிரசாத் முகர்ஜி,

லியாகத்-நேரு ஒப்பந்தம் காரணமாக,  1950 ஏப்ரல் 6 தேதி நேருவின் அமைச்சரவையிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் எண்ணம் கொண்டிருந்தார். இதனை ஆர் எஸ் எஸ் தலைவர் கோல்வல்கரிடம் பகிர்ந்து கொண்டார். இதற்கு ஆதரவு தெரிவித்த கோல்வல்கர், ஆர் எஸ் எஸில் இருந்து தீனதயாள் உபாத்தியாயா, அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி, நானாஜி தேஷ்முக் ஆகியோரை அனுப்பி வைத்தார். இவர்களை இணைத்து 1951 அக்டோபர் 21 தேதி டில்லியில் தொடகியதுதான் பாரதிய ஜனசங்கம்.  இப்படி சிறிய கட்சியாக தொடங்கப்பட்ட பாரதிய ஜனசங்கம்  1952ல் முதல் பொதுத்தேர்தலில் வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 


1953 ஆம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யக்கோரி அம்மாநிலங்களுக்கு சென்ற ஷ்யாம் பிரசாத் முகர்ஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அங்கு மர்மமான முறையில் இறந்தார். ஆம் மோடி அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான  விதை அன்றே போடப்பட்டது என்பது இப்பொழுது புரியும்.  இதையடுத்து,  கட்சியின் பொறுப்புகள் அனைத்து  தீனதயாள் உபாத்யாயாவிடம் வந்து சேர்ந்தன. அவர், பதினைந்து வருடங்கள் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வளர்த்தார். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இளைஞர்களைக் கொண்டு கட்சியின் கொள்கைகளை செதுக்கினார். வாஜ்பாய், அத்வானி போன்றவர்களுக்கு இவரே வழிகாட்டியாவர்.

1962 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 14 இடங்களைப் பெற்று இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாக மாறியது. சீன போரின் காரணமாக காங்கிரஸ் மீது கொண்டிருந்த நம்பிக்கையை மக்கள் இழக்க தொடங்கிய இருந்தனர், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வளர்ந்த பாரதிய ஜனசங்கம்  1967ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 34 இடங்களைப் பெற்றது. 


பாரதிய ஜன சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த தீனதயாள் உபாத்தியாயா 

1968 பிப்ரவரி 11 தேதி உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோ நோக்கி

ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தவர்

முகல்சராய் ரயில் நிலையத்தின் மர்மமான முறையில் இறந்து

கிடந்தார். இது அக்கட்சியினருக்கு பேரிடியாக அமைந்தது. இப்படி ஜனசங்கம் படிப்படியாக வளர்ந்து கொண்டு இருக்க, மற்றோருபுறம் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை தொட்டிருந்தது. 


3வது குடியரசு தலைவராக பொறுப்பேற்ற ஜாகிர் உசேன்

1969 மே 3ஆம் தேதி  இறந்ததைத் தொடர்ந்து,

அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதை

தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே  கோஷ்டி பூசல் ஆரம்பித்தது, குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட்ட நீலம் சஞ்சீவி ரெட்டி எதிராக அக்கட்சியை சேர்ந்த வி.வி.கிரி சுயேட்சையாகப் போட்டியிட்டார். அக்கட்சியின் தலைவர் நிஜலிங்கப்பா வுக்கும் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே நடைபெற்ற பனிப் போரின் விளைவாக இந்திரா காந்தி, விவி கிரியை ஆதரித்து சுயேட்சையாக வெற்றிபெற வைத்தார். இதனைத்தொடர்ந்து

1969ல் இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிரித்து.  இந்திரா காந்தி தலைமையில் ஒரு அணியும், காமராஜர், நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய் தலைமையில் ஸ்தாபனக் காங்கிரசு என்ற பெயரில் ஒரு அணியாகவும் பிரிந்து, இரண்டு கட்சிகளாயின. 1971-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் தனியாகவும், மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ், பாரதிய ஜனசங்கம், பாரதிய லோக் தள், சம்யுக்தா சோஷலிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் 342 இடங்களை பிடித்து மாபெரும் வெற்றியாக அமைந்தது. காங்கிரசின் பிளவால் தங்களுக்கு சாதகமாக அமையும் என்று நினைத்திருந்த பாரதிய ஜனசங்கத்திற்க்கு தேர்தல் முடிவுகள் பேரிடியாக அமைந்தன. கடந்த தேர்தலில் 35 இடங்களில் வெற்றி பெற்று இருந்த பாரதிய ஜனசங்கம் இந்த தேர்தலில் 22 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. 


இப்படி அபார வெற்றி பெற்றது இருந்த இந்திரா காந்தியை காங்கிரஸ் தலைவர்கள் இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா என்று முழங்கிய  நேரத்தில், இந்திராவுக்கு 1975 ஜூன் 12ஆம் தேதி வந்த தீர்ப்பு பேரிடியாக அமைந்தது .

1971ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி ராஜ் நாராயணன் தொடர்ந்த வழக்கில், இந்த தீர்ப்பை நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா அறிவித்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து,

1975 ஜூன் 25 தேதி இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி  இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி அவசர நிலையை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சோசலிசவாதியான ஜெய பிரகாஷ் நாராயண், 

மொரார்ஜி தேசாய்,  ஜன சங்கத்தின் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 


21 மாதங்கள் அமலில் இருந்த அவசர நிலை தொடர்ந்து, 1977 ஜனவரி 23தேதி  பொதுத் தேர்தலை அறிவித்தார் இந்திரா காந்தி.

இத்தேர்தல் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடைப்பட்ட தேர்தல் என்று முழங்கின எதிர்கட்சிகள். 


அவசர நிலைக்கு பிறகு 

ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திராவை எதிர்க்க ஸ்தாபன காங்கிரசு, பாரதிய ஜனசங்கம், பாரதிய லோக்தளம், சோசலிசக் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கினர்.

இந்த ஜனதா கட்சியின் தலைவராக மொரார்ஜி தேசாயும், துணை தலைவர்களாக சரன் சிங், ஜனசங்கத்தை சேர்ந்த எல் கே அத்வானி மற்றும் சோஷலிஸ்ட் கட்சி சேர்ந்த சுரேந்திர மோகன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


ஜனதா கட்சி 295  இடங்களில் வென்று, மொரர்ஜி தேசாய் பிரதமராக கொண்டு அமைந்த அமைச்சரவையில் ஜன சங்கத்தை சேர்ந்த வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், எல் கே அத்வானி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். பல்வேறு கட்சிகள் சேர்ந்து உருவான ஜனதா கட்சி  எம்பிகளில்

கிட்டத்தட்ட 90 பேர் ஜன சங்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். இந்த அனுபவமே பின்னால் பாஜகவினர் ஆட்சி அமைப்பதற்கான வழியை ஏற்படுத்தியது.



மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் பழைய ஜன சங்க உறுப்பினர்களுக்கும் மற்ற சோசலிஸ்ட் உங்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் உருவாகின. ஜனதா கட்சியில் உறுப்பினராக இருப்பவர்கள் ஆர்எஸ்எஸின் உறுப்பினராக இருக்க கூடாது என்றார்கள் சோஷலிஸ்டுகள். அப்படி சொன்னவுடன் எங்களுக்கு மந்திரிகள் பதவி வேண்டாம் நாங்கள் ஆர்எஸ்எஸின் உறுப்பினராக இருக்கிறோம் என்று ஜன சங்க உறுப்பினர்கள் வெளியே வந்தனர், இப்படி வெளியே வந்த ஜன சங்க உறுப்பினர்கள் 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 தேதி டெல்லியில் உள்ள  கோட்லா திடலில் பழைய ஜனசங்க உறுப்பினர்கள் கூடி புதிதாக ஏற்படுத்திய கட்சி தான் பாரதிய ஜனதா கட்சி. அன்றைய தினமே

கட்சியின் நிறுவன தலைவராக அடல்பிகாரி வாஜ்பாயும் பொதுச்செயலாளராக லால் கிருஷ்ண அத்வானி பொறுப்பேற்றனர். 


அதே ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை நகரில் கூடிய கட்சியின் முதல் மாநாட்டில் கட்சியின் அமைப்பு பற்றிய ஆவணத்தில்  காந்திஜியின் சோசலிச கொள்கைகளும், பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மானுடத்வமும் வழிகாட்டுதலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. 


1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து  பிரதமராக வந்த ராஜீவ் காந்தி, இந்திரா மறைவால்  ஏற்பட்ட அனுதாபத்தை, தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்து, ஆட்சியை கலைத்து தேர்தலுக்கு வழிவகுத்தார். இதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலில் புதிதாக தோன்றிய பாஜக களம் இறங்கியது. இந்திரா காந்தியின் அனுதாப அலையால் பாஜக வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இருப்பினும் தோல்வியை கண்டு துவண்டு விடாமல், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்கள் என வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் தன்னுடைய கிளை பரப்பி கட்சியை வளர்க்க ஆரம்பித்தனர். இந்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் மாணவ அமைப்பான ஏபிவிபி பணியாற்றிய பல்வேறு இளம் செயல்வீரர்களை பாரதிய ஜனதா கட்சிக்கு அதன் தலைவராக இருந்த அத்வானி கொண்டுவந்தார். இன்றைக்கு முன்னணியில் இருக்கும் மோடி, அமித்ஷா, நட்டா உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் இந்த காலகட்டத்தில் வந்தவர்கள்தான். 


தனிப்பெரும்பான்மையுடன் அமைந்த ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி  மக்கள் மத்தியில்

கடும் அதிருப்தியை சம்பாத்திருந்தது.

பஞ்சாப்பில் தொடர்ந்து நடந்துவந்த பிரிவினைப் போராட்டம், அயோத்தி சிக்கல், போபர்ஸ் ஊழல் போன்ற பிரச்சனைகளால் காங்கிரசின் செல்வாக்கு அதலபாதளத்திற்கு சரிந்திருந்தது. போபர்ஸ் தொடர்பாக ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரது அமைச்சரவையில் இருந்து விலகிய வி பி சிங். புதிதாக ஜன மோர்ச்சா என்றொரு கட்சியை தொடங்கினார். பின்னர் 

ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து வி பி சிங்-கை தலைவராக கொண்டு ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தோற்றுவித்தனர். 

இப்படிப் பல்வேறு அரசியல் சடுகுடுவுக்கு  இடையில் 1989 இல்  மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விபி சிங் தலைமையில் தேசிய முன்னணியும், பாஜக, காங்கிரஸ் என்று மூன்று அணிகளாகப் போட்டியிட்டன. இதில்  85 இடங்களை பிடித்த பாஜக தேசிய அளவில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியது. காங்கிரஸ் 197 இடங்கள் பிடித்து ஆட்சியை இழந்திருந்தது. பாஜக வெளியில் இருந்து ஆதரிக்க விபி சிங் பிரதமரானார். இந்த காலகட்டத்தில்

வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில்

நடந்த பல சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக, வெற்றி பெற்று ஆட்சி  அமைத்தும், எதிர்கட்சியாகவும் வலுப்பெற தொடங்கியது.  


1990ல் மாதம் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை தொடங்கினார் எல் கே அத்வானி.  பீகார் மாநிலம் சாமஸ்திபுர் மாவட்டத்தில் ரத யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டு அத்வானி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து விபி சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டது. இதனையடுத்து காங்கிரசின் ஒரு ஆதரவால் இளம் துருக்கியர் சந்திரசேகர் பிரதமரானார். இருப்பினும் இந்த ஆதரவு நீண்ட கால நீடிக்கவில்லை. 1991ல் மே, ஜூன் மாதத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய அளவில் நான்கு முனைப்போட்டி காணப்பட்டது. காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி, ஜனதா தளம், சமாஜ்வாடி ஜனதாக் கட்சி ஆகியவை தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் களத்தில் போட்டியிட்டன.

தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழக வந்த  ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில்

படுகொலை 

செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை சோகத்தை ஏற்படுத்தியதோடு காங்கிரஸ்க்கு அனுதாப அலை நாடு முழுவதும் உருவாக்கியது. பின்னர் தேர்தல் நடந்து முடிவுகள் வெளிவந்தபோது காங்கிரஸ்க்கு 244 இடங்களும், பாஜகவுக்கு 120 இடங்களும் கிடைத்தன. அரசியலில் இருந்து ஏறக்குறைய ஓய்வு பெற்றிருந்த  நரசிம்மராவ் ராஜீவ் காந்தியின் மறைவால் மறுபிரவேசம் எடுக்க வேண்டியதாயிற்று. காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று  தேர்தலின்போது வழிநடத்தி வெற்றி பெற்றவுடன் பிரதமராகவும் பதவி ஏற்றுக்கொண்டார். 


1992 ஆம் ஆண்டு பாஜக, அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கூறி, அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் ரதத்தை பூட்டிக்கொண்டு கிளம்பினர். டிசம்பர் முதல் வாரம் அயோத்திக்குள் ரதம் சென்றது. அப்போது உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்றுக் கொண்டிருதது பாஜக ஆட்சி. இதனால் அயோத்தியில் என்ன நிகழப்போகிறது  என்று நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

டிசம்பர் 6 தேதி  அயோத்தியில் நடந்த கரசேவையின் போது மசூதி இடிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கலவரத்தை உண்டாக்கியது. இதனையடுத்து  நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு பாஜக ஆட்சியில் இருந்த மாநிலங்களில் ஆட்சியை கலைத்தது. இருப்பினும் நாடு முழுவதும் நடைபெற்ற கலவரங்கள், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற குண்டு வெடிப்புகள் பாஜகவிற்கு அரசியல் ஆதாயத்தை பெற்றுத்தர தொடங்கியது. காங்கிரஸ் ஆட்சி ஐந்து ஆண்டுகள் முடிந்து 1996 ஆம் ஆண்டு  பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.162 இடங்களைப் பெற்ற பாஜகவை அன்றைய குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க கூப்பிட்டார்.  பெரும்பான்மையை இல்லை என்றாலும் தற்போது ஆட்சி அமைத்தால், அது பின்னாளில் தனக்கு உதவும் என்று நம்பியது பாஜக. வாஜ்பாய் தலைமையில் ஆட்சியை அமைத்து வெறும் 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. இந்த ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் வாஜ்பாய் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து தேவகவுடா தேசிய முன்னணி சார்பில் பிரதமர் ஆனார். 1996 இல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றிருந்தார். இதே தேர்தலில் பாஜக தனது முதல் கணக்கை தமிழகத்தில் தொடங்கி இருந்தது. இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட்ட பாஜக, பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வேலாயுதம் வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்தில் சென்றிருந்தார். தேசிய அளவில் பல மாநிலக் கட்சிகள் இணைந்து உருவாக்கிய மத்திய அரசு பல்வேறு சச்சரவுகளுக்கு இடையில் நகர்ந்து கொண்டிருந்தது. 


1998 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் சுமார் 13 மாநில கட்சிகளுடன் சேர்ந்து, தேசிய ஜனநாயக  கூட்டணி  என்ற பெயரில் தேர்தலை சந்தித்தது  பாஜக. அந்த தேர்தலில்  182 இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெற்றது, அந்த கூட்டணி 232 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

திடீரென ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு

வெளியில் இருந்து ஆதரவு தருவதாக சொன்னார், இதனையடுத்து குறைந்தபட்சம் செயல் திட்டம் கொண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது.   இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில்

பாஜக, அதிமுக, சிரோமனி அகாலிதளம்,சமதா, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, பிஜூ ஜனதா தளம், பாமக, மதிமுக, லோக் சக்தி உள்ளிட்ட கட்சி இருந்தது.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைத்தது. 1996 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது.

இதனையடுத்து அந்த கூட்டணியில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா,

தமிழகத்தில் நடந்த திமுக ஆட்சியை கலைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு  அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார், இதை கவனித்த அன்றைய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, டெல்லியில் டீ பார்ட்டி ஒன்றை  ஏற்பாடு செய்தார். பல்வேறு அரசியல் கணக்குகளை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட டீ பார்ட்டியில் அன்றைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஜெயலலிதாவை சந்திக்க வைத்தார் சுவாமி. இதன் விளைவாக பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் ஜெயலலிதா.

பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் திடீர் திருப்பமாக நேரெதிர் கொள்கை கொண்ட திமுக பாஜகவை ஆதரித்தது. இருந்தபோதிலும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அன்றைய வாஜ்பாய் அரசு கவிழ்ந்து.

இதற்கிடையில் கார்கிலை பாகிஸ்தான் இராணுவம் ஆக்கிரமித்தது. இதனால் வெகுண்டெழுந்த இந்திய ராணுவம் விஜய் என்ற பெயரில் உடனடியாக தாக்குதல் தொடங்கி வெற்றி பெற்றது. இது அன்றைய காபந்து பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு  மக்களிடம்

நல்ல பெயரை கொண்டு சேர்த்தது. குறிப்பாக அன்றைய திமுக தலைவர் கருணாநிதி போன்றோர் வாஜ்பாயை தவறான இடத்தில் இருக்கும் நல்ல மனிதர் என்று கூறி வாஜ்பாயை பாராட்டினார். 


1999ஆம் ஆண்டு செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நடந்த பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு 182 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 298 இடங்களிலும் வெற்றி பெற்று வாஜ்பாய்  தலைமையிலான அரசு அமைந்தது. இந்த அரசில் திமுக சார்பில் முரசொலி மாறன், டி ஆர் பாலு உள்ளிட்டோர் கேபினட் அமைச்சராகவும்,ஆ ராசா இணை அமைச்சராகவும் பதவி ஏற்றனர்.  இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக 5 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. 


தமிழகத்தில் ஐந்து ஆண்டு கால ஆண்ட திமுக ஆட்சி நிறைவுற்று 2001ல்   சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில்  இரண்டு அணிகள் மோதின. இதில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 21 சட்டமன்ற தொகுதிகள் போட்டியிட்டு மயிலாப்பூர், தளி, மயிலாடுதுறை, காரைக்குடி ஆகிய  4 இடங்களில் வென்றது  பாஜக. இப்படி  பாஜக பல மாநிலங்களில் தன்னுடைய அத்திவாரத்தை போட ஆரம்பித்திருந்தது. 


2001 இல் குஜராத்தில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதை சரிசெய்வது சிரமம் என்று உணர்ந்த,  அன்றைய குஜராத் முதல்வராக இருந்த பாஜகவின் கேசுபாய் பட்டேல்  பதவி விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து குஜராத் முதல்வராக நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்கிற நரேந்திர மோடி பதவியேற்று கொண்டார். அதுவரை எம்பியோ, எம்எல்ஏயோ ஏன் வார்டு கவுன்சிலர் கூட ஆகாத நரேந்திர மோடி நேரடியாக முதல்வர் பதவியில் அமர்ந்தார்.

அதுவரை கட்சியின் திரைமறைவில் இருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் நேரடியாக அரசியல் அதிகாரம் தளத்திற்குள் புகுந்தார். முதல்வரான சில தினங்களிலேயே கோத்ராவில் கரசேவகர்கள் வந்த ரயில் எரிக்கப்பட்டது. அதன்விளைவாக கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை அடக்க சரியான முறையில் முயற்சிக்கவில்லை என்று நரேந்திர மோடி மீது கடும் விமர்சனம்  வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவாவில் கூடிய பாஜக தேசிய செயற்குழு நரேந்திரமோடியை ராஜினாமா செய்யச் சொன்னது. அதற்கு அடுத்து வந்த தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று குஜராத் முதலமைச்சர் ஆனார். 2002 குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த  அணு மற்றும் விண்வெளி விஞ்ஞானி ஏபிஜே அப்துல் கலாம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவித்தார் வாஜ்பாய். இதில் வெற்றி பெற்று நாட்டின் குடியரசுத் தலைவரானார் அப்துல் கலாம். 2003 நவம்பர் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர்,  உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த பாஜக நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தங்க நாற்கரச் சாலை  போன்ற உள்கட்டமைப்பு வசதிகளையும், தகவல் தொழில்நுட்பத்துறையில் கொண்டுவந்த மாற்றத்தையும் சொல்லி இந்தியா ஒளிர்கிறது என்று 2004ல்  பொதுத் தேர்தலை சந்தித்தது பாஜக. தேர்தலில் அதுவரை பாஜக கூட்டணியில் இருந்த திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு சென்றது தேசிய அளவில் இப்படி சில கூட்டணி மாறுதல்களுடன் தேர்தலை சந்தித்தது பாஜக. இந்த முறை  தேர்தலில் பாஜக 136 இடங்களும் காங்கிரஸ் 140 இடங்களும் பெற்றது வெளியில் இருந்து மற்ற கட்சிகள் காங்கிரசை  ஆதரித்ததால்  மன்மோகன்சிங் தலைமையில் 

காங்கிரஸ்

ஆட்சி அமைத்தது. 



2007 இல் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை மரண வியாபாரி என விமர்சித்தார் அன்றைய   காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதன் எதிரொலியாக நாடு முழுவதும், டீ காடை அரசியல் விமர்சகர்கள் யார் இந்த நரேந்திர மோடி என்று கவனிக்க தொடங்கினர். இந்த முறையும் குஜராத்தில் ஆட்சியைப் பிடித்தார் நரேந்திர மோடி. 2009 பொதுத் தேர்தலில் பாஜக அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பொதுத் தேர்தலை சந்தித்தது. ஆனால் காங்கிரஸ் தனித்து 202 இடங்களைப் பெற்றது மீண்டும் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தது. பாஜக உருவாக்கிய தளகர்த்தாக்கலான வாஜ்பாய் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய நிலையில், மற்றோருவரான அத்வானியும் அரசியல் சதுரங்கத்தில் இறங்கு முகத்தை சந்தித்து கொண்டு இறந்த நேரத்தில் பாஜகவை அடுத்து வழிநடத்த  போவது யார்? என அரசியல் தளத்தில் கேள்வி எழ தொடங்கியது. 


அப்போது குஜராத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார் மோடி என்று தேசிய அளவில் பாஜகவினர் கூற தொடங்கினர்.

2012ல் குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது இந்த முறை நீங்கள் தேர்ந்தெடுக்க போவது வருங்கால இந்தியப் பிரதமர் என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இப்போது மீண்டும் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வென்று முதலமைச்சரானார்.

2013 ஜூலை மாதம் கோவாவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பிரச்சாரக் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டார் நரேந்திர மோடி. அதனைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் பீஷ்மர் என்று அழைக்கப்படும் அத்வானி தனது அதிருப்தியை தெரிவித்தார். 2013 செப்டம்பர் 15-ஆம் தேதி பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து,

ஆப் கி பார் மோடி சர்க்கார்  என்ற கோஷத்துடன் 2014 தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியது பாஜக.

பத்து வருட காங்கிரஸ் ஆட்சியை தவறுகள் அடுக்கப்பட்டு டிஜிட்டல் முறை தொடங்கி, திண்ணைப் பிரச்சாரம் வரை அனைத்து வடிவங்களிலும் தன்னுடைய பரப்புரை மேற்கொண்டது பாஜக. 2014 தேர்தல் தேர்தலில் 282 இடங்களை தனிப்பெரும்பான்மையுடன் பெற்றது பாஜக அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 71 தொகுதிகளை பெற்றது.  உத்தரப் பிரதேசத்தில் அதிகமான தொகுதி வெற்றி பெற்றதற்கும் மோடி அம்மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் நிற்க வைக்கப்பட்டதற்கும் மூலகாரணமாக ஒருவர் பார்க்கப்பட்டவர். அவர்தான் மோடியின் நெருங்கிய நண்பரும் அரசியல் சதுரங்கத்தில் சதுர்த்தியமா  விளையாடும்  அமித்ஷா. உத்திரபிரதேசத்தின் வெற்றிக்கு பரிசாகவும், ஆட்சியை திறம்பட வழிநடத்த மோடி உள்ளார். அவரைப் போலவே அவரின் மனசாட்சியாக  கட்சியை வழிநடத்த ஒருவர் தேவை என்பதால் அமித் ஷாவுக்கு பாஜக தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.

அதுவரை தேசிய அரசியலில் நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா என்று காங்கிரஸை தேசிய அரசியலில் வழி நடத்தியவர்களையும், காங்கிரசுக்கு மாற்றாக ஜெயபிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், வாஜ்பாய், அத்வானி போன்ற மாற்று இயக்கத்தை தேசிய அரசியலில் வழிநடத்தியவர்களை பார்த்தவர்களுக்கு அமித் ஷா புதிராக இருந்தார்.

தலைவராக பதவியேற்றதும் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை மாபெரும் பலத்துடன் வெற்றி பெற வைத்தார் அமித்ஷா.

அதுவரை ஹிந்தி பேசும் மாநிலங்களில் வலுவாக இருந்த பாஜகவை மற்ற மாநிலங்களுக்கும் விஸ்தரிப்பு செய்ய திட்டங்களை வகுத்தார். இந்தியாவின் ஈசானியமான வடகிழக்கு மாநிலங்களில் தனது பார்வையை திருப்பினார் அமித்ஷா. 

வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களிலும் உள்ள பல்வேறு இனக்குழுக்கள் காரணமாக அங்கு பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் முரண்பட்ட கொள்கையுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த முரண்பட்ட கொள்கைகளை கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்து 

வடகிழக்கு பிராந்திய அரசியல் முன்னணி அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வந்த பாஜக.

2016 மே மாதத்தில் வடகிழக்கு பிராந்திய அரசியல் முன்னணியை

வடகிழக்கு  ஜனநாயக கூட்டணியாக அமைத்து வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வேரூன்றியது. இதன் அமைப்பாளராக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஹிமந்த பிஸ்வ சர்மா பொறுப்பேற்றார். இதன் பலனாக 

திரிபுராவில் 2018 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் 25 ஆண்டுகளாக அங்கு ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்தது. 


அமித்ஷா தலைவரான பிறகு பாஜக வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி கிழக்கு மற்றும் தென் மாநிலங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கியது.

கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் அக்கட்சிக்கு போதிய உட்கட்டமைப்பு இல்லாததை உணர்ந்த அமித்ஷா அம்மாநில நிர்வாகிகளை முடுக்கிவிட்டு கிராம கிளைகள் வரை கட்சியை வலுப்படுத்தும் வேலையில் இறங்கினார். கம்யூனிஸ்டுகளின் கோட்டையான மேற்குவங்கத்தில் 2011ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுகளை வீழ்த்தி மமதா பானர்ஜி தலைமையிலான

திரிணாமுல் காங்கிரசு ஆட்சியை பிடித்தது. அப்படிப்பட்ட திரிணாமுல் காங்கிரசையும், கம்யூனிஸ்டுகளையும் ஒருசேர எதிர்கொண்டு பாஜக அதனுடைய வளர்ச்சியை ஆரம்பித்தது. அதன் விளைவாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 18 இடங்களைப் பிடித்தது பாஜக. அதேபோல் ஒடிசாவிலும் 8 இடங்களை வென்றது. இப்படி அமித்ஷா தலைவரானதும் பாஜக பெரிய அளவில் இல்லாத மாநிலங்களிலும் அதனுடைய வளர்ச்சியை கொண்டு செல்லப்பட்டது. 


2019 பொதுத்தேர்தலை கணக்கில் கொண்டு பல செயல்திட்டங்களை பாஜக செயல்படுத்தியது. பாஜகவில் இணைய விரும்புபவர்களை மிஸ்டு கால் கொடுத்தால் போதும், கட்சி பிரதிநிதிகளே வீட்டிற்கு வந்து உறுப்பினராக பதிவு செய்து அட்டையை பெற்றுத் தருவார்கள்.10 கோடி தொண்டர்கள் என்ற இலக்கை வைத்து பாஜக அதனுடைய வேலையை ஆரம்பித்து அதை திறம்பட செயல்படுத்தவும் செய்தது.

2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சுத்தமான இந்தியா, அனைவருக்கும் வங்கி கணக்கு என்று பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செய்து அதை மக்களிடம் கொண்டு சென்றது. 2016 இல் பணம் மதிப்பு இழப்பு  செய்ததன் மூலம் மக்களை கடும் துயரத்திற்கு ஆளாக்கியதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தின.

அதேபோல் 2017இல் கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி நடைமுறையாளும்  சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வணிகர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இப்படிப் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் பாராட்டுக்களுக்கும் நடுவில் 2019 பொதுத் தேர்தலில் பாஜக சந்தித்தது. 


2019 பொதுத்தேர்தலில் வேலைகளை எல்லாக் கட்சிகளும் ஆரம்பிக்க தயாராக இருந்தபோது புல்வாமாவில் சென்று கொண்டிருந்த ராணுவ வண்டி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் 34 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று சொல்லக்கூடிய துல்லிய தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டு வெற்றி பெற்றது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இந்திய அளவில் வெகுவாக மதிப்பு உயர்ந்தது. இதனிடையே 2019  தேர்தலில்  பாஜகவை எதிர்த்த

எதிர்க்கட்சிகள் மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணி சேர மறுத்து விட்டது.

அதேசமயம் பாஜகவோ தன்னுடைய பிரச்சாரத்தை நேர்த்தியாக வடிவமைத்து கொண்டு களமிறங்கியது. மோடி தலைமையிலான ஐந்தாண்டு கால ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதது, வெளிப்படைத்தன்மை, எல்லை பாதுகாப்பில் சமரசம் அற்ற தன்மை, பயங்கரவாதத்தை வேரறுப்பது என்று அனல் பறக்கும் பிரச்சாரம் வியூகத்தை வடிவமைத்து களமாடினர். இப்படி எதிர்தரப்பை ஒன்று சேர விடாமல் பார்த்துக்கொண்டது சொந்த தரப்பை வலுப்படுத்தி தேர்தலை எதிர்கொண்டது பாஜக. இந்த தேர்தலில் கடந்த தேர்தலைவிட தனிப்பெரும்பான்மையுடன் அதிகமான இடங்களை பிடித்து மீண்டும் மோடி தலைமையில் 2019ல் ஆட்சி அமைத்தது பாஜக.

Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு