மகாராஷ்டிராவில் பாஜக வளர்ந்த கதை

 மகாராஷ்டிராவில் பாஜக வளர்ந்த கதை

சுதந்திரம் பெற்றதில் இருந்து, பெரும்பாலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த மகாராஷ்டிராவில், 1995ல் காங்கிரஸை வீழ்த்தி சிவசேனா - பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஜூனியர் பார்ட்னர் தான் பாஜக.

காங்கிரஸ் மீண்டும் 1999ல் அரியணை ஏறியது. மோடி அலையின் காரணமாக 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. இதனை தொடர்ந்து 2014 டிசம்பரில் மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தது. மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி என்பது, பாஜகவை விட, அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-க்கு முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் ஆர்எஸ்எஸ் தலைமையகம் உள்ள நாக்பூர், மகாராஷ்டிராவில் தான் உள்ளது.

2014 சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், 25 ஆண்டுகளாமாக இருந்த சிவசேனா, பாஜக கூட்டணி உடைந்தது. அதேபோல் 15 ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டணி அரசை நடத்தி வந்த காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் உடைந்தது. 4 முனை போட்டி உருவானது.

288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில், பாஜக 122 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 42 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.இதனையடுத்து, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சியில் சிவசேனா ஜூனியர் பார்ட்னராக பங்கேற்றது.

ஜூனியர், சீனியர் ஆனதை ஏற்றுக்கொள்ள முடியாத சிவசேனா கூட்டணிக்குள் இருந்த 5 ஆண்டுகளும் புழுங்கி கொண்டே இருந்தது.


மகாராஷ்டிராவில்ஜூனியர் பார்ட்னரான பாஜக, சீனியர் பார்ட்னராக வளர்ந்தது எப்படி..?


90களில் வாஜ்பாய்-யின் வலதுகரம் என்றால் அது பிரமோத் மகாஜன் தான். 

1949 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி தெலுங்கானாவின் மகபூர் நகர் (Mahabubnagar) பகுதியில் வெங்கடேஷ் மகாஜன், பிரபாவதி தம்பதிக்கு 2வது மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்தார். புனேயில் உள்ள ranade institute-ல் journalism படித்தார். 

1970ம் மராத்தி மொழியில் வெளிவரும் தருண் பாரத் (tarun bharat) பத்திரிகையில் துணை ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தார். இந்திரா அறிவித்த எமர்ஜென்சியை எதிர்த்து போராடியதால்,பிரமோத் மகாஜன் சிறை சென்றார். சிறையில் இருந்து வெளிவந்த மகாஜன், பாஜகவில் இணைந்தார். 

மகாஜன் பாஜகவை மகாராஷ்டிராவில் கட்டியெழுப்புவதில் தீவிரமாக பணியாற்றினார். இதனை தொடர்ந்து 1983ல் அகில இந்திய பொதுச்செயலாளர். 1986ல் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவர் என்று அடுத்து, அடுத்து கட்சி மகாஜனுக்கு பல்வேறு பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்து. 

மகாஜனின் திட்டமிடல் மற்றும் கடின உழைப்பை பார்த்த அத்வானி, ராம ரத யாத்திரை ஏற்பாடுகளின் முக்கிய பொறுப்புகளை அவருக்கு வழங்கினார். 

பால் தாக்கரேவுடன் தனக்கு உள்ள நட்பை பயன்படுத்தி, 1995ல் சிவசேனாவுடன் பாஜகவை கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்ததில், பிரமோத் மகாஜன் பங்கு முக்கியமானது. 1996ல் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், 1998ல் பிரதமரின் ஆலோசகராகவும், 1999ல் பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2002 குடியரசு தலைவர் தேர்தலில் APJ அப்துல் கலாமை வேட்பாளராக, பாஜக நிறுத்தியபோது, அவரை சமாஜ்வாடி உள்ளிட்ட பிற கட்சியினர் ஆதரிக்க வைத்ததில் மகாஜன் பங்கு முக்கியமானது.

பல்வேறு தேர்தலில் பொறுப்பாளராகவும், வியூக வகுப்பாளராகவும் இருந்த பிரமோத் மகாஜன்; 2003ல் நடந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் 4 மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம் என்று கூறி தீவிரமாக களப் பணியாற்றினார்.

இந்த தேர்தலில் டெல்லி தவிர மற்ற 3 மாநிலங்களிலும், பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து, 2004 செப்டம்பர் மாதம் நடத்த வேண்டிய நாடாளுமன்ற தேர்தலை, முன் கூட்டியே நடத்ததலாம் என்று மகாஜன் கூறிய யோசனையை, அன்றைய பாஜக தலைமை ஏற்று, ஏப்ரல், மே மாதங்களில் தேர்தலை நடத்தியது. இந்த தேர்தலுக்கு வியூக வகுப்பாளராக பிரமோத் மகாஜனை பாஜக நியமித்தது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது,

"இந்தியா ஒளிர்கிறது" என்ற கோஷத்துடன், தேர்தல் பிரச்சாரத்தை மகாஜன் முன்னெடுத்தார். ஆனால் தேேர்தல் முடிவுகளோ பாஜகவுக்கு தோல்வியை தந்தது. இந்த தோல்விக்குகான பொறுப்பையும் வெளிப்படையாகபிரமோத் மகாஜன் ஏற்கொண்டார். வெற்றியோ, தோல்வியோ எதுவும் தம்மை பாதிக்காமல், கட்சி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுவதில், எப்போதும் கவனமாக இருந்தார்.

இன்று பாஜக மகாராஷ்டிராவில் தனி பெரும் கட்சியாக வளர்ந்து இருக்கலாம் இதற்காக கடும் உழைப்பை செய்த முன்னோடிகளில் ஒருவர் பிரமோத் மகாஜன்.


பிரமோத் மகாஜன் பாஜகவை தேசிய அளவில் வளர்க்க பாடுபட்ட அதே காலகட்டத்தில், மகாராஷ்டிராவில் கிராமங்கள் தோறும் பாஜகவை வேர் பரப்பி வளர்த்த பெருமை; அவரது நண்பரும், மைத்துனருமான கோபிநாத் முண்டேவை சாரும்.


மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் பார்லி நகரத்தில் 1949 டிசம்பர் 12ம் தேதி 

பாண்டுரங் முண்டே (Pandurangrao Munde  ), லிம்பாபாய் (Limbabai)

 தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் கோபிநாத் முண்டே. கல்லூரி படிக்கும் போது மாணவர் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அம்பேஜோகையில்

(Ambejogai) உள்ள சுவாமி ராமானந்தா கல்லூரியில் வணிகவியல் படிக்கும் போது, முண்டே-வுக்கு ஆர்எஸ்எஸ்வுடன் சேர்ந்து, பிரமோத் மகாஜனும் அறிமுகமானார். இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்படவே அது நட்பு, அரசியல் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிணைப்பை ஏற்படுத்தியது.


விவசாய குடும்ப பிண்ணனியை கொண்ட முண்டே, தன்னை எப்போதும் விவசாயியாக காட்டிக்கொண்டார். மேலும் மகாராஷ்டிராவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவராக தன்னை வடிவமைத்து கொண்டார் முண்டே. இது மகாராஷ்டிராவில் கிராமங்கள் வரை பாஜகவின் வேர் வளர உதவியது.


மகாராஷ்டிரா அரசியலில் சாணக்யர் என்று அழைக்கப்படும் சரத்பவாருடன் அரசியல் யுத்தம் புரிவதில், வல்லவராக கோபிநாத் முண்டே இருந்தார். அனல் பறக்கும் பேச்சால், பெரும் பொதுக்கூட்டங்களை கூட்ட வல்லவர் கோபிநாத் முண்டே.


1980 முதல் 2009 வரை தொடர்ந்து MLA -வாக இருந்தார். எதிர்கட்சி தலைவர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார். 2009ல் எம்பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அரசியலுக்குள் சென்றார். 2014க்கு நாடாளுமன்ற தேர்தலில் 48 தொகுதிகளில் 41 தொகுதிகளை பாஜக தலைமையிலான கூட்டணி வென்றது. இந்த தேர்தலில் மோடி அலையை கோபிநாத் முண்டே சரியாக பயன்படுத்தி கொண்டார். மோடி அமைச்சரவையில் 

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரா பதவியேற்ற கோபிநாத் முண்டே ஒரு வாரத்திற்குள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 


தேவேந்திர பட்னாவிஸ் 


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 1970 ஜூலை 22ல் Gangadhar Fadnavis - Sarita Fadnavis தம்பதிக்கு மகனாகப் தேவேந்திர பட்னாவிஸ் பிறந்தார். பட்னாவிஸின் அப்பா கங்காதர் ஜன சங்கத்தின் மகாராஷ்டிரா 

மேலவை உறுப்பினராக பணியாற்றியவர்.


எமர்ஜென்சியின் போது, ஜனசங்க உறுப்பினரான பட்னாவிஸின் தந்தை கங்காதர், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.  

அப்போது பட்னாவிஸ் தனது தந்தையை சிறையில் அடைத்ததால் பிரதமர் 

இந்திரா பெயருள்ள கான்வென்ட்டிர்க்கு செல்ல மறுத்தார், இதனையடுத்து அவர் சரஸ்வதி வித்யாலயா பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இப்படி சிறுவயதிலேயே பட்னாவிஸின் வாழ்வில் அரசியல் காற்று வீசியது. 


சிறு வயது முதலே ஆர்எஸ்எஸ்-யில் இணைந்து தீவிரமாக செயற்பட்டார். பின்னர் RSS-ன் மாணவர் அமைப்பான ABVP எனும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இணைந்து பணியாற்றினார்.


 22 வயதிலேயே கவுன்சிலரான தேவேந்திர பட்னாவிஸ், 1997ல் தனது 27வது வயதில் நாக்பூர் மாநகராட்சி மேயராக உயர்ந்தார்.  

1999ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நாக்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு MLA-வாக 

வெற்றி பெற்றார்.

மக்கள் மன்றத்தில் வளர்ந்து வந்த அதே நேரத்தில், கட்சிக்குள் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தார்.

 1989ல் வார்டு தலைவர், 1992ல் நாக்பூர் நகர தலைவர், 1994ல் மாநில பாஜக இளைஞர் அணி துணை தலைவர், 2001ல் தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர், 2010ல் மாநில பாஜக பொதுச்செயலாளர் என பல பொறுப்புகளை கட்சி வழங்கியது. அதில் திறம்பட பணியாற்றிய பட்னாவிஸ்-க்கு

 2013ல் மகாராஷ்டிரா மாநில தலைவர் பதவி தேடி வந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மொத்தமுள்ள 48 இடங்களில் 41 இடங்களில் வெற்றி பெற்றது. 


நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின், நடந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிவ சேனா பாஜக இடையேயுள்ள கூட்டணி முறிந்து இரண்டு கட்சிகளும் தனியாக போட்டியிட்டன.


இந்த தேர்தலில்,

288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக 122 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா 63 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான 144 இடங்களை எந்த கட்சியும் பெறாத நிலையில், சிவசேனா ஆதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சியை அமைத்தது. இந்த ஆட்சியின் முதல்வராக மிக இளையவரான தேவேந்திர பட்னாவிஸை பாஜக தலைமை அறிவித்தது.


 பெரிய அளவில் ஊழல் புகாரோ, சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் 

 ஆட்சி நடத்தி கொண்டு இருந்தார் பட்னாவிஸ்.

மோடி தாரக மந்திரமான

"sabka saath, sabka vikas" தமிழில் சொன்னால் "அனைவருக்குமான வளர்ச்சி", இதை

பட்னாவிஸ் தழுவிக்கொண்டார்.



இதனால் முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் வென்ற இடங்களை, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக கூட்டணி வென்றது.


2019 நவம்பரில் 288 இடங்கள் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சிவசேனாவுடன் சேர்ந்து தேவேந்திர பட்னாவிஸை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து களமிறங்கியது. அதேபோல் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து களம் கண்டது. இந்த தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி 161 இடங்களை பிடித்தது. தனியாக பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் பிடித்து இருந்தது. திடீர் திருப்பமாக, சிவசேனா முதலமைச்சர் பதவி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து. இதனால் அம்மாநில அரசியலில் குழப்பங்கள் ஏற்பட்டது. 98 இடங்களை 

பெற்றிருந்த காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, ஆட்டத்தை ஆரம்பித்தது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து  மகா விகாஸ் என்ற பெயரில் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் தலைமையில் ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்தார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். திடீர் திருப்பமாக மறுநாள் அதிகாலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் சரத் பவாரின் உறவினருமான அஜித் பவார் துணை முதலமைச்சராகவும், பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்களை திரட்ட முடியாததால், மூன்றே நாள்களில் இருவரும் பதவியை ராஜினாமா செய்தனா். 

 இப்படி அரசியல் நாடகங்கள் அரங்கேற்றி, இறுதியில் மகா விகாஸ் கூட்டணி சார்பில் 2019 நவம்பர் 28ஆம் தேதி சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய அஜித் பவார் மீண்டும் டிசம்பர் 28ஆம் தேதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்று அரசியல் அரங்கில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.


சரத்பவாரின் இந்த ஆட்டம்

அரசியல் இளையவரான தேவேந்திர பட்னாவிஸ்க்கு ஷாக் கொடுத்தது. 


அரசியல் ஆட்டத்தை எப்படி ஆட வேண்டும் என்று, பட்னாவிஸ்-க்கு 2022 கோவா சட்டமன்ற தேர்தலில்

பாஜக தேசிய தலைமை கற்றுக்கொடுத்தது.


கோவா சட்டமன்ற தேர்தலுக்கு பொறுப்பாளராக, பட்னாவிஸை 2021 செப்டம்பர் மாதம் பாஜக தலைமை நியமித்தது.


கோவாவில் 10 ஆண்டுகள் தொடர்ந்து பாஜக ஆட்சி இருப்பதால், ஆட்சி மீதான இயற்கையாக எழும் anti incumbency மற்றும் மனோகர் பாரிக்கர் இல்லாதது ஆகியவற்றை மீறி பாஜகவை வெல்ல வைக்கவேண்டும் என்பதே, பாஜக தேசிய தலைமை பட்னாவிஸ்க்கு கொடுத்த டாஸ்க்.


கோவா-க்கு சென்ற பட்னாவிஸ் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூடாரத்தில், அதிருப்தியாளர்கள் மற்றும் அவர்களுக்கு மக்களிடத்தில் உள்ள செல்வாக்கு உள்ளிட்ட அனைத்து தகவலையும் திரட்டினார்.


இதில் முதல் விக்கெட் கோவா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான ரவி நாயக். 2021 டிசம்பரில் 

 பட்னாவிஸ் முன்னிலையில் 

ரவி நாயக் பாஜகவில் இணைந்தார். 


பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு கோவா சென்ற தேவேந்திர பட்னாவிஸ் பாஜக தலைவர்களை சந்திப்பதற்கு முன்பாக காங்கிரஸின் தனிப்பெரும் தலைவரான

பிரதாப் சிங் ரானேவை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்தார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அப்போது சொல்லப்பட்டது.

அதில் பல்வேறு அரசியல் கணக்கு அடங்கி இருந்தது பிறகுதான் தெரிந்தது. வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் 

 அறிவித்தபோது 12 முறை எம்எல்ஏ-வாக இருந்த

பிரதாப் சிங் ரானே-வை அறிவிக்காதது, கோவா காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 


தொண்டர்களை முடுக்கி விட்டு களப்பணியை தீவிரப்படுத்தினார் பட்னாவிஸ்.

இதன் பலன்கள் 

 தேர்தல் முடிவுகள் வெளியான போது தெரிந்தது. 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை பாஜக கைப்பற்றி இருந்தது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜக 7 இடங்களை கூடுதலாக பிடித்தது.

இதன்மூலம் தேர்தல் களத்தில் தான் சாணக்கியன் என்பதை டெல்லி தலைமைக்கு நிரூபித்தார் தேவேந்திர பட்னாவிஸ். 


கோவாவை தொடர்ந்து 

மகாராஷ்டிரா வந்த பட்னாவிஸ், 6 இடங்களுக்கு நடந்த ராஜ்ய சபா தேர்தலில் 3 இடங்களில் பாஜகவை வெற்றி பெற வைத்தார்.

பாஜக வேட்பாளர்

தனஞ்சே மகாதிக்-கு எதிர்பாராதவிதமாக 10 வாக்குகள் அதிகமாகக் கிடைத்தன.

இந்த முடிவு சிவசேனா கூட்டணிக்குப் பெரிய பின்னடைவானது. அடுத்து 10 சட்டமன்ற மேலவை இடங்களுக்கு நடந்த தேர்தலில் 

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் தலா 2 வேட்பாளர்கள் என மொத்தம் 6 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டன. பாஜக சார்பில் 5 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டன. இதன்மூலம் 10 இடங்களுக்கு மொத்தம் 11 பேர் போட்டியிட்டதால் ஆட்டம் பரபரப்பானது. இறுதியில் பாஜக வேட்பாளர் 5 பேரும் வெற்றி பெற்றனர்.


இதனையடுத்து மகாராஷ்டிராவில் அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்க டெல்லி தலைமை பட்னாவிஸ்க்கு க்ரீன் சிக்னல் கொடுத்தது.

  ஆளும் கூட்டணிக்குள் எப்போது குழப்பம் வரும் என்று காத்திருந்த பாஜகவிற்கு துருப்பு கிடைத்தது.


 சிவசேனாவின் தளபதிகளில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே ஆட்டத்தை ஆரம்பிக்க, அவருக்கு பின்னால் இருந்து வியூகங்களை வகுக்க ஆரம்பித்தார் பட்னாவிஸ்.

கடந்த முறை நழுவவிட்டதை போல் இம்முறை நழுவ விட கூடாது என்று பட்னாவிஸ் உறுதியாக இருந்தார்.


ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் 21ம் தேதி‌, 21 எம்எல்ஏக்களுடன் குஜராத்தின் சூரத் நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியதை அடுத்து, மகாராஷ்டிரா அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் ஏக்நாத் ஷிண்டேவை 39 எம்எல்ஏக்கள் ஆதரித்தனர். இதனால் பெரும்பான்மையை இழந்ததால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடந்த ஜூன் 29-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து ஜூன் 30-ம் தேதி புதிய அரசை அமைத்தன. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.  



இப்படி 

அரசியல் ஆட்டத்தில் ஜூனியர் பார்ட்னராக இருந்து சீனியர் பார்ட்னராக வளர்ந்தது பாஜக.



Comments

Popular posts from this blog

கச்சத்தீவு

மாயாவதி ஆட்சிக்கு வந்த கதை

தமிழகத்தில் சாராய வரலாறு