வாரிசு எம்எல்ஏகள்
ஒருவர் ஒரு முறை எம் எல் ஏ தேர்தலில் வெற்றி பெறுவதே குதிரைக் கொம்பாக இருக்கும் நிலையில், தலைமுறை தாண்டியும் தேர்தலில் கலக்கும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறீர்களா? நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 3ம் தலைமுறையாக எம்எல்ஏ-வானவர்கள் கூட இருக்கிறார்கள்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ-வாகி உள்ள உதயநிதி, 3ம் தலைமுறை எம்எல்ஏ ஆவார். இவரின் தந்தை ஸ்டாலின், நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம், 7வது முறையாக எம்எல்ஏவாகி உள்ளார். உதயநிதியின் தாத்தா கருணாநிதி, 13 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்.
திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், 3ம் தலைமுறை எம்எல்ஏ தான். அவரது தந்தை பொய்யாமொழி, 1989 மற்றும் 1996 ஆகிய இரண்டு முறை திருச்சி - II தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தார். மகேஷ் பொய்யாமொழியின் தாத்தா அன்பில் தர்மலிங்கம், 1962 மற்றும் 1980ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், லால்குடி தொகுதியில் இருந்தும், 1971 தேர்தலில், திருச்சி - II தொகுதியிலிருந்தும், எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் சித்தப்பா அன்பில் பெரியசாமி 2001 தேர்தலில் திருச்சி - II தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூட, 3ம் தலைமுறை எம்எல்ஏ ஆவார். இவரது தந்தை பழனிவேல்ராஜன் திமுக சார்பில் 1967ஆம் ஆண்டில் தேனி தொகுதியில் இருந்தும், 1996ல் மதுரை மேற்கு தொகுதியில் இருந்தும், 2006ல் மதுரை மத்திய தொகுதியில் இருந்தும் வெற்றி பெற்று 3முறை எம்எல்ஏவாகி உள்ளார். தியாகராஜனின் தாத்தா பி டி ராஜன், சுதந்திரத்திற்கு முன்பே சென்னை மாகாண முதலமைச்சர் இருந்தவர். 1952ல் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில், கம்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ள கருமாணிக்கமும், 3வது தலைமுறை எம்எல்ஏ ஆவார். இவர் தந்தை கே.ஆர்.ராமசாமி 1989, 1991, 1996, 2001, 2006 தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருவாடானை தொகுதியிலும், 2016ல் காரைக்குடி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கரு.மாணிக்கத்தின் தாத்தா கரியமாணிக்கம் அம்பலம், 1957 சட்டமன்றத் தேர்தலில் திருவாடானைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1962, 1967 தேர்தல்களில் சுதந்திரா கட்சி சார்பிலும், 1977ல் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டு 4 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா, 2ம் தலைமுறை எம்எல்ஏ ஆவார். இருப்பினும் இவர் 3ம் தலைமுறை மக்கள் பிரதிநிதியே. திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன், 1984ல் எம்எல்ஏவாக இருந்தார். திருமகன் ஈவெரா-வின் தாத்தா ஈவிகே சம்பத், 1957 நாடாளுமன்றத் தேர்தலில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, எம்பி ஆக இருந்துள்ளார்.
வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள வெற்றியழகன் 2ம் தலைமுறை எம்எல்ஏ ஆவார். இவரது தாத்தா, பேராசிரியர் அன்பழகன் 8 முறை எம்எல்ஏவாக இருந்தவர்.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் 2ம் தலைமுறை எம்எல்ஏ ஆவார். இவரது தந்தை காதர் பாட்சா என்கிற வெள்ளைச்சாமி, முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து 1971ல்
சுயேட்சையாகவும், 1989ல் திமுக சார்பிலும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 2வது முறையாக எம்எல்ஏ-வாகி உள்ள சி.வி.எம்.பி.எழிலரசன் 2ம் தலைமுறை எம்எல்ஏ ஆவார். திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவராக இருந்த இவரது தாத்தா சி.வி.எம்.அண்ணாமலை 1971ல் காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பழனி தொகுதியில் இருந்து 2வது முறையாக எம்எல்ஏ-வாகி உள்ள ஐ.பி.செந்தில்குமார் 2ஆம் தலைமுறை எம்எல்ஏ ஆவார். இவரின் தந்தை ஐ.பெரியசாமியும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் இருந்து 6ம் முறையாக எம்எல்ஏவாக தேர்வாகி உள்ளார்.
திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 5வது முறையாக எம்எல்ஏ-வாகி உள்ள தங்கம் தென்னரசு, 2ம் தலைமுறை எம்எல்ஏ ஆவார். இவரது அப்பா தங்கப்பாண்டியன், அருப்புக்கோட்டை தொகுதியில் 1989, 1996 தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தவர். இவரின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன், தற்போதைய தென் சென்னை எம்பி.
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 3 முறையாக எம்எல்ஏ-வாகி உள்ள கீதா ஜீவன் கூட, 2ஆம் தலைமுறை எம்எல்ஏ தான். இவரது தந்தை பெரியசாமி, தூத்துக்குடி தொகுதியில் இருந்து திமுக சார்பில் 1989, 1996 தேர்தலில் எம்எல்ஏவாகி உள்ளார்.
மன்னார்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 3வது முறையாக எம்எல்ஏ-வாகி உள்ள TRP ராஜா 2ஆம் தலைமுறை மக்கள் பிரதிநிதி. இவரது தந்தை டி.ஆர்.பாலு 1996, 1998, 1999, 2004 எனத் தொடர்ந்து 4 முறை தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2009, 2019 ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.டி.ராமசந்திரன் 2ம் தலைமை முறை எம்எல்ஏ ஆவார். இவரது தந்தை, தற்போது திருச்சி எம்பியாக உள்ள திருநாவுக்கரசர். திருநாவுக்கரசர், 1977 முதல் தொடர்ந்து 6 முறை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார்.
ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ-வாகி உள்ள மனோஜ் பாண்டியன், 2ஆம் தலைமுறை எம்எல்ஏ ஆவார். இவரது தந்தை P.H.பாண்டியன்
சேரன்மாதேவியில் இருந்து 1977, 1980, 1984ஆம் ஆண்டுகளில் அதிமுக சார்பாகவும், 1989ல் ஜானகி அணி சார்பிலும் எம்எல்ஏவாக இருந்தவர்.
திருவொற்றியூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ளவர் கேபிபி சங்கர். இவரது அண்ணன் கேபிபி சாமி, திருவொற்றியூர் தொகுதியில் 2006, 2016 ஆகிய தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக இருந்தவர்.
தி.நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜெ.கருணாநிதி, எம்எல்ஏவாகி உள்ளார். இவரது அண்ணன் ஜெ. அன்பழகன் 2001ல் தி.நகர் தொகுதியிலும்,
2011, 2016ல் திருவல்லிக்கேணி தொகுதியிலும் எம்எல்ஏவாக இருந்தவர்.
அதற்குள் அவசரப்பட்டால் எப்படி? வரும் காலங்களில் 4ம் 5ம் தலைமுறை எம்எல்ஏக்களும் வருவார்கள். அவர்களின் பட்டியலை அடுத்த முறை பார்ப்போம்.
Comments
Post a Comment