செயின்ட் ஜார்ஜ் கோட்டை
வேகமாக செல்பவர்களை பார்த்து, "ஆமா இவரு கோட்டைக்கு போறாரு; மெதுவா போப்பா" என்று திரைப்படங்கள் முதல் கிராமங்கள் வரை வழக்குமொழி உண்டு. அப்படி, தமிழகத்தில் கோட்டை என்று சொன்னால், அது தலைமைச் செயலகம் செயல்படும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் தான் குறிக்கும்.
தமிழகத்தில், கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக சர்வ வல்லமை பொருந்திய இடம் உண்டு என்றால், அது சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை.
1600-களில் இங்கு வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினர், இந்தியாவின் பல பகுதிகளில் தங்களது வணிகத்தை விஸ்தரித்து இருந்தனர். மசூலிப்பட்டினத்தில்
தங்கள் வணிகம் சரிவர நடைபெறாததால், தெற்கு நோக்கி நகர முடிவு செய்தனர். தென்னகத்தில் தங்களுக்கு ஏற்ற இடத்தை தேடிக் கொண்டிருந்தனர்.
தங்களுக்கு வசதியாக ஒரு இடத்தை கம்பெனி அதிகாரிகள் பார்த்தனர். அந்த இடம்,
சந்திரகிரியில் ஆட்சிபுரிந்த விஜயநகர மன்னர், மூன்றாம் வேங்கடப்பரின் தம்பி அய்யப்பர், பூந்தமல்லியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பகுதியில் இருந்தது. அய்யப்பரின் ஆட்சிப் பகுதி புலிக்கட்டிலிருந்து, அதாவது பழவேற்காடு ஏரியில் இருந்து சாந்தோம் வரை உள்ள கடற்கரைப்பகுதி.
அதில், சாந்தோமுக்கு 5 கிலோ மீட்டர் வடக்கில், மீனவர் வாழும் கிராமத்தைத் தான் ஆங்கிலேயே அதிகாரிகள் தேர்வு செய்தனர். கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த Francis Day, மசூலிப்பட்டினத்தில் இருந்த மேலதிகாரியின் அனுமதி பெற்று, வேங்கடப்பரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 1639ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி சாந்தோமுக்கு 5 கிலோ மீட்டருக்கு வடக்கில், மீனவர் வாழும் அந்த கிராமத்தில் தங்களது வணிக தளத்தை அமைக்க ஒப்பந்தம் போட்டார். இதற்காக கிழந்திய கம்பெனியினர், ஆண்டுக்கு 600 பவுண்ட் வாடகையை வெங்கடப்பரிடம் கொடுக்க வேண்டும்.
இடத்தை வாங்கியாச்சு. சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் பகுதியான துறைமுகத்திற்கு அருகில் நிர்வாகத்தை கவனிக்கவும், அதிகாரிகள் தங்கிக் கொள்ளவும் ஒரு கோட்டை இருந்தால் நல்லது என்று முடிவு எடுத்த ஆங்கிலேய அதிகாரிகள், ஒரு கோட்டை கட்ட ஆரம்பித்தனர்.
கோட்டையின் ஒருபகுதி கட்டி முடிக்கப்பட்டு, 1640 ஏப்ரல் 23ஆம் தேதி திறக்கப்பட்டது. அன்று புனித ஜார்ஜ் நாள் என்பதால், அந்தக் கோட்டைக்கு, புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது. பின்னர் வெகு சீக்கிரமே ஆங்கிலேயர்களின் தலைமையிடமாக இந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை மாறியது.
வேங்கடப்பரிடம் இருந்து Francis Day வாங்கிய மீனவர் வாழ்ந்த கிராமம், வேங்கடப்பரின் தந்தை சென்னப்பர் என்பவர் பெயரால் சென்னப்பட்டினம் என அழைக்கப்பட்டு, சென்னை மாநகரமானது தனி கதை.
ஆங்கிலேயர்களிடம் இருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையை
பிரெஞ்சுக்காரர்கள் 1746ல் போரிட்டு கைப்பற்றினர். பின்னர் 1749ல் Aix-la-Chapelle ஒப்பந்தம் மூலம், ஆங்கிலேயர்கள் மீண்டும் கோட்டையை கைப்பற்றினர்.
இதனையடுத்து கோட்டையை பலப்படுத்த இறங்கிய கோட்டை பொறுப்பாளர்
ராபர்ட் கிளைவ், உடனடியாக கோட்டையைச் சுற்றி அகழி ஏற்படுத்தினார். 20 அடி உயரம் கொண்ட பெரும் சுவர்களையும் கட்டினார்.
கிட்டத்தட்ட 107 ஏக்கர் பரப்பளவு கொண்ட புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், வெல்லஸ்லி இல்லம், கிளைவ் இல்லம், டவுன் ஹால், ஆங்கிலேயப் படைகள் தங்கிய பாரக்ஸ் கட்டடம் ஆகியவை தற்போதும் உள்ளன.
கோட்டையைப் போன்றே, அதில் கம்பீரமாக வானுயரக் காட்சியளிக்கும் கொடி மரமும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. புனித ஜார்ஜ் கோட்டையின் முகப்பில், தேக்கு மரத்தினால் ஆன கொடிக் கம்பத்தில், கிழக்கிந்திய கம்பெனியின் கொடி பறந்துகொண்டிருந்தது. அதில், கவர்னர் யேல் காலத்தில் பிரிட்டிஷ் அரசின் கொடி பறக்கவிடப்பட்டது. கடற்கரையில் தரைதட்டி உடைந்த லாயல் அட்வெஞ்சர் என்ற கப்பலில் இருந்த தேக்கு மரத்தால் ஆன கம்பம் எடுத்துவரப்பட்டு, கோட்டைக் கொத்தளத்தில் நிறுவப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட இந்தக் கொடிக் கம்பம்தான், இந்தியாவிலேயே உயரமானது. இந்தியச் சுதந்திரத்தின்போது, இதில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. தேக்கு மரத்தினால் ஆன இந்தக் கொடிக்கம்பம் பழுதடைந்ததால், 1994-ல், இரும்பு கம்பம் நிறுவப்பட்டது.
தமிழகத்தின் முதல் சட்டமன்றம் 1921ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு Madras Legislative Council என்று பெயர். இந்த சட்டமன்றம், முதல்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில், 1921ஆம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி கூடியது. இந்த சட்டமன்றத்தில், சுதந்திரத்திற்கு முன்பு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில், நீதிக்கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்பராயுலு ரெட்டியார், முதல் முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது முதலமைச்சர் என்று பெயர் கிடையாது சென்னை ராஜதானி நிர்வாகத்தின் தலைவருக்கு முதல் -மந்திரி என்று தான் பெயர்.
முதலமைச்சர் என்ற பெயர் வந்தது ஒரு தனி கதை.
1920 முதல், பிரதம -மந்திரி என்று இருந்த பெயர் 1937 ஏப்ரல் முதல் நாளில் நடைமுறைக்கு வந்த மாகாண சுயாட்சி சட்டப்படி மாகாணம் என்று மாற்றப்பட்ட அரசின் நிர்வாக தலைவருக்கு, பிரதம மந்திரி என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டின் நிர்வாக தலைவருக்கும் பிரதம மந்திரி என்று பெயர், மாகாண நிர்வாகத் தலைவருக்கும் பிரதம மந்திரி என்ற பெயர் நடைமுறையில் இருந்ததால், குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, மாகாண பிரதம மந்திரி என்ற பெயர், பிரிமியர் என்று மாற்றப்பட்டது. 1950 ஜனவரி 26ஆம் தேதி அரசியல் நிர்ணய சபை நிறைவேற்றிய சட்டப்படி மாகாணங்கள், மாநிலங்கள் என்றானது. இதனையடுத்து, மாநில அரசின் நிர்வாக தலைவர் முதலமைச்சர் என்றானது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
Comments
Post a Comment