ஆக்ஸிஜன்

 ஆக்ஸிஜன்... 


இந்தியா மட்டுமின்றி உலகமே இன்று உச்சரிக்கும் பெயர்.

ஆக்ஸிஜன் என்ற வாயு மட்டும் பூமியில் இல்லை என்றால், உயிரினங்கள் உற்பத்தியாகி, பரிணமித்து இருக்குமா என்பது சந்தேகமே. 


அப்படி அதி அத்தியாவசியமான ஆக்ஸிஜனில் 8 எலக்ட்ரான், 8 புரோட்டான், 8 நியூட்ரான் கொண்டுள்ளதால் அவற்றின் அணு 8 ஆகும். ஆக்சிஜன் எப்போதும் தனித்து இல்லாமல் ஆக்சிஜன் மூலக்கூறாக அதாவது O2 வாகவே  உள்ளது. அதுவே நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன். 


ஆக்ஸிஜன், அதிகம் வினைபுரியும் தனிமங்களில் ஒன்று. எடுத்துக்காட்டாக   இரும்பு ஈரப்பதத்துடன்  இருக்கும் போது, காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து, ஆக்சிஜனேற்றம் ஏற்படுகிறது. அதுவே துருப்பிடித்தல் என்று சொல்கிறோம். 


சரி இப்படிப்பட்ட ஆக்ஸிஜன் நமக்கு ஏன் தேவைப்படுகிறது?

வாகனங்களில் பெட்ரோல் எரிந்து இன்ஜினில் ஆற்றல் உருவாக காற்றில் உள்ள ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. அதுபோல நாம் சாப்பிடும் உணவில் உள்ள  குளுக்கோஸ் எரித்து ஆற்றல் பெற ஆக்சிஜன் அவசியம். 


இங்கிலாந்தை சேர்ந்த அறிவியலாளர் Joseph Priestley, ஒரு நாள்

மெர்குரிக் ஆக்சைடு எனும் ரசாயன பவுடரை, ஒரு கண்ணாடிக் குடுவையில் போட்டு சூடாக்கினார். அதிலிருந்து ஒரு வாயு கிளம்பியது. எரியும் மெழுகுவர்த்தி ஒன்றை அந்த குடுவைக்குள் வைத்தார். அது எரியும் நெருப்பை இன்னும் பிரகாசமாய் எரியச் செய்ததால், அது தொடர்பான ஆராய்ச்சியை தீவிரப்படுத்தி,

1772-ல் ஆக்சிஜனை காற்றிலிருந்து முதன் முதலில் பிரித்து கண்டறிந்தார்.


ஆக்ஸி என்றால் அமிலம். Priestley கண்டுபிடித்த வாயுதான் அமிலங்களில் முக்கிய அங்கம் வகிக்கிறது என பிரெஞ்சு அறிவியலாளர் Antoine Lavoisier தவறாகக் கருதி, இந்த வாயுவுக்கு அமிலத்தை உருவாக்கும் என்ற பொருள் தரும் ஆக்சிஜன் என்ற பெயரை 1777-ல் வைத்தார். இந்த பெயரை பல அறிவியலாளர்கள் மாற்ற முயன்றனர். இருப்பினும் அந்த பெயரே இறுதியாக நிலைத்தும் விட்டது. 


ஆக்ஸிஜனுக்கு நம் வழக்கு மொழியில் பிராணவாயு என்று பெயர்.  இப்படி நாம் உயிர் வாழ இன்றியமையாத ஆக்ஸிஜனை அதாவது பிராணவாயுவை  சரியாக சுவாசிக்கும் கலையை நம் நாட்டின் யோகிகளும், சித்தர்களும் கண்டறிந்தனர். இதுவே பிராணாயாமம். 


மருத்துவத்திற்கு 1800களில் இருந்தே   ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுகிறது. மூச்சுத் திணறல், அறுவை சிகிச்சை, heart attack  போன்ற சூழலில் உயிரை காப்பாற்ற  ஆக்சிஜன் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில்

20.9 சதவீதம் அளவுக்கு ஆக்ஸிஜன் நிரம்பியிருக்கிறது. 


பொதுவாக நாம் சுவாசிக்கும் போது 

நமது மூச்சு குழல் வழியாக எல்லா வாயுக்களும் கலந்தே நுரையீரலுக்கு செல்லும். இப்படி உள்ள சென்ற காற்றில் இருந்து ஆக்ஸிஜனை ,

நுரையீரலில் உள்ளே நுண் காற்றுப்பைகளில் உள்ள மெல்லிய நுண் ரத்த நாளங்கள், வலை போல விரிந்து வடிகட்டும். அப்போது காதலியை காதலன் கவருவது போல், ரத்தத்தில் உள்ள (Hemoglobin) ஹீமோகுளோபின், காற்றில் உள்ள ஆக்சிஜனை மட்டும் கவரும். இவ்வாறே காற்றில் உள்ள ஆக்ஸிஜன், நமது ரத்தத்தில் கலந்துவிடும். ஒவ்வொரு முறையும் நாம் சுவாசிக்கும் காற்றில் 20.9 சதவீதம் அளவிற்கு ஆக்ஸிஜன் இருந்தாலும் அவற்றில் நான்கில் ஒரு பங்கு ஆக்ஸிஜனையே 

நுரையீரல் பிரித்து எடுத்து ரத்தத்தில் கலந்துவிடுகிறது. 


பொதுவாக ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 முறை சுவாசிக்கிறான். அதன்மூலம்

சுமார் 550 லிட்டர் ஆக்ஸிஜனை ஒரு நாளைக்கு கிரகித்துக் கொள்கிறான். 


நாம் சில நாட்கள் உணவு, தண்ணீர் இன்றி வாழ்ந்து விடலாம். ஆனால், சில நிமிடங்கள் கூட ஆக்ஸிஜன் இன்றி உயிர் வாழ முடியாது. காதலிக்கும்போது, கடைசி வரை உன்னுடன் இருப்பேன் என்று சொல்லாடல் அனைவரும் சொல்லுவது தான். ஆனால் பிறந்தது முதல் கடைசி வரை ஒரு நொடி கூட பிரியாத ஒரே பந்தம் ஆக்ஸிஜன் மட்டுமே. 


- தினேஷ்குமார் ஜெயவேல் -

Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு